Election bannerElection banner
Published:Updated:

வேலுமணிக்குக் குடைச்சல் தரும் கார்த்திகேய சிவசேனாபதி - அனல் பறக்கும் தொண்டாமுத்தூர்

எஸ்.பி.வேலுமணி - கார்த்திகேய சிவசேனாபதி
எஸ்.பி.வேலுமணி - கார்த்திகேய சிவசேனாபதி

தொண்டாமுத்தூர் தொகுதியில் தனது இமேஜுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. ஆனால், தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி கடந்த சில வாரங்களாக, வேலுமணி மீதான ஊழல் புகார்களைப் பட்டியல் போட்டு இறங்கி அடித்துக்கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ., பத்து ஆண்டுகளாக அமைச்சர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினே தொண்டாமுத்தூர் தொகுதிக்கு வந்தாலும், வேலுமணியின் எதிர் அரசியலை காணாமல் செல்ல முடியாது. அந்த அளவுக்கு கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தனது இமேஜுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் அமைச்சர் எஸ்.பி வேலுமணி.

வேலுமணி
வேலுமணி

ஆனால், தி.மு.க சுற்றுச்சூழல் அணிச் செயலாளரும், தொண்டாமுத்தூர் தொகுதி தி.மு.க வேட்பாளருமான கார்த்திகேய சிவசேனாபதி கடந்த சில வாரங்களாக, வேலுமணி மீதான ஊழல் புகார்களை பட்டியல் போட்டு இறங்கி அடித்துக்கொண்டிருக்கிறார். இப்போதுவரை வேலுமணி, கார்த்திகேய சிவசேனாபதி பெயரைக்கூட உச்சரிக்கவில்லை.

Vikatan

தொண்டாமுத்தூர் தொகுதியை கூட்டணிக்குக் கொடுத்து, எளிதில் இழந்துவந்த தி.மு.க., 25 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாகக் களமிறங்கியிருக்கிறது. வெற்றியோ, தோல்வியோ பவர்ஃபுல்லாக இருக்கும் வேலுமணியைத் தொகுதிக்குள் முடக்க வேண்டும். அதற்காக டிக் அடிக்கப்பட்டவர்தான் சிவசேனாபதி.

கார்த்திகேய சிவசேனாபதி
கார்த்திகேய சிவசேனாபதி

வேலுமணியின் ஊழல் புகார்களையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் அம்பலப்படுத்தி சுற்றுசூழலுக்கு அதிக முக்கியத்துவமுள்ள தொண்டாமுத்தூர் தொகுதியில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை மையமாக வைத்துத்தான் தி.மு.க-வின் பிரதான வியூகம் அமைக்கப்பட்டிருக்கிறது. தவிர, வேலுமணியின் திட்டங்களை முறியடித்து உடனடியாக பதிலடி கொடுப்பது.

``ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் செல்லும் இடமெல்லாம் கார்த்திகேய சிவனோபதி, அமைச்சர் வேலுமணி மீது அவதூறு பரப்பிவருகிறார்” என்று அ.தி.மு.க-வினர் அவர்மீது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தனர். அடுத்த நாளே கார்த்திகேய சிவசேனாபதியே நேரடியாகத் தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்குச் சென்று, ``வேலுமணி வேட்புமனுவில் குளறுபடிகள் உள்ளன.

கார்த்தியே சிவசேனாபதி
கார்த்தியே சிவசேனாபதி

அவரின் மனைவி பெயரில் சொத்து சேர்ந்ததற்கான உரிய ஆவணங்கள் இல்லை. எந்தப் பின்புலமும் இல்லாமல், வேலுமணி மகன் விகாஷ் ஆஸ்திரேலியாவில் எப்படிச் சொந்த ஹெலிகாப்டரில் வலம் வர முடியும்... அவர்மீது நடவடிக்கை எடுங்கள்” எனப் புகைப்படத்துடன் புகார் அளித்துவிட்டார்.

தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்ப்பட்ட வெள்ளியங்கிரி மலையடிவாரம், 5-வது வார்டு, ஈஷா யோகா மையம், ஈஷானா விஹார் பகுதியில் சுமார் 700 போலி வாக்காளர்கள் இருப்பதைக் கண்டறிந்த தி.மு.க-வினர் இது குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர். வெளி மாநிலம், வெளிநாடுகளைச் சேர்ந்த இவர்களில் பலருக்கு அங்கு கதவு எண் கூட இல்லை என்று புள்ளிவிவரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

தொண்டாமுத்தூர்
தொண்டாமுத்தூர்

வாக்காளர் விவரங்களை ஆய்வு செய்யும்போது, அந்தப் பகுதியிலுள்ள வாக்காளர்கள் குறித்துச் சந்தேகம் வந்திருக்கிறது. அது குறித்து பூத் நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, ``அவங்கல்லாம் யார்னே தெரியாது. அ.தி.மு.க-வுக்குத்தான் வாக்களிப்பாங்க. அவங்களையெல்லாம் நாங்கள் பார்த்ததும் இல்லை” என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

இன்னும் ஆழமாக விசாரித்ததில்தான், அவர்களெல்லாம் ஆன்மிக பயணத்துக்கு வந்து, தற்காலிகமாகத் தங்குபவர்கள் என்றும், அவர்களுக்கும் இந்தப் பகுதிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற பகீர் தகவல் கிடைத்திருக்கிறது. மேலும், தொகுதிக்குள் கூகுள் பே மூலம் அ.தி.மு.க-வினர் பணப்பட்டுவாடா செய்வதாக வந்த தகவலையும் கையும் களவுமாகப் பிடித்திருக்கின்றனர். அதன்படி, பெயர்ப்பட்டியல், மொபைல் நம்பர்களுடன் வலம்வந்த காரைப் பிடித்து தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கூகுள் பே விவரம்
கூகுள் பே விவரம்

கார்த்திகேய சிவசேனாபதி விமர்சனத்துக்கு வேலுமணி நேரடியாக பதில் அளிக்கப்படாமல், நடிகை விந்தியா, பேராசிரியர் கல்யாணசுந்தரம் மூலம் பதில் அளிக்கப்படுகிறது. ஆனால், அவர்களை சிவசேனாபதியே பங்கமாக கலாய்த்துவிடுகிறார்.

வேலுமணி தரப்பில் ஊடகங்களில் பேட்டியளிக்கும்போதுகூட, கேள்விகளை முன்பே வாங்கிப் படித்து, அதில் சேனாபதி குறித்த கேள்விகள் இருந்தால் அடித்துவிட்டு, அதற்கு பதிலாக ஸ்டாலின் மீது விமர்சனம் வைக்கிறாராம். ``என் தகுதிக்கு, அவரது பெயரையெல்லாம் நான் சொல்லவே மாட்டேன். ஸ்டாலினுக்காக அவர் என்னை திட்டிக்கொண்டிருக்கிறார். தேர்தல் முடிந்ததும் அவரே சென்றுவிடுவார்” என்று பதிலளிக்கிறாராம்

வேலுமணி
வேலுமணி

தொண்டாமுத்தூர் தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் சிறுபான்மை வாக்குகளைச் சரிக்கட்டத்தான் அதிக பாடுபடுகின்றனர். வேலுமணியும், அவருடைய அண்ணன் அன்பரசனும் தொடர்ந்து ஜமாத் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுகின்றனர். பிரசாரத்தின்போது, பா.ஜ.க-வினரை முழுமையாகத் தவிர்க்கின்றனர்.

மேலும், சென்டிமென்டுக்காக தனது வாரிசுகளையும் வேலுமணி இறக்கிவிட்டிருக்கிறார். அதன்படி, வேலுமணியின் மகள் சாரங்கி எனும் வந்தனா, மகன் விகாஷ் ஆகியோர் களத்தில் ஆக்டிவாக உள்ளனர். போராட்டங்களுக்கு விகாஷ், பிரசாரத்துக்கு வந்தனா. பெரும்பாலான பகுதிகளுக்கு வேலுமணியின் வாகனத்தில் அவருடன் சென்று தந்தைக்காக வந்தனா பிரசாரம் செய்கிறார்.

ஆரம்பத்தில் தொகுதிக்குள் முழுவதுமாக முடங்கியிருந்த வேலுமணி, பிறகு நீலகிரி, மடத்துக்குளம், வால்பாறை, தாராபுரம் என்று அவ்வபோது தொண்டாமுத்தூர் எல்லையைத் தாண்டுகிறார். இப்போதுகூட, தொகுதிக்குள் எங்காவது ஸ்டாலின் படமோ, உதயசூரியன் சின்னத்தையோ பார்த்தால் அ.தி.மு.க-வினர் பாய்ந்து அதை அழித்துவிடுகின்றனர்.

சில இடங்களில் வேலுமணி மக்களுடன் நடனமாடி உற்சாமாக வாக்குக் கேட்கிறார். தொகுதி முழுவதும் பெரும்பாலான வீடுகளின் நல்லது, கெட்டதுகளுக்கு சென்று மொய்வைத்தது, பரிசு பொருள்கள் வழங்கியது, அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தது போன்றவையே தன்னைக் கரைசேர்த்துவிடும் என்று வேலுமணி நம்புகிறார்.

வேலுமணி
வேலுமணி

அதனால், கார்த்திகேய சிவசேனாபதியின் பெயரையே பயன்படுத்த மாட்டேன் என்பதில் வேலுமணி உறுதியாக இருக்கிறார். மேலும், வீட்டுக்கு ரூ.5,000, `கூகுள் பே’ ஃபார்முலா என்று பல திட்டங்களை அ.தி.மு.க வைத்திருக்கிறதாம். அதேபோல, கடைசி நேரத்தில் சிவசேனாபதிக்கு நெருக்கடி கொடுக்கும் திட்டங்களையும் வேலுமணி சீக்ரெட்டாக வைத்திருக்கிறாராம்.

தேர்தல் முடிவதற்குள் தொண்டாமுத்தூர் தொகுதியில் அனல் பறக்கும் மேலும் பல சம்பவங்கள் அரங்கேறலாம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு