விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள அய்யந்தோப்பு பகுதியில் இயங்கிவருகிறது 'கோவிந்தசாமி அரசுக் கலைக்கல்லூரி'. இந்தக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தின்போது, மாணவர்கள் அரசுப் பேருந்துமீது ஏறி நடனமாடிய வீடியோ காட்சிகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

எதிர்வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, இந்தக் கல்லூரியில் நேற்றைய தினம் (12.01.2023) பொங்கல் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. துறைவாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கலைநிகழ்ச்சிகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருக்கின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, மதியம் 2 மணிக்கு மேல் கல்லூரி அருகேயுள்ள சாலைக்கு வந்த மாணவர்கள்... மேள தாளங்களுடன் குத்தாட்டம் போட்டிருக்கின்றனர். மேலும், அந்த வழியாகச் சென்ற அரசுப் பேருந்தை மறித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது, அதில் சில மாணவர்கள் பேருந்தின்மீது ஏறி குத்தாட்டம் போட்டுவிட்டு, பேருந்தின் மேலிருந்து சர்வ சாதாரணமாகக் கீழே குதித்து இறங்கியிருக்கின்றனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறை அதிகாரிகள், மாணவர்களை அங்கிருந்து களைத்தனராம். அதன் பின்னரே, அரசுப் பேருந்தை அங்கிருந்து ஓட்டுநர் இயக்கிச் சென்றிருக்கிறார். சென்னையில் அஜித் ரசிகர் ஒருவர், 'துணிவு' திரைப்படக் கொண்டாட்டத்துக்காக லாரியின்மீது ஏறி நடனமாடி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் சிலர் அரசுப் பேருந்தின்மீது ஏறி குத்தாட்டம் போட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.