Published:Updated:

கார் நிறைய மதுபாட்டில்கள்.. அத்துமீறி நுழைவு.. கோவை போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர்

வாக்குவாதம்
வாக்குவாதம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கார் நிறைய மதுபாட்டில்களுடன் வந்து வாக்குவாதம் செய்த நபரால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

ஊரடங்கு உத்தரவால் நாடே வெறிச்சோடி காணப்பட்டாலும் ஆங்காங்கே கள்ளச் சந்தையில் மது விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை 11 மணி அளவில் கேரள பதிவு எண் கொண்ட ஒரு கார் கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்தது.

பிரேம்குமார்
பிரேம்குமார்

அங்கு காவல் பணியில் இருந்த போலீஸார், உடனடியாக காரில் வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே போலீஸாரிடம் மிடுக்கான தோரணையில், கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

விசாரணையில் அந்த நபர் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்றும், அவர் ஃபைனான்ஸ் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. பிரேம்குமார் மதுபோதையில் இருந்ததால், அவர் வந்த கார் சோதனை செய்யப்பட்டது. அப்போது, அந்தக் காரில் மேலும் ஏராளமான மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

பிரேம்குமார் வந்த கார்
பிரேம்குமார் வந்த கார்

தொடர்ந்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் ஒரு கட்டத்தில், தனக்கு உடல் நிலை சரி இல்லை. என் குடும்பத்தை நான்தான் பார்க்கணும் என்று அழத் தொடங்கிவிட்டார்.

இதையடுத்து, பிரேம்குமாரின் குடும்பத்தினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அவர்களது உறவினர்கள் வரவே, பிரேம்குமாரை அவர்களுடன் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ``அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.

மதுபாட்டில்கள்
மதுபாட்டில்கள்

இதற்காக சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இனிமேல் வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன் என்று கூறியுள்ளார். அவரை எச்சரித்து அனுப்பியுள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு