Published:Updated:

`தஞ்சை மாநகரமே துாய்மையாக உள்ளது!' - துப்புரவுப் பணியாளர்களை மேடையேற்றி பாராட்டிய ஆட்சியர்

துப்புரவுப் பணியாளர்கள்
துப்புரவுப் பணியாளர்கள் ( ம.அரவிந்த் )

கலெக்டர் துப்புரவுப் பணியாளர்கள் உட்பட அனைவரையும் மேடைக்கு அழைத்து பாராட்டி சான்றிதழ் கொடுத்ததுடன், ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 ஊக்கப்பரிசாகவும் வழங்கினார்.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்காக இரவு பகல் பாராமல் சிறப்பாகப் பணியாற்றி உழைத்து நகர் தூய்மையாக இருந்ததற்குக் காரணமாக இருந்த துப்புரவுப் பணியாளர்களை விழா நடத்தி கலெக்டர் கோவிந்தராவ் பாராட்டியதுடன் ஒவ்வொருவருக்கும் ஊக்கப்பரிசாக ரூ. 1,000 வழங்கினார். `நாங்க பட்ட கஷ்டத்தைப் பார்த்த கலெக்டர், எங்களை மட்டுமல்ல எல்லோரையும் அழைத்து பாராட்டியிருக்கிறார். அவருக்கு உண்மையிலேயே பெரிய மனசு' எனத் துப்புரவுப் பணியாளர்கள் நெகிழ்ந்தனர்.

பாராட்டு விழாவில் கலெக்டர்
பாராட்டு விழாவில் கலெக்டர்

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு கடந்த 5-ம் தேதி பெரும் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழா நடைபெற்ற நாள்களில் சுமார் 13 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த விழாவுக்காகத் தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டலத்துக்குட்பட்ட 18 நகராட்சிகள், மதுரை நகராட்சி நிர்வாக மண்டலதுக்குட்பட்ட 8 நகராட்சிகள், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சியைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் என 1,272 பேர் கடந்த 30-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தஞ்சாவூரில் பணியாற்றினர்.

இந்த நிலையில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்ற பிறகு, இதை எந்தவிதமான சிறு அசம்பாவிதமும் இல்லாமல் நடத்தி முடித்த தஞ்சை கலெக்டர் கோவிந்தராவை சமூக ஆர்வலர்கள் ரியல் ஹீரோ எனச் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து இந்த வெற்றிக்குக் காரணம் எல்லோருடைய கூட்டு முயற்சியே எனக் கோவிந்தராவ் தெரிவித்தார். அதன் பின்னர், விழா சிறப்பாக அமைய காரணமானவர்களை நேரில் அழைத்து பாராட்ட வேண்டும் என கலெக்டர் விரும்பினார்.

துப்புரவுப் பணியாளர்கள்
துப்புரவுப் பணியாளர்கள்

இதைத் தொடர்ந்து நேற்று தஞ்சையில் பிரபலமான தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவுக்கு அனைவரும் வரவழைக்கப்பட்டனர். இதில் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கலெக்டர், துப்புரவுப் பணியாளர்கள் உட்பட அனைவரையும் மேடைக்கு அழைத்து பாராட்டி சான்றிதழ் கொடுத்ததுடன், ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 ஊக்கப்பரிசாகவும் வழங்கினார்.

அதன் பின்னர் கலெக்டர் கோவிந்தராவ் பேசியதாவது, ``மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய பெரியகோயில் குடமுழுக்கு 5-வது முறையாகத் தற்போது நடந்து முடிந்துள்ளது.1997-ம் ஆண்டு குடமுழுக்கில் நடைபெற்ற சம்பவம் போல் இந்த முறையும் நடைபெறக்கூடாது என்பதற்காக அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு இரவு பகல் பாராமல் பணியாற்றினோம். இந்தக் குடமுழுக்கு விழா என் வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி.

பாராட்டு விழாவில் கலெக்டர்
பாராட்டு விழாவில் கலெக்டர்

நான் இங்கு பொறுப்பேற்ற பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனுடன் கோயில் குடமுழுக்கு தேதியும் அறிவிக்கப்பட்டதால் ஏற்பாட்டுக்கு மிக குறுகிய காலம்தான் இருந்தது. இந்தக் குடமுழுக்கை சிறப்பாக நடத்த வேண்டும் என உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு, அவர்களது வழிகாட்டுதலின்படி செயல்பட்டு இந்த விழா நல்ல முறையில் நடைபெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாநகரம் தற்போது துாய்மையாகக் காட்சியளிக்கிறது. இங்குள்ள மாநகராட்சி பணியாளர்கள் அதை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும். இதற்காகப் பாடுபட்டு உழைத்த அனைவருக்கும் நான் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

பாராட்டு விழாவில் கலெக்டர்
பாராட்டு விழாவில் கலெக்டர்

மேடைக்கு அழைத்து பாராட்டியதில் நெகிழ்ச்சியடைந்த துப்புரவுப் பணியாளர்கள், ``இதுவரை எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு குப்பைகளை அள்ளி, தூசிகளைப் பெருக்கி நகரை சுத்தமாக வைத்திருக்க காரணமாக இருந்திருக்கிறோம். ஆனால், அதற்காக இதுவரை மேடை ஏறியதில்லை, யாரும் ஏற்றியதில்லை. நாங்க பட்ட கஷ்டத்தைப் பார்த்த கலெக்டர் எங்களை மட்டுமல்ல எல்லோரையும் அழைத்து பாராட்டியிருக்கிறார். அவருக்கு உண்மையிலேயே பெரிய மனசு" என நெகிழ்ந்தனர்.

பின் செல்ல