Published:Updated:

`பசியோட இருக்குற யார் வேணும்னாலும் எடுத்துக்கலாம்!' - கோவை சஃப்ரினாவின் `பிரியாணி' சேவை

சஃப்ரினா
சஃப்ரினா

பிரியாணி வியாபாரத்தில் பிஸியாக இருந்த சஃப்ரினா வேலை செய்துகொண்டே நம்மிடம் பேசினார்.

`எந்த நோயையும்விட கொடுமையானது பசி' என்றார் வள்ளலார். `தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதி. ஆனால், பட்டினியுடன் தவிப்பவர்கள் பற்றி நம்மில் எத்தனை பேர் யோசித்திருப்போம்? அப்படியே யோசித்திருந்தாலும், அவர்களுக்கு உதவ நம் சூழ்நிலை ஏதாவது ஒரு தடங்கலை கொடுத்துக் கொண்டேயிருக்கும். கோவையைச் சேர்ந்த சஃப்ரினா, மரிய சதீஸ் தம்பதி அப்படி தடைகள் கொண்ட சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள்.

சஃப்ரினா
சஃப்ரினா

என்றாலும் கணவருடன் இணைந்து, பட்டினியோடு இருப்பவர்களின் பசியாற்றிக்கொண்டிருக்கிறார் சஃப்ரினா. கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில் தனது வீட்டின் முன்பு, சிறிய பிரியாணி கடை போட்டிருக்கிறார். அங்கு ஒரு எம்ப்டி (empty) பிரியாணியின் விலை 20 ரூபாய்தான். அதையும் வாங்க முடியாதவர்களுக்கு, `பசிக்கின்றதா எடுத்துக்கோங்க' என்று ஸ்லேட்டில் எழுதி, ஒரு அட்டைப் பெட்டியில் இலவச உணவுப் பொட்டலங்களை வைத்துள்ளார். பாஸ்மதி அரிசியில்தான் பிரியாணி செய்கிறார் சஃப்ரினா. பிரியாணி வாசமும் ருசியும் சடசடவென உணவு பாக்ஸ்கள் காலியாக வைக்கின்றன.

பிரியாணி வியாபாரத்தில் பிஸியாக இருந்த சஃப்ரினா வேலை செய்துகொண்டே நம்மிடம் பேசினார். ``என்னோட சொந்த ஊர் சென்னை. எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. கோயம்புத்தூர் வந்து நாலு வருஷம் ஆச்சு. கணவரோட வேலைக்காகத்தான் இங்க வந்தோம். நான் பி.எஸ்ஸி சைக்காலஜி படிச்சிருக்கேன். ஒரு கம்பெனில வேலைபார்த்துட்டு இருந்தேன். ஆனா, எனக்கு பிசினஸ் பண்ணணும்னு ஆசை. அதனால, வேலையை விட்டுட்டேன். கணவர் திருப்பூர்ல ஒரு ஃபுட் கோர்ட் நடத்திட்டு இருக்கார். போன நவம்பர் மாசம் சும்மா எங்க வீட்டு முன்னாடி ஒரு பிரியாணி கடை திறந்தோம்.

பசிக்கின்றதா எடுத்துக்கோங்க
பசிக்கின்றதா எடுத்துக்கோங்க

சமீபத்துல நானும் கணவரும் வெளிய போயிருந்தோம். `நாம மூணு வேளையும் சாப்பிடுறோம். ஆனா, இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க? மனநிலை பாதிக்கப்பட்டவங்க, கை, கால் இல்லாதவங்கனு ரோட்ல நிறைய பேரு இருக்காங்க. அவங்களையெல்லாம் பார்க்க கஷ்டமா இருக்கு. முடியாதவங்களுக்கு நாம சாப்பாடு கொடுக்கலாமா?'னு கணவர்கிட்ட கேட்டேன். அவரும் நம்பிக்கை கொடுத்தார். அன்னிக்கு மதியமே, `பசிக்கின்றதா எடுத்துக்கோங்க'னு ஸ்லேட்ல எழுதி, ஒரு அட்டை பெட்டியில பிரியாணி பொட்டலங்கள் வெச்சோம்.

ஒவ்வொருத்தரா அதை எடுத்துட்டுப் போறப்போ, மனசுக்கு அவ்ளோ சந்தோஷமா, நிறைவா இருந்துச்சு. நாங்க வயிறார சாப்பிட்டாகூட அவ்ளோ திருப்தி இருந்ததில்லை. சொந்த வீடு, பணம், நகை சேர்த்து வைக்கணும்னு நாங்க யோசிச்சது இல்லை. கடவுள்கிட்டயும், எல்லாரும் நல்லாருக்கணும்னுதான் வேண்டுவோம்.

இந்தப் பெட்டியில இருக்குற பிரியாணி பொட்டலத்தை, பசியோட இருக்குற யார் வேணும்னாலும் எடுத்துக்கலாம். என்னைப் பொறுத்தவரை, உதவி பண்ணணும்னு முடிவு பண்ணிட்டா உடனே செயல்ல இறங்கிடணும். நாளைக்கு செய்யலாம், பணம் சேர்த்துட்டு செய்யலாம்னு எல்லாம் யோசிச்சு தள்ளிப் போடக்கூடாது.

சஃப்ரினா
சஃப்ரினா

எங்க குழந்தைகளையும் இதை செய்ய வைப்போம். என் குழந்தைங்ககிட்ட, `நீங்களும் இந்த மாதிரி பண்ணுவீங்களா?'னு கேட்டப்ப, `நிச்சயமா பண்ணுவோம்'னு சொல்லிருக்காங்க. அதுதான் எங்களுக்கு வேணும். விதை போட்ருக்கோம். நாளைக்கு அது மரமா மாறும்" என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு பாட்டி பெட்டியில் இருந்த உணவுகளை எடுத்தபடியே, இவர்களை பார்த்து, `எங்க வீட்ல இன்னும் 4 பேர் இருக்காங்க, அவங்களுக்கும் எடுத்துக்கவா?' என்றார். `தாராளமா எடுத்துக்கோங்க' என்றார் சஃப்ரினா மலர்ந்த முகத்துடன்.

``எங்க வியாபாரம் நல்லா போச்சுன்னா, ரூ.15-க்கு பிரியாணி கொடுப்போம். இது எல்லாராலும் முடியும். பிரியாணிய பொறுத்தவரை எங்களுக்கு இன்வஸ்ட் பண்ற பணம் கிடைச்சுடும். சுக்கா, கிரேவி வகையில லாபம் கிடைக்குது. எங்களுக்கு இது போதும். எல்லாருக்கும் குறைஞ்ச விலையில, தரமான உணவு கொடுக்கணும்னு நினைக்கிறோம்.

பார்சல் பண்றப்ப, சில்வர் பாக்ஸ்ல சாப்பாட்டுக்குக் கீழ, மேல வாழை இலை வைப்போம். ஏன்னா, அந்த பாக்ஸ் அலுமினிய ரசாயனம். அதுல சூடா உணவு வெச்சா, கெமிக்கல் ரியாக்‌ஷன் இருக்கலாம். அதுவே வாழை இலை ஆரோக்கியத்துக்கு உகந்தது.

சாப்பிடுறவங்க ஆரோக்கியமா இருக்கணும். நாங்க சுவைக்காகவோ, கலருக்காகவோ எதையும் சேர்க்கிறது கிடையாது. வீட்ல எப்படி பிரியாணி பண்ணுவோமோ, அப்படிதான் பண்றோம். 10,000, 7,000 சம்பளம் வாங்கறவங்கலாலயும் இந்த மாதிரி வியாபாரமும் உதவியும் பண்ண முடியும்.

எங்க பாக்ஸ்ல இருந்து சாப்பாடு எடுத்துட்டுப் போறவங்க, `நல்லாருங்க, உங்க குழந்தைங்க நல்லாருக்கணும், நிறைய வருஷம் நல்லாருக்கணும்'னு ஆசீர்வாதம் பண்ணுவாங்க. அது எங்களை, இன்னும் நிறைய உதவி பண்ணணும்னு ஊக்குவிக்கும். ஜி.ஹெச் பக்கம் எல்லாம் மழைனாலும் வெயில்னாலும் நிறைய பேர் அங்கேயே இருக்காங்க. அவங்களைப் பத்தியெல்லாம் யாரும் யோசிக்கிறது இல்ல. நம்மளை பத்தி மட்டுமே யோசிக்கிறோம். அது மாறணும். நான் இப்படியெல்லாம் யோசிக்கிறதுக்கு எனக்கு எங்கப்பா ஒரு பெரிய முன்னுதாரணம்.

அவருக்கு உதவி செய்யுற மனப்பான்மை அதிகம். அவர்கிட்ட இருந்துதான் நான் இதைக் கத்துக்கிட்டேன். ஆண்கள் லிஃப்ட் கேட்டா, யோசிக்காம நான் உதவி பண்ணுவேன். சக மனுசங்களுக்கு உதவி பண்றது நம்ம கடமை. ஒரு நாளுக்கு 100 பேருக்கு சாப்பாடு கொடுக்கணும். அதுதான் ஆசை" என்றார் உறுதியான குரலில்.

சேவை தொடரட்டும்!

அடுத்த கட்டுரைக்கு