Published:Updated:

`கேரள எல்லை... கூடங்குளம்... மகேந்திரகிரி இஸ்ரோ மையம்!’ - கொரோனா தடுப்பில் தீவிரம் காட்டும் நெல்லை

மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ்
மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ்

கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது அறிகுறியுடன் இருப்பவர்களை உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வருவோர் கண்காணிக்கப்படுகிறார்கள்.

கேரள எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள நெல்லை மாவட்டத்தில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் இதுவரை கொரோனா அறிகுறியுடன் வந்த 12 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை அரசு மருத்துவமனை
நெல்லை அரசு மருத்துவமனை

இது தவிர, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் சிலருக்கு அச்சம் இருந்ததால், தாங்களாகவே தனிமைப்பட்டிருந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்ததில், யாருக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்படவில்லை.

நெல்லை அரசு மருத்துவமனையில் தற்போது ஒரு பெண், ஒரு ஆண் மட்டுமே அறிகுறிகளுடன் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். அவர்களுக்கு கோரோனா இருப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அரசு மருத்துவமனைகளை ஆய்வுசெய்து வருகிறார். 

ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ்
ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ்

வள்ளியூர் மருத்துவமனையை ஆய்வுசெய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், ”நெல்லை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையம் ஆகியவற்றில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தற்காலிகப் பணியாளர்கள் பலர் பணியாற்றுகிறார்கள். அவர்களின் உடல் நிலையைக் கண்காணிக்க, அந்த நிறுவனங்களின் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை துணை ஆணையர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கூடங்குளம் அணு மின் நிலையம்
கூடங்குளம் அணு மின் நிலையம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தைப் பொறுத்த வரையிலும், அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வெளி மாநிலத்தவரைப் பரிசோதிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சளி, இருமல் உள்ளிட்ட சிறிய அறிகுறி இருந்தால்கூட பணிக்கு அனுமதிப்பதில்லை. தற்போதைய சூழலைப் புரிந்து, அவசியப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளுமாறு அணுஉலை நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.

நெல்லை மாவட்டத்தில், அரசு மருத்துவமனையில் போதுமான அளவுக்கு மருத்துவர்களும் படுக்கைகளும் உள்ளன. சில தனியார் மருத்துவமனைகளும் தங்களிடம் கொரோனாவுக்கு தனியாக சிகிச்சை அளிக்கும் அளவுக்கு வார்டுகள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அரசு மருத்துவமனையில் 400 பேர் தங்கி சிகிச்சை பெறும் அளவுக்கு தயார் நிலை உள்ளது” என்று தெரிவித்தார்.

எல்லையில் சோதனை
எல்லையில் சோதனை

இதனிடையே, தென்காசி மாவட்டத்தில் கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. சொந்த வாகனங்களில் அங்கிருந்து வரும் உள்ளூர் நபர்களும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே தமிழக எல்லைக்குள் வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு