Published:Updated:

காலை தடபுடல் ஏற்பாடு.. மாலை சீல்.. கோவை வைரல் டாஸ்மாக் கடைக்கு நேர்ந்த சோகம்!

வைரல் டாஸ்மாக் கடை
வைரல் டாஸ்மாக் கடை

கோவையில் வாழை மரம், தோரணம் கட்டிய டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. இந்தியாவிலும் கடந்த 40 நாள்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில், மே 7-ம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

கொரோனா தீவிரம் காரணமாக சென்னையில் மட்டும் டாஸ்மாக்குகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்க எந்தத் தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக, ஒவ்வொரு கடைக்கும் 2 போலீஸ்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை சுத்தம் செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது. முக்கியமாக, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டாஸ்மாக் பூஜை
டாஸ்மாக் பூஜை

இந்த நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை 1773-ல் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடைக்கு சிறப்பு பூஜைகள் செய்து, வாழைமரம், மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டன. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

அங்கு சுற்றி, இங்கு சுற்றி கடைசியில் அது அரசின் கவனத்துக்கும் சென்றுவிட்டது. இதுகுறித்து வருவாய்துறைக்குத் தகவல் செல்லவே, பேரூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன் அந்தக் கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். ``டாஸ்மாக் கடைகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடலாம். ஆனால், இதை அலங்காரப்படுத்துவது என்பதை இந்தக் காலகட்டத்தில் ஏற்க முடியாது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

எனவே, அந்தக் கடை மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வைரல் கடைக்கு சீல் வைக்கப்பட்ட தகவலும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு