Published:Updated:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்... `மேடைக் கலைவாணர்’ நன்மாறன் காலமானார்!

நன்மாறன் சில மாதங்களுக்கு முன்பு ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் இலவச வீட்டைத் தனக்கு ஒதுக்கும்படி மதுரை ஆட்சியரிடம் விண்ணப்பித்தது அனைவரையும் அதிர்ச்சியடையவைத்தது. ஆனால், ''சொந்த வீடில்லாத ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் இந்தக் கோரிக்கையை வைத்தேன்'' என்றார்.

`மேடைக் கலைவாணர்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகியும், இரு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவருமான என்.நன்மாறன் சற்று முன்பு மரணமடைந்தார்.

நன்மாறன்
நன்மாறன்

கடந்த சில மாதங்களாக வயது மூப்பின் காரணமாக, உடல் நலிவுற்று அவதிப்பட்டுவந்த நன்மாறனுக்கு நேற்று இரவு மூச்சுத்திணறல் ஏற்பட, அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவருக்கு வயது 74.

மதுரை நகரில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் 'தோழர்' என்று பாசமாக அழைக்கப்படும் நன்மாறன், சிறுவயதில் பல்வேறு வேலைகளைச் செய்தபடியே கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு பிரிவாகச் செயல்பட்ட ஊழியர் கலை எழுச்சி மன்றத்தில் இணைந்து செயல்பட்டார்.

நன்மாறன்
நன்மாறன்

வாசிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வம்கொண்டவர், மதுரை கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த தலைவர்கள், இலக்கியவாதிகளுடன் ஏற்பட்ட தொடர்பால் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டார். 1971-ல் தேர்தல் பிரசார மேடைகளில் பேச ஆரம்பித்தவர், அதன் பிறகு கட்சியில் முழுநேர ஊழியராக மாறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனைவி சண்முகவள்ளியுடன் மேலப்பொன்னகரத்தில் சிறிய வீட்டில் வசித்தபடி கட்சிப் பணியாற்றியவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

நன்மாறன்
நன்மாறன்

2001 முதல் 2011 வரை இரண்டு முறை மதுரை கிழக்குத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டு மக்கள் பணியாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளைச் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும் கலகலப்பாகவும் நன்மாறன் உரையாற்றுவார்.

த.மு.எ.க.ச மேடைகளில் சமகால நிகழ்வுகளை கலகலப்பாகப் பேசி சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார். களச் செயற்பாட்டாளர், சொற்பொழிவாளர், எழுத்தாளர் எனப் பன்முகம்கொண்ட நன்மாறன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையிலும் சிறுபான்மை நலக்குழுவில் மதுரை மாவட்ட நிர்வாகியாக இருந்து எளிய மக்களுக்காக உழைத்துவந்தார்.

நன்மாறன்
நன்மாறன்

சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் மதுரை மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஐடி பார்க், டைடல் பார்க் வரை மதுரைக்குக் கொண்டுவரவும் பாடுபட்டார். மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை உருவாக, தன்னால் முடிந்த பணியைச் செய்தார்.

மக்களுக்குப் பிரச்னை என்றால் தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் களத்தில் வந்து நிற்பார். கட்சியின் முழு நேர ஊழியர் என்பதால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தைக் கட்சியிடம் அளித்து, கட்சி அளிக்கும் ஊதியத்தில் வாடகை வீட்டில் எளிய வாழ்க்கை வாழ்ந்துவந்தார். ஆனால், அவர் அதை ஒருபோதும் குறையாகச் சொன்னதில்லை.

Vikatan

நன்மாறன் சில மாதங்களுக்கு முன்பு ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் இலவச வீட்டைத் தனக்கு ஒதுக்கும்படி மதுரை ஆட்சியரிடம் விண்ணப்பித்தது அனைவரையும் அதிர்ச்சியடையவைத்தது. ஆனால், '``சொந்த வீடில்லாத ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் இந்தக் கோரிக்கையை வைத்தேன்'' என்றார்.

நன்மாறன்
நன்மாறன்

வாழ்நாள் முழுவதும் மக்கள் போராளியாக, முழுமையான கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த என்.நன்மாறன், திடீர் உடல்நலக் குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று மறைந்தார்.

நன்மாறனின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு