Published:Updated:

`ஆதரவற்றோருக்கு உணவு, கூலித் தொழிலாளிகளுக்கு மளிகைப் பொருள்!' - தேடிச் சென்று உதவும் கோவை பெண்

மளிகைப் பொருள் உதவி
மளிகைப் பொருள் உதவி

ஊரடங்கு உத்தரவால் நாடே, முடங்கிப் போயிருக்கும் நிலையில், நண்பர்களின் உதவியுடன் 300 கூலித் தொழிலாளிகளுக்கு மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களை விற்பதற்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் இப்போதே அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆதரவற்ற மக்களுக்கு அரசும் தன்னார்வ அமைப்புகளும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகின்றன.

உணவு உதவி
உணவு உதவி

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த நிவேதிதா என்ற இளம்பெண் ஆதரவற்ற மக்களுக்கு உணவு கொடுப்பதுடன், கூலித் தொழிலாளிகளுக்கு மளிகைப் பொருள்களையும் வாங்கிக் கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து நிவேதிதாவிடம் பேசியபோது, `` நான் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறேன். 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வந்தபோதே, ஆதரவற்ற மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து உணவு கொடுப்பது என்று முடிவெடுத்துவிட்டேன். முதல்நாள் எங்கள் வீட்டிலேயே 300 பேருக்கான உணவை சமைத்தேன். நண்பர்களின் உதவியுடன் நகரில் உள்ள பல்வேறு ஆதரவற்ற மக்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு அந்த உணவைக் கொடுத்தேன்.

உதவும் நிவேதிதா
உதவும் நிவேதிதா

எங்களதுப் பணியைத் தெரிந்து பல நல்ல உள்ளங்கள் எங்களுக்கு உதவி செய்தனர். இதனால், இரண்டாவது நாள் 800 உணவுப் பொட்டலங்கள், மூன்றாவது நாள் 1,000 உணவுப் பொட்டலங்களை வழங்கினோம்.

அதேபோல, ரொட்டி பாக்கெட்கள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கினோம். நாங்கள் வெளியில் பார்த்தபோது, பல கூலித் தொழிலாளிகள் பசியால் வாடியது தெரியவந்தது. நண்பர்கள், உறவினர்களிடம் இதுகுறித்து பேசினோம். 10 கிலோ அரிசி, துவரம் பருப்பு, மிளகாய்த் தூள், சாம்பார் தூள் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் மற்றும் முருங்கை, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை வாங்கினோம்.

மளிகைப் பொருள்கள்
மளிகைப் பொருள்கள்

எங்களுக்கு வந்த அழைப்புகள், தேவைப்படுவோர் என்று இரண்டு நாள்களில் 300 கூலித் தொழிலாளிகளுக்கு அவற்றை வழங்கினோம். தற்போது பலரும் உதவ முன் வருகின்றனர். எங்களாலான உதவிகளைத் தொடர்ந்து செய்வோம்” என்றார் உற்சாகமான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு