Published:Updated:

முன்னறிவிப்பின்றி மாட்டிறைச்சி கடைகள் இடிப்பு?- ஆணையர்மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் புகார்

பதாகைகளுடன் மாட்டிறைச்சி வியாபாரிகள்
News
பதாகைகளுடன் மாட்டிறைச்சி வியாபாரிகள்

``மற்ற இறைச்சிக்கடைகளை நடத்த அனுமதிக்கும்போது, இதற்கு மட்டும் அனுமதி மறுக்க காரணம் என்ன? இந்தச் சந்தையில்தான் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக மாட்டிறைச்சி விற்கப்பட்டு வருகிறது."- மாரிமுத்து

முன்னறிவிப்பின்றி மாட்டிறைச்சி கடைகள் இடிப்பு?- ஆணையர்மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் புகார்

``மற்ற இறைச்சிக்கடைகளை நடத்த அனுமதிக்கும்போது, இதற்கு மட்டும் அனுமதி மறுக்க காரணம் என்ன? இந்தச் சந்தையில்தான் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக மாட்டிறைச்சி விற்கப்பட்டு வருகிறது."- மாரிமுத்து

Published:Updated:
பதாகைகளுடன் மாட்டிறைச்சி வியாபாரிகள்
News
பதாகைகளுடன் மாட்டிறைச்சி வியாபாரிகள்

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான சந்தைக் கடையில் இயங்கி வந்த 11 மாட்டிறைச்சிக் கடைகள் கடந்த 22-ம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி நகராட்சி நிர்வாகத்தால் இடித்து அகற்றப்பட்டதாகக் கூறி மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் மாட்டிறைச்சி வியாபாரிகள் பதாகைகளுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்தனர்.
மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாரிமுத்து நம்மிடம் பேசுகையில்,
``புஞ்சை புளியம்பட்டி நகராட்சியின் சந்தைக் கடைகளில் ஆடு, மாடு, பன்றி, கோழிக்கறிக்கடைகள் இயங்கி வருகின்றன.

இதில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு வரும் 11 மாட்டிறைச்சி கடைகளை கடந்த 22-ம் தேதி அதிகாலை நகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்திவிட்டனர். இதற்கு எந்த காரணமும் கூறவில்லை. முன்னறிவிப்பு நோட்டீஸும் வழங்கவில்லை. கேட்டதற்கு பொதுமக்கள் ஆட்சேபணை தெரிவிக்கிறார்கள் என்கிறார்கள். இதே சந்தைக் கடையில் பன்றி, ஆடு, கோழி இறைச்சிக்கடைகளும் இருக்கின்றன. இந்த மாட்டிறைச்சிக் கடைகள் சந்தையின் கடைக்கோடியில்தான் இருக்கின்றன. ஆனால் ஏதோ ஒரு சிலரை திருப்திப்படுத்துவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் நகராட்சி ஆணையர் ஈடுபட்டிருக்கிறார்.

மாரிமுத்து
மாரிமுத்து

கடைகளை அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அப்போது, கடைகளை நடத்திக் கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் வாய்மொழியாக உத்தரவிட்டது. அதை நம்பி தற்காலிகமாக கடையை போட்டால், அங்கு வரும் நகராட்சி ஊழியர்கள், `கறிக்கடையை திறந்தால் பினாயில் ஊற்றுவோம்' என்று மிரட்டுகிறார்கள். பெரும்பாலும் மாட்டிறைச்சிக் கடைகளை நடத்துவோர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இதை நம்பியிருக்கும் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்திருக்கின்றன. இது குறித்து ஆணையரிடம் புகார் கூறியபோது, `இங்கு மாட்டிறைச்சிக் கடைகளை நடத்தக்கூடாது' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

மற்ற இறைச்சிக் கடைகளை நடத்த அனுமதிக்கும்போது, இதற்கு மட்டும் அனுமதி மறுக்க காரணம் என்ன, இந்தச் சந்தையில்தான் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக மாட்டிறைச்சி விற்கப்பட்டு வருகிறது. இங்கு கடை வேண்டாமெனில் மாற்று இடத்தையாவது நகராட்சி நிர்வாகம் ஒதுக்கித் தந்த பிறகு கடையை அப்புறப்படுத்தியிருக்கலாம். பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு கடை நடத்தி வந்த பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கத்தோடு நகராட்சி ஆணையர் செயல்படுகிறார்.
இதனை குறிப்பிட்டு ஆணையரிடம் கேட்டால், `இறைச்சிக்கூடம் (ஸ்லேடர் ஹவுஸ்) தனியாகக் கட்டி கொடுத்தப் பிறகு கடைகளை நடத்திக் கொள்ளலாம்' என்கிறார். அதுவரையிலும் அதேஇடத்தில் மாட்டிறைச்சி கடைகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும், நோட்டீஸ் அளிக்காமல் கடைகளை இடித்து அப்புறப்படுத்தியதற்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
நகராட்சிக்கு நுழைவு வரி செலுத்தியே கடைகள் நடத்தப்பட்டு வந்தன. அப்படி இருக்கும்போது நகராட்சி கவுன்சிலில் யாருடைய அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக கடைகளை இடித்து அப்புறப்படுத்திய நகராட்சி ஆணையர் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு நின்ற மாட்டிறைச்சி வியாபாரிகள்
ஆட்சியர் அலுவலகம் முன்பு நின்ற மாட்டிறைச்சி வியாபாரிகள்

பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை கெடுப்பதும் ஒருவகையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மீறும் செயல் ஆகும். இந்தப் பிரச்னைக்கு உரிய தீர்வு காணாவிடில் வரும் 26-ம் தேதி நகராட்சி அலுவலகம் முன்பு ஆணையரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதுடன், உயர் நீதிமன்றத்தை அணுகவும் முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.

இது குறித்து நகராட்சி ஆணையர் உசேனிடம் பேசினோம். ``சந்தைக் கடையில் மாட்டிறைச்சிக் கடை போட்டு 7 ஆண்டுகள்தான் ஆகின்றன. நோட்டீஸ் கொடுத்த பிறகே கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. ஆடு, பன்றிகளை வெட்ட இறைச்சிக்கூடம் இருக்கிறது. மாட்டிறைச்சிக்கான இறைச்சிக் கூடம் இல்லை. அதனைக் கட்டி முடித்ததும் அனுமதியளிக்கப்படும். அதுவரையிலும் மாட்டிறைச்சிக் கடைகளை நடத்த அனுமதியளிக்க முடியாது" என்றார்.