கோவை பெருமைகளை எடுத்துரைக்கும்விதமாக ஒவ்வோர் ஆண்டும், ‘கோவை விழா’ கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கோவை விழா கடந்த வாரம் தொடங்கியது. கோவையில் உள்ள பல பெரு நிறுவனங்கள், அரசின் துணையுடன் விழாவை நடத்திவருகின்றன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ரேஸ்கோர்ஸ் பகுதியில் ‘ஆர்ட் ஸ்ட்ரீட்’, வாலாங்குளத்தில் லேசர் கண்காட்சி, உணவுக்காட்சி, கார் கண்காட்சி என்று ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், கோவை விழா செல்வந்தவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் மட்டும் நடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. வாலாங்குளத்தில் ஒரு வாரத்துக்கு லேசர் கண்காட்சி நடைபெறுகிறது. ஆனால், நிகழ்ச்சியை நடத்தும் பெரு முதலாளிகளுக்கு வேண்டியப்பட்ட வி.வி.ஐ.பி-கள், ஆட்சியாளர்கள்,

அதிகாரிகள் ஆகியோருக்கு மட்டுமே உள்ளே அமர்ந்து பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது. சாதாரண மக்கள் கொட்டும் மழையில் சாலையின் மறுமுனையில் நின்று பார்க்கவே அனுமதிக்கப்படுகின்றனராம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து கோவை மக்கள் கூறுகையில், “ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம் என்று செல்வந்தவர்கள் வசிக்கும் பகுதிகளில்தான் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக தினசரி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாலாங்குளக்கரை சாலையை முடக்கிவைத்துவிடுகின்றனர். அருகேதான் அரசு மருத்துவமனை உள்ளது. ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வரும் சாலை அது.

தொடக்கத்தில் ஆம்புலன்ஸ்களையே அனுமதிக்கவில்லை. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன், ஆம்புலன்ஸ்களை மட்டும் அனுமதிக்கின்றனர். இப்போதும் அந்த வழியே அவசரத் தேவைக்காக செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். முதியவர்கள் மாலை வாக்கிங்கூட செல்ல முடிவதில்லை.
குளக்கரையைச் சுற்றி பேரிகார்டுகள் மற்றும் பாதுகாவலர்களை போட்டுவைத்துள்ளனர். வி.வி.ஐ.பி-களுக்கும், இவர்கள் பாஸ் கொடுப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களுக்குத் தனியாக நாற்காலிகள் போடப்பட்டு, அவர்கள் லேசர் கண்காட்சியை அருகிலிருந்து பார்க்கலாம்.
பொதுமக்களுக்கு அந்த நடைபாதையில் நின்று பார்க்கக்கூட அனுமதி இல்லை. பாஸ் இருந்தால்தான் அனுமதி என்று கூறுகின்றனர். பாஸ் எப்படி, யாரிடம் வாங்க வேண்டும் என்று தகவல் இல்லை. கடந்த சில நாள்களாக கோவையில் மழை பெய்துவருகிறது.
அப்போதும்கூட பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடம் ஒதுக்கப்படுவதில்லை. மழை பெய்தபோதுகூட பொதுமக்களை சாலைக்கு அந்தப் பக்கம்தான் நிற்க வேண்டும். உள்ளே அனுமதிக்க முடியாது என்று கறார் காட்டுகின்றனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர் என்று அனைவரிடமும் கறாராகவே பேசுகின்றனர்.

பொது இடத்தில், பொதுமக்களைப் புறக்கணிக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் எப்படி அனுமதி கொடுக்கின்றனர் எனத் தெரியவில்லை. இப்படியொரு முட்டாள்தனமான திட்டத்தை அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது” என்றனர்.
இது குறித்து விளக்கம் கேட்க கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை தொடர்பு கொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்பட்சத்தில் அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடுவதற்குத் தயாராக இருக்கிறோம்.
கோவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், “வாலாங்குளம் லேசர் கண்காட்சிக்கு தினசரி கோவை மாவட்ட ஆட்சியர், போலீஸ் கமிஷனர், உயரதிகாரிகள் என்று பல முக்கியஸ்தர்கள் வருகின்றனர். அவர்களை மரியாதை செய்யும்விதமாகத்தான் தனி இருக்கை போடப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி-களுக்கு மட்டும் பாஸ் கொடுக்கவில்லை. மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள் என்று பலருக்கும் பாஸ் கொடுத்திருக்கிறோம்.

அவர்கள் எல்லோரையும் அமரவைக்கத்தான் அந்த இருக்கைகள். இந்த நிகழ்ச்சி நடத்துவதே கோவை மக்களுக்காகத்தான். அவர்களைக் காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் துளியும் இல்லை. ஒருசில இடங்களில் பாதுகாவலர்களால் சில தர்மசங்கடங்கள் ஏற்பட்டிருக்கலாம். இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் நடவடிக்கை எடுக்கிறோம்” என்றனர்.