Published:Updated:

உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்; உதவி செய்யும் நல் உள்ளங்கள்! - தீர்வை நோக்கி கோவை பழங்குடி கிராமம்

கோவை பழங்குடி கிராமம்
கோவை பழங்குடி கிராமம்

கோவையில் மின்சாரம், சாதிச் சான்றிதழ் இல்லாமல் தவித்த பழங்குடி மக்களுக்கு அரசு மற்றும் தனியார் தரப்பில் உதவிக்கரங்கள் நீண்டுள்ளன.

கோவை மாவட்டம், திருமலையம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ரொட்டிக் கவுண்டனூர் என்ற கிராமத்தில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். அந்தக் கிராமத்தில், தற்போதுவரை மின்சார வசதி இல்லை. மேலும், சாதிச் சான்றிதழ் இல்லாததால் பழங்குடி மாணவர்கள் கல்வியைத் தொடர முடியவில்லை. அங்கு ப்ளஸ் டூ வரை வெற்றிகரமாகப் படித்த ஒரே மாணவியும், சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் உயர்கல்வியைத் தொடர முடியவில்லை.

ஜூ.வி கட்டுரை
ஜூ.வி கட்டுரை

இது தொடர்பான விரிவான கட்டுரையை, ``மின்சார வசதியில்லை. சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை. கோவைக்கு அருகே உள்ள சுதந்திரத்துக்கு முந்தைய கிராமம்” என்ற தலைப்பில் கடந்த சனிக்கிழமை வெளியான ஜூனியர் விகடனில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

பல செய்தித் தொலைக்காட்சிகளும் அந்தக் கிராமம் தொடர்பாகச் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில், இந்துஸ்தான் ஸ்கவுட்ஸ் என்ற அமைப்பினர் ப்ளஸ் டூ வரை முடித்த மாணவி சங்கவியின் உயர் கல்விக்கான அனைத்துச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தனர். மேலும், சங்கவிக்கு அரசுத் தரப்பல் சாதிச் சான்றிதழும் வழங்கப்பட்டுவிட்டது.

ரஜினி மக்கள் மன்றம் உதவி
ரஜினி மக்கள் மன்றம் உதவி

இதையடுத்து, அங்குள்ள அனைவருக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சாதிச் சான்றிதழ் போன்வற்றை வழங்குவதற்கான விபரங்களை எடுப்பதற்காக, வருவாய்துறை அதிகாரிகள் இன்று அந்தக் கிராமத்துக்கு வந்திருந்தனர். அதேபோல, அந்தக் கிராமத்தில் இருக்கும் 38 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் கோவை மாவட்ட இணைச் செயலாளர் ஜே.பி.சண்முகம் சார்பில் அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணியிடம் கேட்டபோது, ``அந்தக் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக அரிசி, ஆட்டா உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. அந்தக் கிராமத்துக்கு இந்த வாரத்தில் ஒரு நாள் நேரடியாக ஆய்வு செய்து, அந்த மக்களின் அனைத்துத் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்றார் உறுதியான குரலில்.

சாதிச் சான்றிதழுடன் சங்கவி
சாதிச் சான்றிதழுடன் சங்கவி

இப்படி அடுத்தடுத்து நடக்கும் நற்செயல்களால், ரொட்டிகவுண்டனூரில் உள்ள பழங்குடி மக்களிடம் மகிழ்ச்சியுடன் புதிய நம்பிக்கையும் பிறந்துள்ளது. மேலும், தங்களுக்கு உதவும் அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றியும் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு