Published:Updated:

`93 கடைகள் தகர்ப்பு; 46 வணிக வளாகங்களுக்கு சீல்!'- நகர வளர்ச்சிக்காக நாகர்கோவிலில் நடந்த அதிரடி

ஒரு பெட்ரோல் பங்க் அகற்றப்பட்டது. அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான மருத்துவமனை, வடசேரி ஜங்சனில் மாநகராட்சிக்குச் சொந்தமான 93 கடைகள் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டுள்ளன. பார்க்கிங் வசதி இல்லாத 46 வணிகவளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

சாலை ஓரஆக்கிரமிப்பு அகற்றம்
சாலை ஓரஆக்கிரமிப்பு அகற்றம்

நாகர்கோவில் மாநகராட்சிக்குச் சொந்தமான 93 கடைகள், அரசு மருத்துவமனை ஆகியவை அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட தகவல் குமரி மாவட்ட மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சியாக மாற்றப்பட்டு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு அடிப்படை கட்டமைப்பான சாலை வசதிக்கு மாநகராட்சி நிர்வாகம் பெரும் முயற்சி எடுத்துவருகிறது.

மாற்றி அமைக்கப்படும் வணிக வளாகங்கள்
மாற்றி அமைக்கப்படும் வணிக வளாகங்கள்

நாகர்கோவிலின் முக்கிய ஜங்சன்களில் ஒன்றான வேப்பமூடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த டாக்சி ஸ்டாண்டை அகற்ற வேண்டும் என நான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தும் எந்த முடிவும் எட்டவில்லை. ஆணையர் சரவணகுமார் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் பேசி மாற்று இடம் கொடுத்து, ஸ்டாண்டுக்காக அமைக்கப்பட்ட கொட்டகையை அகற்றிவிட்டார். அடுத்ததாக வேப்பமூடு பகுதியில் இருந்த ஒரு பெட்ரோல் பங்க் அகற்றப்பட்டது. மேலும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான மருத்துவமனை, வடசேரி ஜங்சனில் மாநகராட்சிக்குச் சொந்தமான 93 கடைகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

பார்க்கிங் வசதி இல்லாத சுமார் 46 வணிகவளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலான கட்டடங்கள் மாற்றி அமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அரசு நிலங்கள் இல்லாத இடத்தில் சாலைகளை நேர்படுத்த தனியாரிடம் இடம் பெற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி பகுதியில் சாலையை நேர்படுத்துவதற்காக தனியார் பகுதியைப் பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலை நேராக அமைக்கப்பட்டால் வடசேரி பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பேருந்துகள் சிரமமின்றி சென்றுவரும்.

எஸ்.ஆர்.ஸ்ரீராம்
எஸ்.ஆர்.ஸ்ரீராம்

கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்த கடைகளின் முன் பக்கங்கள் பார்க்கிங் வசதிக்காக சுமார் 20 அடிவரை இடிக்கப்படும் பணிகள் நடந்து வருகின்றன. கலெக்டர் அலுவலக ஜங்சனில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் விதமாக, கலெக்டர் அலுவலக காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டு, அங்கிருக்கும் வளாகத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோட்டாறு ரயில் நிலையம் செல்லும் சாலை, வடசேரி, வேப்பமூடு சாலை என இதுவரை பத்திற்கும் மேற்பட்ட சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

கோர்ட் ரோடு, ஒழுகினசேரி சாலை, கோட்டாறு செடிக்குளம் சாலை என முக்கிய சாலைகளை விரிவாக்குவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் சில கோயில் டிரஸ்டுகளுக்குச் சொந்தமான இடங்களை சாலை விரிவாக்கத்திற்காக அந்த நிர்வாகிகளே மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்துள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சியில் அனைத்துச் சாலைகளும் இரட்டை வழிச்சாலைகளாக மாற்றும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதுபோன்று தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களிலும் சாலை விரிவாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்றார்.

ஆணையர் சரவணகுமார்
ஆணையர் சரவணகுமார்

இதுபற்றி நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் கேட்டதற்கு, "நகர வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரம் சாலைகள். விபத்தில்லாத வகையில் சாலைகள் மற்றும் நடைபாதைகள் ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சீர்செய்யும் பணியைச் செய்துவருகிறோம்" என்றார் சுருக்கமாக.