Published:Updated:

அரசு மருத்துவமனையில் அதிகரித்த குறைப் பிரசவம்! - ஊரடங்கிலும் தாய்ப்பால் தானம் வழங்கிய கொங்கு பெண்கள்

தாய்ப்பால்
தாய்ப்பால்

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிதான் அந்தக் குழந்தைகளுக்கான அட்சயபாத்திரம். ஆனால், ஊரடங்கு உத்தரவு காரணமாக, தாய்ப்பால் தானம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம், பசியால் வாடுபவர்கள் ஒரு பக்கம் என்று கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் கொரோனா, பச்சிளம் குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரஸ் எதிரொலியால் சில தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டும், பல தனியார் மருத்துவமனைகள் கடுமையான விதிமுறைகளுடனும் இயங்கி வருகின்றன. பெரும்பாலான மருத்துவமனைகள், `பிரசவம் மற்றும் அவசரத் தேவைக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும்' என்று கூறியுள்ளன. அப்படி இருந்தும் குறைமாதப் பிரசவம் மற்றும் சற்றே பிரச்னையான பிரசவங்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

கோவை அரசு மருத்துவமனை
கோவை அரசு மருத்துவமனை

இதனால், கோவை அரசு மருத்துவமனையில் குறைப்பிரசவம், எடை குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிதான் அந்தக் குழந்தைகளுக்கான அட்சயப் பாத்திரம். ஆனால், ஊரடங்கு உத்தரவு காரணமாக, தாய்ப்பால் தானம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், தாய்ப்பால் வங்கியில் உள்ள இருப்பின் அளவு வேகவேகமாகக் குறைந்து கொண்டுவந்தது. அந்த நேரத்தில்தான், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த தாய்மார்கள், சுமார் 140 பாக்கெட்டுகளைக் கொண்ட தாய்ப்பாலை தானமாக வழங்கி அந்தக் குழந்தைகளின் பசியாற்றியுள்ளனர்.

இதுகுறித்து அமிர்தம் தாய்ப்பால் தானம் குழுவின் நிறுவனர் ரூபா, `எனக்கு இரண்டரை வயதில் மகள் இருக்கிறாள். தாய்ப்பால் தானம் குறித்து ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன். குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் தானம் குறித்து ஆராய்ந்தேன்.

ரூபா
ரூபா

கோவை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி இருப்பது தெரியவந்தது. என் வீடு அவிநாசி. வேலை செய்வது கோவை டைடல் பார்க். கடந்த இரண்டாண்டாக தாய்ப்பால் தானம் செய்து வருகிறேன். கோவை அரசு மருத்துவமனையில் எடை குறைவான குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். நம் நாட்டில்தான் குறைப்பிரசவம் அதிகம். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அவர்களின் உடல்நலன் முன்னேற்றம் அடையும் என்று தெரியவந்தது.

கோவையில் தாய்ப்பாலுக்காக இப்படி ஒரு வங்கி இருப்பது பலருக்கும் தெரியாது. எனவே, என்னால் முடிந்தவரை தாய்மார்களை இணைத்து, தாய்ப்பால் தானம் செய்ய வேண்டும் என்று நினைத்துதான் இந்த அமைப்பைத் தொடங்கினேன். படிப்படியாக பல தாய்மார்கள் எங்களது குழுவில் இணைந்தனர்.

தற்போது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மொத்தம் 600 தாய்மார்கள் இணைந்து, தாய்ப்பால் தானம் செய்து வருகிறோம். லாக் டெளன் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் 150 பாக்கெட்டுகள் தாய்ப்பால் வழங்கியிருந்தோம்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு குழந்தை 500 கிராம் எடையுடன் என்.ஐ.சி.யூ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டு வேதனையடைந்தேன். அடுத்த சில நாள்களுக்குள் பல தாய்மார்கள் தானம் செய்வதற்காக தாய்ப்பாலை எடுத்து வைத்துவிட்டனர்.
ரூபா
என்.ஐ.சி.யூ வார்டு
என்.ஐ.சி.யூ வார்டு

ஆனால், லாக் டெளன் தொடங்கிய சில நாள்களில் அரசு மருத்துவமனையில் கேட்டபோது, தாய்ப்பால் மிகக்குறைவாக இருப்பதாகக் கூறினார்கள். அதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு குழந்தை 500 கிராம் எடையுடன் என்.ஐ.சி.யூ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டு வேதனையடைந்தேன். அடுத்த சில நாள்களுக்குள் பல தாய்மார்கள் தானம் செய்வதற்காக தாய்ப்பாலை எடுத்து வைத்துவிட்டனர்.

`முற்றிலும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கையே..!' - காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் பொதுப்பணித்துறை விளக்கம் #NowAtVikatan

ஆனால், லாக் டௌன் காரணமாக அவற்றை எப்படி கொண்டு வருவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்தான் கோவை அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிறப்பு நிபுணர் செந்தில்குமார். கோவை, அவிநாசி, திருப்பூர் என்று பல பகுதிகளில் உள்ள தாய்மார்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பால்களைச் சேகரித்தார். ஈரோட்டில் உள்ள தாய்மார்கள் சேகரித்த பால்களை காவல்துறை உதவியுடன் கோவை அரசு மருத்துவனையில் சேர்த்தோம்.

தானமாக வழங்கப்பட்ட  தாய்ப்பால்
தானமாக வழங்கப்பட்ட தாய்ப்பால்

மொத்தம் 140 பாக்கெட்டுகள் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளோம். ஒவ்வொரு பாக்கெட்டிலும் 250 மி.லி தாய்ப்பால் இருக்கும். இதை வைத்து அடுத்த சில வாரங்களுக்கு சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஊரடங்கு நீட்டிக்கப்படும்பட்சத்தில், மேலும் தாய்ப்பால் தானம் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்” என்றார் உறுதியான குரலில்.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிறப்பு நிபுணர் மருத்துவர் செந்தில்குமார், ``கோவை அரசு மருத்துவமனையில் உள்ள என்.ஐ.சி.யூ-வில் எடை குறைவான குழந்தைகள், குறைப் பிரசவம், ஆதரவற்ற குழந்தைகள், தாய்ப்பால் சரியாக சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கும் தானமாக வழங்கப்படும் தாய்ப்பாலை வழங்கி வருகிறோம்.

மருத்துவர் செந்தில்குமார்
மருத்துவர் செந்தில்குமார்

கொரோனா காரணமாக பல தனியார் மருத்துவமனைகளில் சிக்கலான பிரசவங்களைப் பார்ப்பதில்லை. இதனால் கோவை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக, குறைப் பிரசவங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

தற்போது மட்டும் கோவை அரசு மருத்துவமனையில் அப்படி 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கின்றனர். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அந்தக் குழந்தைகளின் உடல் நலன் முன்னேற்றம் அடையும். இதன்மூலம் கோவை அரசு மருத்துவமனையில் 45 சதவிகிதமாக இருந்த இறப்பு விகிதம் தற்போது 10 சதவிகிதமாக குறைந்துள்ளது.

தாய்ப்பால்
தாய்ப்பால்

அதாவது 90 சதவிகித எடைக்குறைவான குழந்தைகளை நாங்கள் காப்பாற்றிவிடுகிறோம். அதற்கு இதுபோன்ற தாய்மார்கள் தானமாக அளிக்கும் தாய்ப்பால் முக்கிய காரணமாக விளங்குகிறது” என்றார் நெகிழ்ச்சியோடு.

அடுத்த கட்டுரைக்கு