குமரி: `இப்போதும் அரசு காரை பயன்படுத்துகிறார்' - அதிமுக கூட்டுறவு ஒன்றியத் தலைவர் தகுதிநீக்க சர்ச்சை

கடந்த 03.09.2020 அன்று தகுதிநீக்கம் செய்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இன்றுவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. இப்போதும் அரசு காரைப் பயன்படுத்துகிறார் என அ.தி.மு.க பிரமுகர் குறித்து கூட்டுறவுச் சங்க இணை பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றிய அ.தி.மு.க செயலாளரான கிருஷ்ணகுமார், ஆரல்வாய்மொழி தொடக்க கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவராகவும் இருக்கிறார். கூட்டுறவு சங்கத் தலைவராக இருப்பவர், தனியாக ஃபைனான்ஸ் நடத்தக் கூடாது என விதி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் கிருஷ்ணகுமார், பாலாஜி ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்திவருவதால், அவரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என ஆரல்வாய்மொழி பேரூராட்சி ம.தி.மு.க செயலாளர் முருகேசன் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிருஷ்ணகுமாரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டது. ஆனாலும், அவர் தொடர்ந்து பதவியில் நீடித்துவருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த முருகேசன், நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலத்தில் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அந்த மனுவில், `ஆரல்வாய்மொழி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத் தலைவரான கிருஷ்ணகுமார், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் பாலாஜி ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்திவருகிறார். எனவே, இவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருப்பதற்குத் தகுதியற்றவர் எனப் புகார் அளித்திருந்தேன்.
அந்தப் புகார்மீது நடவடிக்கை எடுக்காததால், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இதையடுத்து கிருஷ்ணகுமாரை தகுதிநீக்கம் செய்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, நீங்கள் அவரை தகுதிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து முருகேசன் நம்மிடம் கூறுகையில், ``அ.தி.மு.க-வைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் ஆரல்வாய்மொழி தொடக்க கூட்டுறவு வங்கி தலைவராக இருக்கிறார். அவர் சங்க சட்ட திட்டங்களுக்கு எதிராக பாலாஜி ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்துகிறார். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளைப் புதிதாக சேர்த்திருக்கிறார். உண்மையான விவசாயிகள் சேர்க்கப்படவில்லை. இது குறித்து மதுரை கோர்ட்டில் நான் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கில் ஆரல்வாய்மொழி தொடக்க கூட்டுறவு வங்கித் தலைவர் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து கோர்ட் உத்தரவிட்டது. கடந்த 03.09.2020 அன்று இந்தத் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. இப்போதும் அரசு காரைப் பயன்படுத்துகிறார். கூட்டுறவு வங்கிக்கு வழக்கம்போல வந்து செல்கிறார்.

எனவே, அவரை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கும்படி நாகர்கோவிலிலுள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறேன். இனியும் அவரைத் தகுதிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்வேன். நானும் ஆரல்வாய்மொழி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். அந்தக் கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் நகைக்கடன், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றை சரிபார்க்க வேண்டும். தகுதியுள்ள விவசாயிகளுக்கு விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் முறையாக சென்று சேரவில்லை" என்றார்.