Published:Updated:

கோவை: உத்தரவிட்ட அரசு... உதவி செய்த சமூக ஆர்வலர்! - நிறைவேறியது பழங்குடிகளின் கனவு

ஆனைகட்டி வீடு
ஆனைகட்டி வீடு

கோவை ஆனைகட்டி அருகே அரசு மற்றும் சமூக ஆர்வலரின் முயற்சியால் பழங்குடி மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கோவை மாவட்டம், ஆனைகட்டி கண்டிவழி மலை கிராமத்தில் சுமார் 25 பழங்குடிக் குடும்பங்கள் வசித்துவருகின்றன. கடந்த ஆண்டு பெய்த மழையில் அங்கு பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துவிட்டன. இதையடுத்து, அங்கு வசிக்கும் மக்கள் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர். மழை காரணமாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இராசாமணி பார்வையிட்டு, அந்தப் பகுதி மக்களின் குறைகளைக் கேட்டார்.

பழங்குடி கிராமம்
பழங்குடி கிராமம்
`தூங்குறதுக்கு 10 நிமிஷம் முன்னாடி எங்களைப் பத்தி யோசிங்க!' - கண்ணீரில் ஆனைமலைப் பழங்குடி மக்கள்

அப்போது, பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து 13 வீடுகள் கட்டித்தர ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, ஐந்து வீடுகளுக்கு தலா ரூ.2,10,000 வீதம் ஒதுக்கப்பட்டது. ஆனால், வீடு கட்ட அந்த நிதி போதவில்லை. இதற்கிடையே, ஆனைகட்டி பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர் ஜோஸ்வா அந்த மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தார். அவரது முயற்சிக்குப் பலனும் கிடைத்தது.

பசுமை வீடு
பசுமை வீடு

சில நல் உள்ளங்கள் செய்த உதவியால், பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு அந்த ஐந்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. நான்கு லட்ச ரூபாய் மதிப்பில் 320 சதுர அடி பரப்பளவில் அந்த வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. கிரஹப்பிரவேசம் நடத்தி அந்த வீடுகள் பழங்குடி மக்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

``நாங்க இருந்தது எம்.ஜி.ஆர் காலத்து வீடு. மழையில சேதமாகி, தங்கக்கூட இடமில்லாம இருந்தோம். பெரிய மனசு பண்ணி அரசு உத்தரவு போட்டாலும் பணம் பத்தலை. நல்ல மனுசங்க உதவியால இப்ப கான்கிரீட் வீட்டுல இருக்கோம். எங்களுக்கு உதவி செஞ்ச எல்லாருக்கும் நன்றி” என்று அந்த மக்கள் கூறியிருக்கிறார்கள்.

திறப்பு விழ◌ா
திறப்பு விழ◌ா

தற்போது ஐந்து வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ள வீடுகளைக் கட்டும் பணி விரைவில் தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், இதேபோல தங்களுக்கும் பசுமை வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று ஆனைகட்டி சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் 18 பழங்குடி கிராம மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு