நாகர்கோவில் மாநகராட்சியில் 17-வது வார்டில் 21-வயது ஆன கல்லூரி மாணவி ஐ.எஸ்.கெளசுகி தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் 1,500 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க-வின் வசந்தாவை விட 641 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார் கெளசுகி.
கெளசுகியிடம் பேசினோம். ``எங்க வீடு நாகர்கோவில் நெசவாளர் காலணியில் இருக்கு. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முடித்து டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்புப் படிக்க அப்ளை பண்ணியிருக்கேன். எதிர்காலத்தில நீதிபதியா வரணும்ங்கிறது என்னோட ஆசை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எங்க குடும்பமே தி.மு.க குடும்பம்தான். என் அப்பா இளஞ்செழியன் மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளராக இருக்கிறார். அம்மா சரிதா, தங்கை நவீனா. எங்க குடும்பம் அரசியல் குடும்பம் என்பதால் மக்கள் பணி செய்யும் ஆர்வம் எனக்கு இயல்பாகவே இருக்கு. முதன்முறையா தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
எங்க வார்டில் ரோடு பிரச்னைதான் பெரிய பிரச்னையா இருக்கு. அதை சரி செய்ய முயற்சி எடுப்பேன். எங்க ஏரியாவுக்கு 54-ம் நம்பர் பஸ் வந்துகிட்டு இருந்தது, இப்ப வரல. அந்த பஸ்ஸை மீண்டும் கொண்டு வரணும். தெருவிளக்கு, சாக்கடை வசதி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவேன். நான் கல்லூரிக்குப் படிக்கப் போனாலும், இன்னொரு பக்கம் மக்கள் பணிகள்லயும் என் கடமையை செய்வேன்.
என்னைப்போன்ற கல்லூரி மாணவிகள் அரசியலுக்கு வர வேண்டும். அப்பத்தான் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும், மாநிலம் முதன்மையான இடத்துக்கு வரும். வீடு வீடாக ஓட்டுக்கேட்க போகும்போது மக்களுக்கு அவ்வளவு பிரச்னைகள் இருப்பதை சொன்னாங்க. பெரியவங்க முதியோர் பென்ஷன் வர்றதுல உள்ள சிக்கல்கள் பற்றி சொன்னாங்க. மக்கள் பிரச்னைகளை கேட்கும்போது சமுதாயத்துக்கு பணி செய்யணும்கிற எண்ணம் இன்னும் அதிகமாகுது" என்றார்.