Published:Updated:

`மாநகராட்சியை வாழ்த்தி பேனர் வைத்தது ஏன்?!’ - குமுறும் கோவை வைரல் குடும்பம்

கோவை கொரோனா
கோவை கொரோனா

கொரோனா இல்லாதவர்களுக்கு, இருக்கிறது எனக் கூறியதற்காக கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துகள் தெரிவித்ததன் பின்னணியை குடும்பத்தினர் பகிர்ந்துள்ளனர்.

கோவை முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தினசரி புதிய உச்சத்தைத் தொட்டுவரும் கொரோனாவால், கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே பிரச்னைகளும் ஏற்பட்டுவருகின்றன. முக்கியமாக, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா பரிசோதனையில் குளறுபடி ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக `பாசிட்டிவவா... நெகட்டிவா?' - கோவை மாநகராட்சி கொரோனா குளறுபடி!’ என்ற தலைப்பில் ஏற்கெனவே விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

கோவை
கோவை
`பாசிட்டிவா... நெகட்டிவா?' - கோவை மாநகராட்சி கொரோனா குளறுபடி!

இந்நிலையில், ``கொரோனா இல்லாத நான்கு பேருக்கு, `இருக்கு’ என்று முத்திரை குத்தி என்னையும், என் குடும்பத்தாரையும் அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துகள்” என ஹோப் காலேஜ், மணீஸ் தியேட்டர் அருகே தனிமைப்படுத்தப்பட்ட ஓர் வீட்டில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களிலும் வைரலாகிவருகிறது.

இது குறித்து அந்த பேனரை வைத்த குடும்பத்தைச் சேர்ந்தவரிடம் பேசினோம். ``என் அப்பா உடல்நலக்குறைபாட்டால் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் கொரோனாவால் உயிரிழந்ததாகக் கூறினர். அவருக்கு ஏற்கெனவே இதயப் பிரச்னை, கால்வலி போன்றவை உள்ளன. மேலும், அவருக்கு வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் பழுதடைந்திருந்தது. அதனால்தான் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக முதல்வர் தனிப்பிரிவில் புகாரளித்திருக்கிறேன். மாநகராட்சி சார்பில் ஆகஸ்ட் 31-ம் தேதி எங்களுக்கு கொரோனா பரிசோதனை எடுத்தனர்.

புகார்
புகார்

2-ம் தேதி என் மனைவி, என் குழந்தை, சகோதரி, சகோதரியின் குழந்தை ஆகிய நான்கு பேருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக மாநகராட்சியிலிருந்து கூறினார்கள். ஆனால், மருத்துவனையில் அனுமதிப்பது தொடர்பாக அவர்கள் ஏதும் கூறவில்லை. இதனால், நான் பலமுறை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தேன். அங்கும் முறையான பதில் இல்லை.

சந்தேகம் வலுத்தது. கடந்த 4-ம் தேதி ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து பார்த்தோம். அதில், மாநகராட்சி `பாசிட்டிவ்’ எனச் சொன்ன நான்கு பேருக்குமே `நெகட்டிவ்’ என்றுதான் ரிப்போர்ட் வந்தது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு எனச் சொல்லி எங்கள் வீட்டைத் தனிமைப்படுத்திவிட்டனர். அக்கம் பக்கத்தினரின் நடவடிக்கைகள் மிகுந்த மன உளைச்சலைத் தந்தன. பார்க்கும்போதே தீண்டத் தகாதவர்களைபோலப் பார்த்தனர். இரண்டரை வயது மற்றும் நான்கரை வயது குழந்தைகளுக்கு பாசிட்டிவ் எனச் சொன்னால், மனது பதறத்தானே செய்யும்? கொரோனா பாதிப்பு எனச் சொன்ன மாநகராட்சி, மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை.

மக்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பேனரை வைத்தோம். தனியாரில் சோதனை செய்து பார்க்க முடிந்ததால், எங்களுக்கு `நெகட்டிவ்’ என்பதை நாங்கள் வெளிக்கொண்டு வந்துவிட்டோம். அது முடியாமல், பல எளிய மக்கள் கொரோனா முத்திரையை வாங்கி, அக்கம் பக்கத்தினராலும் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தநிலை மாற வேண்டும். அதற்காகத்தான் பேனர் வைத்தேன்” என்றார்.

இந்த பேனர் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி மாநகராட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், போலீஸார் நேற்று இரவு அந்த பேனரை அகற்றிவிட்டனர். இது குறித்து கோவை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரி ராஜா, ``பேனர் வைத்தவரின் அப்பா, அவர் தங்கை ஆகியோருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால்தான், குடும்பத்திலிருந்த மற்றவர்களுக்குப் பரிசோதனை செய்தோம். நாங்கள் எடுத்த சோதனைக்கும், அவர்கள் தனியார் மருத்துவமனையில் எடுத்த சோதனைக்கும் ஐந்து நாள்கள் இடைவெளி இருக்கிறது.

நோய் எப்போது, எப்படி, யாரிடமிருந்து வருகிறது எனத் தெரியவில்லை. அறிகுறி இல்லாதவர்களுக்கு இடைவெளிவிட்டு சோதனை செய்யும்போது இப்படி வரலாம். இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தாக்கம் சற்று அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகிறது. அவர்கள் மாநகராட்சி உதவி எண்களைத் தொடர்பு கொண்டிருந்தால், உடனடியாக நாங்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்திருப்போம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு