Published:Updated:

நாமக்கல்: `படிச்சா, எல்லாம் மறைஞ்சிடுமா?’ - சாதி ரீதியாகத் தாக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்

சாதி ரீதியாகத் தாக்கப்பட்ட சசிகுமார்
சாதி ரீதியாகத் தாக்கப்பட்ட சசிகுமார்

வகுரம்பட்டி பஞ்சாயத்தில் எங்க அப்பாவை வேலையைவிட்டு நின்னுக்க சொல்லுகிறார்கள். புகாரை திரும்பப் பெறவில்லையென்றால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுகிறார்கள்.

`தன்னை உயர்ந்த சாதியாகவும் இன்னொரு மனிதனை தாழ்ந்த சாதியாகவும் கருதுபவன் மனநோயாளி' என்றார் அண்ணல் அம்பேத்கர். கல்வி பயின்றும், காலங்கள் மாறியும் இன்னும் சக மனிதனை மனிதனாகக்கூட மதிக்காமல் சாதி வன்மத்தில் ஈடுபடும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். நாமக்கல் வகுரம்பட்டியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் சசிகுமார். இவர் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார்.

சாதி ரீதியாக தாக்கப்பட்ட சசிகுமார்
சாதி ரீதியாக தாக்கப்பட்ட சசிகுமார்

இவர் கடந்த மே மாதம் தன் சொந்த கிராமத்தில் வாக்கிங் செல்லும்போது சாதியவாதிகளால் தாக்கப்பட்டார். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக தன் உயிருக்கும் தந்தையின் பணிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

இதுபற்றி சசிகுமாரிடம் கேட்டதற்கு, ``எங்கப்பா பேரு தங்கவேல். அம்மா தனலட்சுமி. எங்க சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி. எங்கப்பா வகுரம்பட்டி பஞ்சாயத்தில் தண்ணீர் தொட்டி திறந்துவிடும் பணி செய்கிறார். நாங்கள் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். நான் எம்.இ முடித்து கோவையில் தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினேன். பிறகு, சென்னை சீர்மிகு சட்டக் கல்லூரியில் சேர்ந்து தற்போது இறுதி ஆண்டு படித்து வருகிறேன்.

கோபி, சதீஷ்
கோபி, சதீஷ்

கொரோனா பரவலைத் தடுக்க அரசு மார்ச் மாதம் லாக்டெளன் அறிவித்தது. அதையடுத்து எங்க சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். நான் காலையும் மாலையும் வாக்கிங் செல்லுவது வழக்கம். அதே போல எங்க ஊரிலிருந்து பக்கத்து ஊரான வசந்தபுரத்துக்கு நானும் என் நண்பர் சக்திவேலும் கடந்த மே மாதம் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு வாக்கிங் போனோம்.

அங்கு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கோபி, சதீஷ் அமர்ந்திருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் இங்கு வாங்கடான்னு கூப்பிட்டாங்க. நாங்களும் போனோம். என் நண்பர் சக்திவேலிடம் பேசியவர்கள், 'இவன் தண்ணீர் எடுத்து விடும் ............ (சாதி பெயரைச் சொல்லி) தங்கவேல் பையன்தானே' என்றார்கள். 'நீதான் ஃபேஸ்புக்ல அம்பேத்கர், பெரியார் பற்றி எழுதுவதா?' என்றார்கள். அதற்கு நான், 'எதற்கு சாதி பெயரை சொல்லுகிறீர்கள்' என்றேன்.

சாதி ரீதியாகத் தாக்கப்பட்ட சசிகுமார்
சாதி ரீதியாகத் தாக்கப்பட்ட சசிகுமார்

அதற்கு அவர்கள், 'நாங்க எங்க சாதியைப் பெருமையா சொல்லுவதைப் போல நீயும் உங்க சாதியைப் பெருமையா சொல்லுடா... பார்க்கலாம். படிச்சா சாதி மறைஞ்சிடுமா... (சாதியைச் சொல்லி) நாயே'' என்றார்கள். அதற்கு நான் ''நீங்க குடிச்சிருக்கீங்க, தப்பா பேசுகிறீங்க, நான் போறேன்'' என்று சொன்னதற்கு செருப்பைக் கழட்டி கன்னத்தில் அடித்து சட்டையைக் கிழித்து தாக்கினார்கள். அவர்களுக்கு பயந்து ஓடினேன். கற்களைக் கொண்டு அடித்தார்கள். இதனால் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதோடு நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. கோபியும் சதீஷூம் வசதி படைத்தவர்கள். கோழிப்பண்ணை உரிமையாளர்கள். கோபியின் மாமியார் ராணி தி.மு.க மாநில மகளிர் அணி துணைச் செயலாளராக இருக்கிறார். கோபியின் பெரியப்பா மகன் அ.தி.மு.க நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும் இருக்கிறார். அதனால் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வகுரம்பட்டி பஞ்சாயத்தில் எங்க அப்பாவை வேலையை விட்டு நின்னுக்க சொல்கிறார்கள். புகாரை திரும்பப் பெறவில்லையென்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள்.

என் வயதுடைய மாற்று சமூகத்து பசங்க எங்க அப்பா வயதுடைய எங்க சமூக பெரியவர்களை வாடா, போடான்னுதான் கூப்பிடுவாங்க. அதையெல்லாம் சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். ஆனால், எந்தத் தவறும் செய்யாத என்னைக் கூப்பிட்டு அடித்து அசிங்கப்படுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்'' என்றார் கண்ணீரோடு.

இதுபற்றி கோபி, சதீஷூக்கு தொடர்பு கொண்டோம். செல் ஸ்விட்ஸ் ஆஃப் என்றே வந்தது. அதையடுத்து கோபியின் மாமியாரும் தி.மு.க மாநில மகளிர் அணி துணை செயலாளருமான ராணியிடம் பேசினோம், ``சின்ன பிரச்னையைத் தேவையில்லாமல் ஊதி பெரிதாக்குகிறார்கள். கோபி உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவர்களெல்லாம் எங்க கோழிப் பண்ணையில் வேலைபார்த்தவர்கள். எதற்காக காவல் நிலையில் புகார் கொடுத்து பிரச்னை செய்கிறார்களென்று தெரியவில்லை'' என்றார்.

சதீஷ்
சதீஷ்

இதுபற்றி நாமக்கல் எஸ்.பி சக்திகணேஷிடம் கேட்டதற்கு, ''இச்சம்பவம் பற்றி என் கவனத்துக்கு வரவில்லை. அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. பாதிக்கப்பட்ட அந்த இளைஞனை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள். மேற்கொண்டு குற்றச் செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு