இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 89.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் வயது முதிர்ச்சி காரணமாக கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், தா.பாண்டியனுக்கு சிறுநீரக பிரச்னை, சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் இருந்ததால், அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலே இருந்துவந்தது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று தா.பாண்டியனின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்ததோடு, அவருக்கு உரிய சிகிச்சை வழங்குமாறும் உத்தரவிட்டார்.
நேற்று இரவு தா.பாண்டியன் உடல்நிலை தொடர்பாக வதந்திகள் பரவிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டார். அதில், ``இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோய்த்தொற்று மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறப்பு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவரும் நிலையிலும் பாண்டியன் உடல்நிலையில் மாற்றம் காணாத நிலை நீடிக்கிறது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந் நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த தா.பாண்டியன், சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி காலமானார். கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு அரசியல் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.