Published:Updated:

`21 நலத்திட்டங்கள், கூடவே ஊக்கத்தொகை!' - விளம்பரம் மூலம் கவனம் ஈர்க்கும் கோவை அரசுப்பள்ளி

வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிரசாரம்
வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிரசாரம்

அனைத்துத் தரப்பு மாணவர்களையும் அரசுப் பள்ளியை நோக்கி ஈர்க்கும் விதமான ஒரு முயற்சியைக் கோவை மாவட்டம், வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி எடுத்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கல்வித்துறைதான். வகுப்பறை கல்வி, ஆன்லைன் கல்வியாக மாறிவிட்டது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வி மூலமாக வழக்கமான கட்டணங்களை ருசி பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடியான சூழ்நிலையை அரசுப்பள்ளிகள் எப்படிக் கையாளப் போகின்றன என்ற கேள்வியும் அச்சமும் பல தரப்புகளிலும் உள்ளது.

வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
126 மாணவர்களின் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசிப்பைகள்; நெகிழவைத்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!

இந்நிலையில், அனைத்துத் தரப்பு மாணவர்களையும் அரசுப் பள்ளியை நோக்கி ஈர்க்கும் விதமான ஒரு முயற்சியை கோவை மாவட்டம், வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி எடுத்துள்ளது. பள்ளியின் சிறப்பம்சங்கள் அடங்கிய ஒரு ஆடியோவை விளம்பரப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளனர் அப்பள்ளி ஆசிரியர்கள்.

``அருமை பெரியோர்களே... அன்பு பெற்றோர்களே... இனிய குழந்தைகளே... வடசித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12 வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 2021-22 கல்வியாண்டுக்கான சேர்க்கை நடக்கிறது. இது உங்கள் பள்ளி. நமது பள்ளி. அரசுப்பள்ளி வடசித்தூர் பள்ளி.

வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி

இந்தாண்டு 11-ம் வகுப்பிலும் சேர்க்கை நடைபெறுகிறது. இயற்கை எழில் சூழ்ந்த, மரங்கள் நிறைந்த அழகான தூய்மையான பள்ளி வளாகத்தைக் கொண்டுள்ளோம். நல்ல காற்றோட்டமான, விசாலமான, வெளிச்சமான வகுப்பறைகள் உள்ளன.

திறமையான அனுபவமிக்க, அன்பான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர். 6-ம் வகுப்பு வரை ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், பறந்து விரிந்த விளையாட்டு மைதானம், தனியார் பள்ளிகளிலேயே இல்லாத வகையில் தரமான உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம், 6 முதல் 12-ம் வகுப்பு வரை மெய்நிகர் கற்றல் வகுப்பறைகள் (virtual class rooms),

வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி

தூய்மையான குடிநீர், அன்றாடம் தூய்மையாக்கப்பட்ட கழிவறைகள் உள்ளன. தேர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்ட அளவில், முதன்மையான அரசுப்பள்ளி என்கிற விருதைப் பெற்றுள்ளோம்.

ஒழுக்கம், கட்டுப்பாடுடன்கூடிய மதிப்புமிகு கல்வி, வாழ்வியலை போதிக்கும் பள்ளி இது. மிகப்பெரிய நூலக வசதி பெற்றுள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் ஊக்கத் தொகை பெற்றுத்தருவோம். 6 முதல் 12 வகுப்பு வரை தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் உண்டு.

வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி

புத்தகம் முதல் சத்துணவு வரை 21 அரசு நலத்திட்டங்கள், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப் வழங்கப்படும், மாணவர்களின் பன்முகத்திறன்களை வளர்க்க விளையாட்டு யோகா, கராத்தே கற்றுத்தரப்படும்.

நாட்டுநலப்பணித் திட்டம், மாணவர் சுற்றுச்சூழல் மன்றம், சாரணர் சாரணியர் இயக்கம், பசுமைப்படை, மாணவர்கள் செஞ்சிலுவை சங்கம் போன்ற சமூக கல்விகள் நடத்தப்படுகின்றன. பன்முகத்திறனை வெளிப்படுத்த இலக்கிய மன்றம், கதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மருத்துவக் கல்விக்கான சிறப்புப் பயிற்சியும் உண்டு. 8-ம் வகுப்பில் என்.எம்.எஸ்.எஸ் தேர்வு, 9-ம் வகுப்பில் டிரஸ்ட் தேர்வு,

மாணவர்கள்
மாணவர்கள்

10-ம் வகுப்பில் என்.டி.எஸ்.சி தேர்வுக்கு தனி பயிற்சி வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள கலை, பொறியியல் கல்லூரிகள், வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு மாணவர்களை நேரடியாக அழைத்துச் சென்று, அவர்களுக்கு தன் அனுபவம் பெற வைக்கிறோம்.

மதிப்பெண்களோடு, நல்ல மதிப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கும் வடசித்தூர் பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேர்த்து வளமான எதிர்காலத்தை உறுதி செய்வீர். அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல. அது நம் பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிக்கும் பள்ளி இது.

வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி

தன்னலமற்ற, தன்னம்பிக்கை மிக்க, அறிவுச்சுடர் மிகு சிறந்த சமூகத்தை உருவாக்கும் பள்ளி இது” என்று அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆடியோ பதிவை ஆட்டோ மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி கூறுகையில்,``எங்கள் பள்ளியில் சுமார் 700 மாணவர்கள் படிக்கின்றனர். தனியார் பள்ளி கட்டணம் போன்றவற்றால், அரசுப் பள்ளியை நோக்கி மாணவர்களை ஈர்க்கக்கூடிய வாய்ப்புகள் நிலவுகிறது. முதலில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்தோம்.

வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி

அது ஓரளவுக்கு வரவேற்பைக் கொடுத்தது. எங்கள் பள்ளியைச் சுற்றி 15 கிராமங்களுக்கு மேல் இருக்கின்றன. அங்கு உள்ளவர்களிடம் கொண்டு செல்ல, தேர்தல் பிரசாரம் போல விளம்பரம் செய்தால் என்ன என்று யோசித்தோம்.

ரெக்கார்டிங் தியேட்டர் சென்று ரெக்கார்ட் செய்தோம். அரசுப்பள்ளி என்றால் எதுவும் இல்லை என நினைக்கின்றனர். இங்கு எல்லா வசதிகளும் உள்ளன. தனியார் பள்ளிகளைவிட தரமான ஆசிரியர்கள் எங்களிடம் இருக்கின்றனர். ஏற்கெனவே அனுபவங்களுடன், லட்சணக்கணக்கான பேர் எழுதும் தேர்வில் இருந்து தகுதி பெறும் ஆசிரியர்கள் இவர்கள். அந்த ஆடியோவில் எங்களது ஆசிரியர்களே பள்ளி சிறப்பம்சங்களை எடுத்துக் கூறியுள்ளனர்.

வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
`அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்தால், ₹1000 பரிசு!' - அசத்தும் தலைமை ஆசிரியர்

விரைவில் நுற்றாண்டு பெருமையை எட்ட உள்ளோம். அடுத்த ஆண்டு, எங்கள் பள்ளி குறித்து ஓர் ஆவணப்படம் எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். எந்த பேதமும் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் துணை நிற்பதால் இது சாத்தியமாகிறது” என்றார்.

சில அரசுப் பள்ளிகளின் இதுபோன்ற முயற்சிகள், கிராமப்புற மற்றும் எளிய குடும்பத்துப் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

அடுத்த கட்டுரைக்கு