Published:Updated:

`தந்தையின் நினைவுநாளுக்காக சேமித்த பணம்..!’ - சுதந்திர தின விழாவில் மாணவியைப் பாராட்டிய ஆட்சியர்

சுதந்திர தின விழாவில் கலெக்டர்
சுதந்திர தின விழாவில் கலெக்டர் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூரில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் கொரோனா காலத்திலும் சிறப்பாகப் பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த 209 பேருக்கு கலெக்டர் பாராட்டி விருது வழங்கினார். பள்ளி மாணவி ஒருவரையும் வாழ்த்திச் சான்றிதழ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தந்தையின் நினைவுநாளுக்காகச் சேமித்துவைத்த உண்டியல் பணம் ரூ 8,300-ஐ கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய மாணவியை கலெக்டர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். கொரோனா நேரத்திலும் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 209 பேர் பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவியைப் பாராட்டும் கலெக்டர்
பள்ளி மாணவியைப் பாராட்டும் கலெக்டர்

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தேசியக்கொடியை ஏற்றி போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஏற்றுக்கொண்டார். இதில் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா காந்தபுனேனி, கூடுதல் ஆட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளையும் விவசாயிகளையும் பாராட்டி இனிப்பு வழங்கினார்.

இதையடுத்து கொரோனா காலத்திலும் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 209 பேருக்கு பாராட்டு தெரிவித்து நற்சான்றிதழ்கள் வழங்கினார்.பேராவூரணி அருகேயுள்ள நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலெட்சுமி. இவரின் கணவர் திருநீலகண்டன். இவர்களின் ஒரே மகள் சாம்பவி தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். திருநீலகண்டன் நான்கு ஆண்டுளுக்கு முன்பு விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். இதையடுத்து தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் பாக்கியலெட்சுமி விவசாயம் செய்துவருகிறார்.மேலும் பல்வேறு சமூகச் செயல்களையும் செய்துவருகிறார்.

மாணவி சாம்பவி
மாணவி சாம்பவி

இந்த்நிலையில் சாம்பவி தான் சேர்த்து வைக்கும் உண்டியல் பணத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் தன் தந்தையின் நினைவுநாளில் ஆதரவற்ற முதியோர்கள் வசிக்கும் இல்லத்துக்குச் சென்று உணவளித்து உதவிகள் செய்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார். அதேபோல் இந்த ஆண்டும் நினைவுநாளுக்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்வதற்காக ரூ. 8,300 பணத்தைச் சேமித்துவைத்திருந்தார். இந்தநிலையில் கொரோனா தடுப்புப் பணிக்காக முதலமைச்சர் ஸ்டாலின், பொதுமக்களிடம் நிவாரணம் வழங்குமாறு அறிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாம்பவி, தான் சேமித்துவைத்த பணம் ரூ 8,300-ஐ கொரோனா தடுப்புப் பணிக்குப் பயன்படுத்த தன் அம்மா பாக்கியலெட்சுமியுடன் வந்து தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் அப்போது வழங்கினார். தந்தையின் நினைவுநாளுக்காக சேர்த்துவைத்த பணம் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கப்பட்டதை அறிந்து நெகிழ்ந்த மாவட்ட ஆட்சியர், அப்போதே பெரிதும் பாராட்டி வாழ்த்தினார். சுதந்திர தின விழாவிலும் மாணவி சாம்பவியின் செயலைப் பாராட்டி சான்றிதழ் கொடுத்து வாழ்த்தினார்.

விவசாயியை வாழ்த்திய கலெக்டர்
விவசாயியை வாழ்த்திய கலெக்டர்

அதேபோல், தஞ்சாவூர் அருகே வல்லம்புதூர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் என்பவர் குருவாடிப்பட்டி மக்களுக்கு தேவையான அரசின் அனைத்து உதவிகளையும் தாமாக முன்வந்து செய்து கொடுத்துவந்தார். இதற்காக அந்த கிராம மக்கள் தங்கள் ஏற்பாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் வி.ஏ.ஓ-வின் பிறந்தநாளை கேக் வெட்டி வெகு விமர்சையாகக் கொண்டாடினர். இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றது. இவருடைய சேவையைப் பாராட்டியும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

கேரளாவில் சுதந்திர தினம்: தலைகீழாக தேசியக்கொடி ஏற்றிய பாஜக தலைவர்; தேசியக் கொடியை அவமதித்த சிபிஎம்?

தஞ்சாவூர் டி.பி.எஸ் நகரைச் சேர்ந்தவர் பிராங்கிளின். இசைக் கலைஞரான இவர், அரசு அமைத்திருந்த கொரோனா சிகிச்சை மையங்களுக்குச் சென்று கொரோனா பாதித்தவர்களின் மன இறுக்கம் போக்கும் வகையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். பாட்டு, நடனம் என பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதை மறந்து உற்சாகமடைந்ததுடன் அந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கும் பெரும் உதவியாக அது இருந்தது. கிட்டத்தட்ட 14 வாரங்கள் இசை நிகழ்ச்சிகளை இவர் நடத்தியது பலராலும் பாராட்டப்பெற்றது. இந்தநிலையில் அவருக்கும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். இதேபோல் மொத்தம் 209 பேருக்குச் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு