Published:Updated:

`நீ மாற்றுத் திறனாளியல்ல; சமூகத்தை மாற்றும் திறனாளி!' - அப்துல்கலாம் பாராட்டிய கோவை `ஜக்கு'

ஜக்கு
ஜக்கு

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய மந்திரக்காரன். பாதிக்கப்பட்டிருந்த தனது உடலை பொருட்படுத்தாமல், இந்தச் சமூகத்துக்கு வைத்தியம் பார்த்துச் சென்றுள்ளார் ஜக்கு.

உடலும், மனமும் வலுவாக இருப்பவர்களே, வாழ்க்கையைக் கடக்கச் சிரமப்படும் சமூகத்தில், முடக்கு வாதத்தால் முடக்கப்பட்ட உடலை கேடயமாக மாற்றி, சக்கர நாற்காலியில் சுழன்று கொண்டே சமூகத்தை மாற்றிய திறனாளிதான் கோவையைச் சேர்ந்த ஜக்கு என்கின்ற ஜகதீஷ் (28). வெங்கட்ரமணன் கிரிஜா தம்பதியினருக்கு 1991-ம் ஆண்டு ஓர் அழகான குழந்தை பிறந்தது.

ஜக்கு
ஜக்கு

பிறந்த சில மாதங்களிலேயே, அந்தக் குழந்தையை முடக்குவாதம் தாக்கியது. ஓரிடத்தில், ஒரு மணி நேரம் கூட தொடர்ந்து அமர முடியாது. உடலில் விரல்கள் மட்டுமே அசையும், 10-ம் வகுப்பு வரை மட்டுமே கல்வியைத் தொடர முடிந்தது.

70 கி.மீ தூரம் பயணித்து உதவி செய்த சிவகங்கை கலெக்டர்! -ஆனந்த கண்ணீர்விட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி

ஆனால், ஜக்குவின் அறிவாற்றல், மென்பொருள், இலக்கியம், போராட்டம், தன்னம்பிக்கை சொற்பொழிவு, ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம், குழந்தைகள் மேம்பாடு என்று பல்வேறு தளங்களில் பயணித்தவர். வடிவமைப்பாளர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என்று பல்வேறு பட்டங்களுக்குச் சொந்தக்காரர்.

ஜக்கு
ஜக்கு

தீவிர வாசிப்பு பழக்கத்தைக் கொண்ட ஜக்கு, கிராமங்களில் நூலகங்களை ஆரம்பித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்குவது, முன்னேற்றத்துக்கான உதவிகளைச் செய்வது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி அளிப்பது, அவர்களுக்கு கருவிகள் பலவற்றையும் வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டவர். மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல, கல்லூரி மாணவர்களுக்கும் தனது பேச்சின் வழியே தன்னம்பிக்கை ஊட்டுவதில் ஜக்கு கில்லியாக விளங்கினார்.

கண் தானம், உடல் உறுப்பு தானம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு செய்வதோடு, தன்னுடைய கண், உடல் உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்துள்ளார். இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் , ஜல்லிக்கட்டுப் போராட்டம், சென்னை வெள்ள நிவாரண நிதி திரட்டுவது போன்ற பல சமூகப் பிரச்னைகளுக்கு ஜக்குவின் குரல் ஓங்கி ஒலித்தது.

ஜக்கு
ஜக்கு

தமிழ் மீது கொண்ட பெருங்காதலால், நள்ளிரவிலும் வெளிநாட்டுவாழ் நண்பர்களுக்கு ஆன்லைன் மூலம் தமிழ் கற்றுக் கொடுத்தவர்.

வலியும், வேதனையும் ஆக்கிரமித்த வாழ்க்கையில், புன்னகை மறையாத முகத்துடன் இருக்கும் ஜக்குவைக் கவனித்துக் கொள்வற்காக, அவரது தந்தை வெங்கட்ரமணன் தனது தொழிலை விட்டுவிட்டு முழுநேரமும் ஜக்குவுடனே இருந்தார். குடும்ப வருமானத்துக்காக, ஜக்குவின் தாய் கிரிஜா இந்துஸ்தான் நிறுவனத்தில் அக்கவுன்டன்ட் வேலை செய்துவந்தார். கோவை அம்ருத் சிறப்புப் பள்ளியில் படித்த ஜகதீஷ், கம்ப்யூட்டர் அல்லாத பிற துறைகளிலும் தனது அறிவை தன்னுடைய சொந்த முயற்சியில் வளர்த்துக் கொண்டார்.

ஜக்கு
ஜக்கு

எங்காவது செல்ல வேண்டுமென்றால், சுப்புலட்சுமி பாட்டி துணையோடு விசேஷமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் போய் வருவார். பெற்றோருக்கு பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, ஒரு தனியார் நிறுவனத்துக்கு இணைய தள வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து வந்தார். பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் லோகோவை வடிவமைத்துள்ளார்.

`கிறுக்கன் ஜக்கு' என்ற பிளாகில் தனது எண்ணங்களை எழுத்துகள் மூலம் தீர்க்கமாகச் சொல்லி வந்தார். வீடியோ வடிவமைத்தல், நிகழ்ச்சி தொகுத்துவழங்குதல், தெருக்கூத்து, இயற்கை வளங்கள் பாதுகாப்பு பணிகள், குளங்களை மீட்டெடுப்பது, மரம் நடுதல் போன்ற சூழலைப் பாதுகாக்கும் பணிகளையும் செய்து வந்தார்.

ஜக்கு
ஜக்கு

தன் கஷ்டத்தை, யாரும் கஷ்டமாகப் பார்க்கக் கூடாது என்பதற்காக, எப்போதும் சிரித்துக்கொண்டே சந்தோசத்தை வெளிப்படுத்தும் Mr.Cool. காதல், இலக்கியம், சினிமா, அரசியல் குறித்து ஆழமான புரிதல். சமரசம் செய்து கொள்ளாமல், தனது கருத்துகளை வெளிப்படுத்தும் தெளிந்த விமர்சகர். குழந்தைகளுக்குப்பிரியக்காரர்.

உடலால் முடக்கப்பட்டாலும், உள்ளத்தால் வெகுண்டெழுந்து சமூகத்துக்காகக் களப்பணியாற்றினார். சில தினங்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் பலரும் ஜக்குவுக்கு ஆறுதல் சொல்லி, அவர் குணமடைய பிரார்த்தனை செய்து வந்தனர்.

கலாமுடன் ஜக்கு
கலாமுடன் ஜக்கு

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி ஜக்குவின் உடலிலிருந்து உயிர் பிரிந்துவிட்டது. சமூகத்துக்காக சுழன்று வந்த சக்கர நாற்காலி சுழல்வதை நிறுத்திக் கொண்டது. ஒரு முறை ஜக்குவைப் பார்த்த அப்துல் கலாம், `நீ மாற்றுத் திறனாளியல்ல; சமூகத்தை மாற்றும் திறனாளி’ என்று வாழ்த்திச் சென்றார்.

ஆம், ஜக்கு சமூகத்தை மாற்றிய திறனாளிதான். தடைக்கற்களை, படிக்கற்களாக மாற்றிய மந்திரக்காரன். பாதிக்கப்பட்டிருந்த தனது உடலை பொருட்படுத்தாமல், இந்தச் சமூகத்துக்கு வைத்தியம் பார்த்துச் சென்றுள்ளார் ஜக்கு.

மருத்துவமனையில் ஜக்கு
மருத்துவமனையில் ஜக்கு

ஜக்கு கடைசியாக தனது முகநூல் பக்கத்தில் இப்படி எழுதியிருந்தார். ``நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களை எவரேனும் நினைக்கும்போது இந்த வாழ்வின் மீது பெரும் நம்பிக்கையும் பேரன்புதனையும் உணரச் செய்தல்”.

அடுத்த கட்டுரைக்கு