Published:Updated:

தஞ்சாவூர்: `இந்த மேடை சம்திங் ஸ்பெஷல்!’ - கொரோனா நோயாளிகளை நெகிழ வைத்த ரோபோ சங்கர்

 நடிகர் ரோபோ சங்கர்
நடிகர் ரோபோ சங்கர் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 4,400 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தஞ்சாவூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மனஅழுத்தத்தை போக்குவதற்காக கலெக்டர் கோவிந்தராவ், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அழைத்து வந்து மிமிக்கிரி உள்ளிட்ட காமெடி ஷோவை நடத்த வைத்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கொரோனா சிகிச்சை மையத்தில் ரோபோ சங்கர்
கொரோனா சிகிச்சை மையத்தில் ரோபோ சங்கர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 4,400 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எம்.எல்.ஏ-க்கள் டி.கே.ஜி நிலமேகம், கோவிந்தராஜ், ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கலெக்டர் கோவிந்தராவ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் கல்லூரிகள் மற்றும் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் கொரோனா சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

கலெக்டர் கோவிந்தராவ்
கலெக்டர் கோவிந்தராவ்

இதில், சிகிச்சை பெற்று வருபவர்களின் மனஅழுத்ததைப் போக்கும் விதமாக சிகிச்சை மையங்களில் நடிகர் ரோபோ சங்கர், திண்டுக்கல் சரவணன் ஆகியோரை வரவழைத்து காமொடி ஷோ நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் கோவிந்தராவ் கூறுகையில், ``வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ என்பார்கள் அதற்கு ஏற்றாற்போல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எந்தவிதமான மனஅழுத்தமும் இல்லாமல் சிரித்தபடியே இருக்க வேண்டும் என நினைத்தேன்.

நடிகர் ரோபோ சங்கர் தன்னைப் பற்றிய எந்தக் கவலையும் கொள்ளாமல் கொரோனா சிகிச்சை மையங்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களின் மனஅழுத்ததைப் போக்குவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

தஞ்சாவூர்: `ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது!' - பாராட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்

பின்னர், கொரோனா சிகிச்சை மையங்களில் நடிகர் ரோபோ சங்கர், திண்டுக்கல் சரவணன் ஆகியோர் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தினர். எல்லோரையும் ரோபோ சங்கர் மெய்மறந்து சிரிக்க வைத்தார். பலரும் தங்களுடைய மனது லேசாகிவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த நேரத்தில் தாமாக முன்வந்து இதைச் செய்த ரோபோ சங்கரை பாராட்டுகிறேன்’’ என்றார்.

இதுகுறித்து ரோபோ சங்கர் கூறுகையில், ``கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை அவர்கள் மீது அன்பு செலுத்துவதுடன், சிரிக்கை வைத்தாலும் சீக்கிரமே அவர்கள் அதிலிருந்து குணமாகிவிடுவார்கள். நான் கொரோனா சிகிச்சை மையங்களுக்குச் சென்று நகைச்சுவை மூலம் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சிரிக்க வைக்க நினைத்தேன்.

நடிகர்கள் ரோபோ சங்கர், திண்டுக்கல் சரவணன்
நடிகர்கள் ரோபோ சங்கர், திண்டுக்கல் சரவணன்

என் எண்ணத்துக்கு வடிவம் கொடுத்து பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தார் தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ். மிமிக்கிரி உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளை நண்பர் திண்டுக்கல் சரவணனுடன் இணைந்து செய்தேன். பலர் தங்களை மறந்து மனம்விட்டு சிரித்தனர். அப்போது ஒருவர், `சார் தங்களுக்குத் தொற்று ஏதும் ஏற்பட்டுவிடும் என எல்லோரும் பயந்து ஒதுங்குகிற நிலையில், நீங்க எந்தக் கவலையும்படமால் எங்களை சிரிக்க வைச்சீங்க. உங்களுக்கு தைரியம் அதிகம் என்பதையும் தாண்டி, ரொம்பப் பெரிய மனசு’ என நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்.

அப்போது, `நான் எத்தனையோ மேடைகளில் ஏறி இருக்கிறேன் ஆனால், இந்த மேடையையும், உங்களை சிரிக்க வைத்ததையும் எண்ணிப் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்’ என்றேன். தமிழகம் முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் இதைச் செய்ய இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

`பன்றிக் காய்ச்சல்' வதந்தி டு கொரோனா தொற்று... எப்படியிருக்கிறார் அமித் ஷா?

கும்பகோணத்தைச் சேர்ந்த கொரோனா நோயாளி ஒருவர் கூறுகையில், ``எங்க குடும்பத்தில் எல்லோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், ஒருவித மனஅழுத்தம் ஏற்பட்டது. ஆனால், சிகிச்சை மையத்தில் யோகா, நகைச்சுவை ஷோ என நாளுக்கு நாள் புதுமையாக ஏதாவது ஒன்றைச் செய்கிறார்கள். இதனால் கொரோனா வார்டில் இருக்கிறோம் என்பதே மறந்து விடுகிறது. கலெக்டர் உள்ளிட்டர்வர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர் என்பதற்கு எங்க சிரிப்பே சாட்சியாக இருக்கிறது’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு