கோவை: இரவில் நோட்டீஸ்... பகலில் தகராறு... என்ன நடக்கிறது தொண்டாமுத்தூர் தொகுதியில்?

தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினர் தாக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், தி.மு.க-வில் சுற்றுசூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியும் போட்டியிடுவதால் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்துகொண்டிருக்கிறது. வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சேனாபதி அடுக்கிக்கொண்டிருந்த நிலையில், தனது வாரிசுகளை பிரசாரத்தில் இறக்கினார் வேலுமணி.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பரப்புரை முடிந்தது. அன்றைய தினம், கரும்புக்கடைப் பகுதியில் அ.தி.மு.க., தி.மு.க-வினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பரப்புரை முடிந்தும் தொண்டாமுத்தூர் தொகுதியில் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லை.
ஏற்கெனவே, அ.தி.மு.க., தி.மு.க இரண்டு கட்சிகளும் பணப்பட்டுவாடாவை ஜரூராக முடித்துவிட்டன என்றே கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று இரவு கார்த்திகேய சிவசேனாபதி குறித்துக் கடுமையாக விமர்சித்த நோட்டீஸ்களை தொண்டாமுத்தூர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்தனர்.

தகவலறிந்து தி.மு.க-வினர் களத்துக்குச் சென்றபோது, நோட்டீஸ் மற்றும் வாகனத்தைப் போட்டுவிட்டு அப்படியே சென்றுவிட்டனர். இது குறித்து கார்த்திகேய சிவசேனாபதி புகாரும் அளித்திருந்தார். தேர்தல் விதிகளை மீறியதற்காக வேலுமணியைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில், செல்வபுரம் பகுதியிலுள்ள மாநகராட்சிப் பள்ளி வாக்குசாவடி மையத்தைப் பார்வையிடுவதற்காக இன்று காலை கார்த்திகேய சிவசேனாபதி சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க மற்றும் பா.ஜக.-வினர் அவரைத் தாக்க முயன்றிருக்கின்றனர். காரில் இருந்தவரை, ``வெளியில் வந்தா உன் தலையை வெட்டாமல் விட மாட்டேன்” என்று கொலை மிரட்டல் விடுத்தாக சேனாபதி புகார் தெரிவித்துள்ளார்.
காரையும் தாக்கிச் சேதப்படுத்தி நிலையில், போலீஸார் அவரை பத்திரமாக மீட்டு மற்றொரு காரில் அனுப்பிவைத்தனர். அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க-வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அந்த இடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால், போலீஸார் லேசான தடியடி நடத்தி அதைக் கட்டுப்படுத்தினர். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலரான நாகராஜனிடம் அவர் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திகேய சிவசேனாபதி, ``நிறைய வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கப்போகிறோம் என்ற பயம் வேலுமணிக்கு வந்துவிட்டது.
எப்படியாவது ரகளை செய்து, மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி, வாக்குப்பதிவை நிறுத்தப் பார்க்கின்றனர். வேலுமணியின் அண்ணன் அன்பரசன், வடவள்ளி சந்திரசேகர், வீரமணி, ஐ.டி.பி.ஐ சம்பத் உள்ளிட்ட அனைவரையும் கைதுசெய்ய வேண்டும்” என்றார்.