Published:Updated:

``98 வயதிலும் அவங்க மருத்துவமனையை மறக்கலை!" - சாரதா மேனன் நினைவுகள் பகிரும் மருத்துவர்கள்

பத்மபூஷன் விருது பெற்றபோது

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் பணியாற்றி அந்நிறுவனத்தின் முதல் பெண் கண்காணிப்பாளராகவும் பொறுப்பு வகித்த மருத்துவர் சாரதா. ஓய்வுக்குப் பிறகு, தொடர்ந்து மனச்சிதைவு நோய்க்காக சேவையாற்றத் தொடங்கினார்.

``98 வயதிலும் அவங்க மருத்துவமனையை மறக்கலை!" - சாரதா மேனன் நினைவுகள் பகிரும் மருத்துவர்கள்

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் பணியாற்றி அந்நிறுவனத்தின் முதல் பெண் கண்காணிப்பாளராகவும் பொறுப்பு வகித்த மருத்துவர் சாரதா. ஓய்வுக்குப் பிறகு, தொடர்ந்து மனச்சிதைவு நோய்க்காக சேவையாற்றத் தொடங்கினார்.

Published:Updated:
பத்மபூஷன் விருது பெற்றபோது

``ஒரு குடிகாரனை சகித்துக்கொள்ளும் நாம் ஏன் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை சகித்துக்கொள்ளக் கூடாது?"

- மனநல நோயாளிகளையும் மனநலம் சார்ந்த பிரச்னைகளைக் கேலிப்பொருளாகவும் பார்த்து வந்த சமுதாயத்தை நோக்கி தைரியமாக கேள்வியெழுப்பிய மருத்துவர் சாரதா மேனன் இன்று நம்மிடையே இல்லை. முதுமையின் பிடியிலிருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரான சாரதா மேனன் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தன் 98 வயது வரை போராடியவர்.

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன்
இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன்

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் பணியாற்றி அந்நிறுவனத்தின் முதல் பெண் கண்காணிப்பாளராகவும் பொறுப்பு வகித்த மருத்துவர் சாரதா. ஓய்வுக்குப் பிறகு, தொடர்ந்து மனச்சிதைவு நோய்க்காக சேவையாற்றத் தொடங்கினார். அதற்காக SCARF என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். சமூகத்துக்கு இவர் ஆற்றிய பங்களிப்புக்காக 1992-ல் இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் வழங்கப்பட்டது. மனநலத் துறையின் மேம்பாட்டுக்காகத் தன் இறுதி மூச்சுவரை வாழ்ந்தவர்.

மருத்துவர் சாரதாவின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் சிநேகா தற்கொலைத் தடுப்பு மையத்தின் நிறுவனரும், மருத்துவர் சாரதாவின் மாணவியும், மனநல மருத்துவருமான லட்சுமி விஜயகுமார்.

``சின்னவங்க பெரியவங்கன்னு எல்லார்கிட்டயும் புதுசா ஏதோ ஒரு விஷயத்தைக் கத்துப்பாங்க. வாழ்நாள் முழுவதும் ஏதாவது கத்துகிட்டே இருந்தாங்க. மூணு மாசத்துக்கு முன்னாடிகூட ஏதோ கத்துக்கணும்னு ஒரு ஆன்லைன்ல மீட்டிங் அட்டெண்ட் பண்ணதா சொன்னாங்க.

சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார்
சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார்

பொதுவா, மனநல மருத்துவர்கள் நோயாளிகள் கூட நிறைய பேச வேண்டியது வரும். ஒரு நோயாளிகிட்ட 10 நிமிஷம் பேசினாலே அவங்க பிரச்னை என்னன்றதை தெரிஞ்சுப்பாங்க. எங்களுக்கெல்லாம் மனநல மருத்துவத்தைப் பற்றி கற்றுக்கொடுத்ததே அவங்கதான். படிப்புல பின்தங்குற மாணவர்களுக்குக்கூட பொறுமையா கத்துக்கொடுப்பாங்க. நோயாளிகள்தாம் முக்கியம், எப்பவும் கத்துக்கிட்டே இருக்கணும், எளிமையா இருக்கணும்னு அவங்ககிட்ட கத்துக்கிட்ட மூணு விஷயத்தை நான் கடைப்பிடிக்கணும்னு நினைப்பேன்" என்றார்.

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் பூர்ணசந்திரிகாவிடம் பேசினோம்.

``சாரதா மேடத்தின் முயற்சியாலதான் மனநல மருத்துவத்துக்கான புறநோயாளிகள் பிரிவு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் கொண்டுவரப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டு மீண்ட நோயாளிகளுக்கான வாழ்வாதாரத்துக்கு வழிசெய்யும் வகையில் தொழில்துறை சிகிச்சை மையத்தைத் (Industrial Therapy Center - ITC) தொடங்கி, அதில் வேலைசெய்து கிடைக்கும் சம்பளத்தை நோயாளிகளுக்கே கொடுக்குறோம்.

அரசு மனநல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்
அரசு மனநல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்
Photo: Vikatan

கர்ப்ப காலத்துல பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்க ஒவ்வொரு மகப்பேறியல் பிரிவிலும் ஒரு மனநல மருத்துவரை பணிமயர்த்த வேண்டும்கிறது அவரோட கனவு. அந்தக் கனவைத் தமிழக அரசு தற்போது நிறைவேற்றியிருக்கு. இது அவருக்கு கூடுதலா பெருமை சேர்க்கும் விஷயம்.

மேடம் ரொம்ப பங்ச்சுவல். கண்காணிப்பாளரா இருந்த சமயத்துல சரியா 7 மணிக்கெல்லாம் மருத்துவமனைக்கு வந்திடுவாங்க. யாராவது 7 மணிக்கு மேல தாமதமா வந்தா அவங்களைத் தாண்டி உள்ளே போக முடியாது. அவங்க ஓய்வுபெற்ற பிறகுகூட கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை மறக்கவே இல்லை.

Dr. Poorna Chandrika
Dr. Poorna Chandrika

அரசு மனநல மருத்துவமனை பத்தி எந்த ஒரு செய்தி வந்தாலும் அடுத்த நாள் லேண்ட்லைன்ல வரும் முதல் அழைப்பு மேடத்தோடதாதான் இருக்கும். ஒரு மாசம் முன்னாடிகூட அரசு மனநல மருத்துவமனை ஊடகத்துல வந்த செய்தியைப் படிச்சுட்டு உடனே போன் பண்ணி விசாரிச்சாங்க. ஒருமுறை அவங்ககிட்ட நான் `நீங்க எப்படி எப்பவும் ஆக்டிவ்வா இருக்கீங்க'ன்னு கேட்டதுக்கு, சிரிச்சிகிட்டே `நான் இன்னும்கூட கொஞ்சம் ஆக்டிவ்வா இருந்திருக்கலாம்' னு சொன்னாங்க. அவங்க மட்டும் கீழே விழாம இருந்திருந்தா, இன்னும் எங்ககூட பேசிக்கிட்டும் எங்களை உற்சாகப்படுத்திக்கிட்டும் இருந்திருப்பாங்க" குரல் தழுதழுக்க நிறைவுசெய்தார்.