Published:Updated:

அன்று ஒரு கோடி ரூபாய், இன்று ரூ.10 லட்சம்... `தகைசால் தமிழர்’ நல்லகண்ணுவின் போராட்ட வரலாறு!

`தகைசால் தமிழர்’ விருதுடன் இரா.நல்லகண்ணு

விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்து சிறைக்குச் சென்ற இரா.நல்லகண்ணு, நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.

அன்று ஒரு கோடி ரூபாய், இன்று ரூ.10 லட்சம்... `தகைசால் தமிழர்’ நல்லகண்ணுவின் போராட்ட வரலாறு!

விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்து சிறைக்குச் சென்ற இரா.நல்லகண்ணு, நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.

Published:Updated:
`தகைசால் தமிழர்’ விருதுடன் இரா.நல்லகண்ணு

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில், ‘தகைசால் தமிழர்’ விருது உருவாக்கப்பட்டு, விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான இரா.நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டிருக்கிறது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூ. 10 லட்சமும் பாராட்டுச் சான்றிதழும்கொண்ட தகைசால் தமிழர் விருதை நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

நல்லகண்ணு,  சங்கரய்யா
நல்லகண்ணு, சங்கரய்யா

தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ. 10 லட்சத்துடன் தன் சொந்தப் பணமான ஐயாயிரம் ரூபாயையும் சேர்த்து, பத்து லட்சத்து ஐயாயிரம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு ஸ்டாலினிடம் நல்லகண்ணு வழங்கினார். இதேபோல, கடந்த ஆண்டு தகைசால் தமிழர் விருதுடன் வழங்கப்பட்ட பத்து லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு என்.சங்கரய்யா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் எல்லைகளைக் கடந்து, அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படும் நல்லகண்ணு, பொதுவாழ்க்கையில் எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குபவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர், சுதந்திர இந்தியாவிலும் ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்லகண்ணு, பள்ளிப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். அதிராத குரலில் பேசும் இயல்புகொண்ட நல்லகண்ணுவுக்கு, ஆதிக்க சக்திகளை ஆட்டம்காண வைத்த பெரும் வரலாறு உண்டு. நல்லகண்ணுவிடம் பேசினோம்.

நல்லகண்ணு
நல்லகண்ணு

“எங்கள் ஊரில் விடுதலைப்போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. பெரிய தலைவர்களெல்லாம் எங்கள் ஊர் வழியாகச் செல்வார்கள். ஜவஹர்லால் நேரு எங்கள் ஊர் வழியாகத்தான் கொழும்புக்குச் சென்றார். எங்கள் ஊருக்கு மகாத்மா காந்தி வந்தபோது, என் நண்பர்களுடன் சென்று அவரைப் பார்த்தேன். எங்கள் ஊரில் போராட்டங்கள் நடக்கும்போது, பாரதியாரின் பாடல்களை வீதிகளில் நாங்கள் பாடிச் செல்வோம்.

குறிப்பாக, “என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்...” என்ற பாடலை அடிக்கடி பாடுவோம். படிப்பைவிட என் கவனம் முழுவதும் விடுதலைப் போராட்டத்தில்தான் இருந்தது. கம்யூனிஸ்ட் கொள்கை என்னை ஈர்த்தது. 1943-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் கிளைச் செயலாளராக ஆனேன்.

நல்லகண்ணு
நல்லகண்ணு

அதன் பிறகு, `ஜனசக்தி’ பத்திரிகையில் பணிபுரிவதற்கு கட்சி என்னைப் பணித்தது. 1946-ம் ஆண்டு சென்னைக்கு வந்து மூன்று மாதங்கள் ஜனசக்தியில் பணியாற்றினேன். பின்னர், மீண்டும் விவசாயிகள் சங்கப் பணிக்குச் சென்றுவிட்டேன். நாங்குனேரி தாலுகாவில் விவசாயிகளின் உரிமைகளுக்காக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினோம். ‘தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்‘ என்ற புதிய முழக்கம் அந்தப் பகுதியில் எதிரொலித்தது.

1950-ம் ஆண்டு நெல்லை சதி வழக்கு போடப்பட்டது. மத்திய, மாநில அரசுகளைக் கவிழ்க்க பொது வேலைநிறுத்தங்களுக்குத் தூண்டிவிடுவது, ஆயுதம் தாங்கிய புரட்சியை நடத்துவது, அதற்காக மாவட்டம் முழுவதும் வன்முறை மூலம் சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைப்பது, அதற்குத் தடையாக இருப்பவர்களைத் தீர்த்துக்கட்டுவது, தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆயுதப்பயிற்சி அளிப்பது, வெடிகுண்டுகள் தயாரிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கம்யூனிஸ்ட்டுகள் மீது சுமத்தப்பட்டு நெல்லை சதி வழக்கு தொடரப்பட்டது.

நல்லகண்ணு
நல்லகண்ணு

சரக்கு ரயில் வண்டி கவிழ்ப்பு, போலீஸ் ஆள்காட்டி ஒருவர் கொலை, பதுக்கல் நெல் கண்டுபிடிக்கப்பட்டு ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டது எனப் பல குற்றச்சாட்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பாலதண்டாயும், ப.மாணிக்கம், மீனாட்சிநாதன் உட்பட 109 பேர் 1949-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டோம். குற்றமற்றவர்கள் என்று 42 பேர் விடுவிக்கப்பட்டனர். 67 பேர் மீது செஷன்ஸ் நீதிபதி விசாரணை நடத்தினார். 1952, ஆகஸ்ட் 11-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், எங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது எனக்கு 27 வயது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம்.

சிறையில் மனித உரிமை மீறல்கள் சர்வ சாதாரணமாக நடந்தன. சிறை அதிகாரிகள் பல திருட்டுத்தனங்களைச் செய்வார்கள். அதைப் பார்த்துவிட்டால், எங்கள்மீது அடக்குமுறை ஏவப்படும். அடித்து நொறுக்குவார்கள். ஒவ்வொரு உரிமைக்கும் நாங்கள் சிறை நிர்வாகத்துடன் சண்டை போடவேண்டியிருந்தது. நாங்கள் சிறைக்குச் சென்ற பிறகுதான், எல்லா கைதிகளுக்கும் சேர்த்து பல உரிமைகள் கிடைத்தன.

நல்லகண்ணு
நல்லகண்ணு

கைதிகளுக்குக் கல்வி கற்கும் உரிமை வேண்டும் என்று சிறைக்குள் போராடினோம். அதில் வெற்றியும் பெற்றோம். பசதி வழக்கில் கைதுசெய்யப்பட்ட எங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் வலுத்தன. அதையடுத்து, எங்களை விடுதலை செய்வதென்று அரசு முடிவு செய்தது. 1956, டிசம்பர் 13-ம் தேதி எங்கள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது. ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். நாங்கள் விடுதலை செய்யப்படப்போகிறோம் என்ற செய்தி கிடைத்தது. ஆனால், எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. காரணம், மத்திய சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட பல தோழர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை.

நாங்கள் மதுரைச் சிறையில் இருந்த சமயத்தில், 22 பேர் தூக்கிலிடப்பட்டதைப் பார்த்தேன். விடிந்தால் தூக்கு, உயிர் போய்விடும் என்று தெரிந்தும் தோழர் பாலு கலங்கவில்லை. பாலு நன்றாகப் பாடுவார். எம்.பி.சீனிவாசனின் ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே, தோழா…’ என்ற பாடலைப் பாடினார். இரவு முழுவதும் அப்பாடலை மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டேயிருந்தார். அதிகாலை 4 மணிக்குக் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது. தூக்கில் போடப்படுவதற்கு முன்பாக, ‘புரட்சி ஒங்குக’, ‘புரட்சி ஓங்குக’, ’செங்கொடி வாழ்க’ என்று பாலு முழக்கமிட்டார். அதைக் கேட்டு நாங்களும் முழக்கமிட்டோம். அது, என் வாழ்க்கையில் மிக உணர்ச்சிகரமான, வேதனையான தருணம்.

நல்லகண்ணு, ரஞ்சிதம் அம்மாள்
நல்லகண்ணு, ரஞ்சிதம் அம்மாள்

1958-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு உறுப்பினரான அண்ணாசாமி மகள் ரஞ்சிதத்துக்கும், எனக்கும் திருமணம் நடைபெற்றது. கட்சியின் முடிவுப்படியே எங்கள் திருமணம் நடைபெற்றது. நான் முழு நேர கட்சி ஊழியர். அப்போது, எனக்கு மாத ஊதியமாக 30 ரூபாயை கட்சி வழங்கியது.

கம்யூனிஸ்ட் கட்சி எத்தனையோ உயிர்த் தியாகங்களைச் செய்திருக்கிறது. இன்றைக்கு இருப்பதுபோல எந்த நலச் சட்டமும் அப்போது இல்லை. உழைப்பாளிகள், கூலித் தொழிலாளிகளின் நிலை மிக மோசமாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை இன்னும் மோசம். இன்றைக்குப் பல நலச் சட்டங்கள் வந்திருக்கின்றன. அதற்க கம்யூனிஸ்ட்டுகளின் மிகப்பெரிய போராட்டங்களும் தியாகங்களுமே காரணம். இன்றைக்கு சாதி, மதத்தின் பெயரால் மக்களைத் துண்டாடுவதற்கு முயற்சி நடக்கிறது. அந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்” என்று தன் வாழ்க்கை நினைவுகளை நம்மிடம் நல்லகண்ணு பகிர்ந்துகொண்டார்

நல்லகண்ணு
நல்லகண்ணு

தற்போது 98 வயதாகும் நல்லகண்ணுவுக்கு சொந்தவீடு கிடையாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தன் முழு நேர ஊழியர்களுக்கு வழங்குகிற மாத ஊதியம் தவிர வேறு எந்த வருமானமும் இவருக்குக் கிடையாது. இவரது 60 ஆண்டுக்கால பொதுவாழ்க்கையை சிறப்பு செய்யும் வகையில், பாராட்டு விழா நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கோடி ரூபாயை அவருக்கு வழங்கியது. அதை அப்படியே கட்சி நிதிக்கு அவர் திருப்பிக் கொடுத்துவிட்டார். இப்போது, தமிழ்நாடு அரசு வழங்கிய பத்து லட்சம் ரூபாயையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்துவிட்டார் நல்லகண்ணு!