Published:Updated:

``மூணு மாசத்துல மூணு பேரும் ஒண்ணா இருக்கலாம்!” - வீடுகட்ட உதவிய கலெக்டர்; நெகிழ்ந்த சகோதரரர்கள்

பாட்டியுடன் விஷ்ணுவர்தன்

ரேணுகா இடத்திலுள்ள சிக்கல்களைத் தீர்த்து பட்டா வழங்கியதுடன், ரூ.3 லட்சம் நிதி கொடுத்து அந்த இடத்தில் வீடுகட்டும் பணியைத் தொடங்கவைத்தார் மாவட்ட ஆட்சியர்.

``மூணு மாசத்துல மூணு பேரும் ஒண்ணா இருக்கலாம்!” - வீடுகட்ட உதவிய கலெக்டர்; நெகிழ்ந்த சகோதரரர்கள்

ரேணுகா இடத்திலுள்ள சிக்கல்களைத் தீர்த்து பட்டா வழங்கியதுடன், ரூ.3 லட்சம் நிதி கொடுத்து அந்த இடத்தில் வீடுகட்டும் பணியைத் தொடங்கவைத்தார் மாவட்ட ஆட்சியர்.

Published:Updated:
பாட்டியுடன் விஷ்ணுவர்தன்

பட்டுக்கோடை அருகே சிறு வயதில் பெற்றோரை இழந்தும், பின்னர் குடியிருக்க வீடு இல்லாமலும் தொடர் வறுமையைச் சந்தித்தபடி பாட்டியுடன் வாழ்ந்துவந்த சகோதரர்கள் இருவர், தங்களுக்கு வீடுகட்டித் தரச் சொல்லி தஞ்சாவூர் கலெக்டரிடம் உதவி கேட்டனர். அவர்களது வலியை உணர்ந்த கலெக்டர், உடனடியாக அரசு சார்பில் அவர்களுக்கு வீடுகட்டித் தருவதற்கான நடவடிக்கையை எடுத்து அதற்கான பணியையும் தொடங்கியிருக்கிறார். கலெக்டரின் செயலால் அந்தச் சகோதரர்களும், அவர்களின் ஊர் மக்களும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

பட்டுக்கோட்டை அருகேயுள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் (18), விஷ்ணுவர்தன் (16). சகோதரர்கள். பெற்றோர் இறந்தநிலையில் பாட்டி ரேணுகா (65) கூலி வேலைசெய்து பேரன்களை கவனித்துவருகிறார். ரேணுகாவின் குடிசை வீடு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இடிந்துவிட்டது. ரேணுகா கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானம் பேரன்களைப் படிக்கவைப்பதற்கும், சாப்பாட்டுக்குமே போதவில்லை. இதனால் வீட்டைப் பராமரிக்க முடியாமல் போனதில் வீடு இருந்த சுவடே தெரியாத அளவுக்குக் கட்டாந்தரையாக மாறியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வசிக்க வீடு இல்லை, அன்பு காட்டி அரவணைக்க பெற்றோர் இல்லை என்பது போன்ற சிறு வயதில் அனுபவிக்கக் கூடாத கஷ்டங்கள் அனைத்தையும் சகோதரர்கள் இருவரும் அனுபவித்தனர். அவர்களுக்கு இருந்தே ஒரே ஆறுதல், அரவணைப்பு எல்லாமே அவர்களுடைய பாட்டி ரேணுகா மட்டுமே. வெவ்வேறு உறவினர்கள் வீடுகளில் தங்கவைத்து, பேரப்பிள்ளைகளைப் படிக்கவைத்து ஆளாக்கினார் பாட்டி ரேணுகா.

தற்போது சந்தோஷ் டிப்ளோமா படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறார். விஷ்ணுவர்தன் டிப்ளோமா மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார். மூன்று பேரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து ஒவ்வொரு நாளையும் கடந்துவந்தனர். ஆனால் இருக்க வீடு இல்லாததால் மூன்று பேரும் தனித்தனி இடத்தில் இருந்துவந்தனர். வீடு இருந்த இடத்தில் சின்னக் குடிசை அமைத்து ஒன்றாக வாழலாம் என்றால், அந்த இடத்துக்கும் பட்டா இல்லை என்பது துயரமாக அமைந்தது.

களத்துமேட்டில் விவசாயக் கூலி வேலை செய்துவிட்டுத் திரும்பிய பிறகு, படுத்து ஓய்வெடுக்க வீடில்லாமல் பாட்டி ரேணுகா அனுபவித்த கஷ்டங்களை விஷ்ணுவர்தனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதைத் தொடர்ந்து தன் ஊரைச் சேர்ந்த கார்த்தி என்பவர் உதவியுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், ``பொறந்ததுல இருந்தே நாங்க கஷ்டங்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம். சின்ன வயசுலேயே பெற்றோரை இழந்து தவித்தோம். அதன் பிறகு குடியிருக்க வீடு இல்லாமல்போனது. எங்க பாட்டி மட்டும் இல்லைன்னா நாங்க என்னவாகியிருப்போம் என்றே தெரியாது.

வீடு கட்டும் இடத்தில் பாட்டி பேரன்
வீடு கட்டும் இடத்தில் பாட்டி பேரன்

நாங்க மூன்று பேரும் சேர்ந்து ஒன்றாக வாழணும். எங்களுக்கு பட்டா கொடுத்து, வீடு கட்டித் தருவதற்கு உதவி செய்யுங்க” என விஷ்ணுவர்தன் மனு கொடுத்தார். மனுவை பார்த்த கலெக்டர் உடனடியாக அவர்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கையை எடுத்தார். முதலில் ரேணுகா இடத்திலுள்ள சிக்கல்களைத் தீர்த்து பட்டா வழங்கினார். பின்னர் களத்தூர் கிராமத்திலுள்ள ரேணுகாவின் இடத்துக்குச் சென்று பார்த்தார்.

விஷ்ணுவர்தனிடம், நல்ல வீடா கட்டி அவர்கள் வாழ்வதற்கான ஏற்பாட்டைச் செய்வதாகக் கூறியவர், மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து, ரூ. 3 லட்சம் ரேணுகாவின் கையில் வழங்கினார். அத்துடன் அரசு சார்பில் கட்டித்தரப்படும் வீட்டுக்கும் ஏற்பாடு செய்தார். அப்போது இன்ஜினீயரை அழைத்து, எல்லாத்தையும் சேர்த்து சீக்கிரமா, சூப்பரா ஒரு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி கட்டளையிட்டார். ``நடப்பது கனவு மாதிரியே இருக்கு’’ என்று கலங்கிய பாட்டியும் ``பேரன்களும் தெய்வம் வந்து கூட நிக்குற மாதிரி இருக்குது’’ என்று கலெக்டரிடம் உருகினர்.

தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

``உங்களை மாதிரி தவிச்சு நிக்குற ஆளுங்ளைத் தாங்கிப் பிடிச்சு காப்பத்தணும். அதுதான் அரசோட வேலை. அதைத்தான் செஞ்சிருக்கேன்” என்றுவிட்டு, புது வீடு குடி போகும்போது வருவதாகச் சொல்லிட்டுக் கிளம்பினார். இது குறித்து விஷ்ணுவர்தனிடம் பேசினோம். ``நான் சின்ன வயசுல இருக்கும்போது அப்பா கருணாநிதி விபத்தில் இறந்துட்டார். அடுத்த சில வருடங்களில் அம்மா சரளா கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

அம்மா, அப்பா இல்லாம தவிச்சு நின்ன எங்களை ரெண்டுமா இருந்து பாட்டி கவனிச்சுக்கிட்டார். எங்களுக்குனு இருக்க ஒரு வீடு இல்லாமப்போனது எங்களோட துயரமா தொடர்ந்தது. ஒவ்வொருத்தர் மேல பாசத்தைவெச்சுக்கிட்டு ஆளுக்கொரு இடத்துல இருந்தோம். எங்க கஷ்டத்தைச் சொல்லி `வீடுகட்ட உதவி செய்யுங்க சார்’னு கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். அதப்படிக்கும்போதே கலெக்டர் சாரின் கண்கள் கசிந்தன. `சரிப்பா நல்லது நடக்கும்’னு சொல்லி எங்களை அனுப்பிவைத்தவர் அடுத்த வாரமே எங்க ஊருக்கு வந்து வீடு கட்டுவதற்கான நிதி உதவி செய்தார்.

மேலும் உடனடியாக வீடு கட்டும் வேலையைத் தொடங்கவெச்சார். பொருள் எல்லாம் வந்து இப்போ வேலை ஆரம்பமாகிவிட்டது. `மூணு மாசத்துல புது வீடு கட்டி முடிச்சுடுவாங்க. குடி போயிரலாம். மூணு பேரும் ஒரே இடத்துல ஒண்ணா இருக்கலாம்’னு கலெக்டர் சொன்னார். அது நடக்கப் போறதை நெனச்சா எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு மனுவுல இதை எங்களுக்குச் சாத்தியமாக்கிக் காட்டிய கலெக்டர் சாருக்கு காலத்துக்கும் கடன்பட்டிருக்கோம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.