Published:Updated:

`வருமானத்துக்கு அதிகமான சொத்து!'- பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மீது ஆளுநருக்கு சென்ற புகார்

கட்டடம்
கட்டடம் ( எம். விஜயகுமார் )

பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் ஒரு பணியை எடுக்க வேண்டுமென்றால், தகுதி டெண்டர் அறிவிக்கப்படும். அதில் ஒப்பந்ததாரர்கள் பணி செய்வதற்கான முன் அனுபவம் இருக்கிறதா... இல்லையா... என்று பார்ப்பார்கள்.

``சேலம் மாவட்டம் பொதுப்பணித்துறையின் கட்டடம் மற்றும் பராமரிப்புத்துறையின் கண்காணிப்புப் பொறியாளராக இருப்பவர் நம்பிராஜ். இவர் தகுதியற்றவர்களுக்கு ஒப்பந்தப் பணி வழங்கி வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைச் சேர்த்திருக்கிறார்.

பொதுப்பணித்துறை
பொதுப்பணித்துறை
எம். விஜயகுமார்

வருமான வரித்துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் இவரைச் சோதனையிட வேண்டும்'' என்று நம்பிராஜ் ஓய்வு பெறும் நிலையில் அவர் மீது நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஆளுநர், முதல்வர் தனிப்பிரிவு, பொதுப்பணித்துறைச் செயலாளர் உட்படத் துறை அதிகாரிகள் பலருக்கும் புகார் மனு அனுப்பி பொதுப்பணித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி நியூ சிட்டி இன்ஜினீயரிங் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் மகேந்திரன், ''சேலம் மாவட்டம் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் நம்பிராஜ் பதவியை துஷ்பிரயோகம் செய்து பல ஒப்பந்தங்களுக்கு அளவுக்கு அதிகமான கமிஷன் பெற்று மோசடி செய்துள்ளார். நம்பிராஜ் என்பவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பொதுப்பணித்துறையில் 1984 உதவிப் பொறியாளராகப் பணியில் சேர்ந்து படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று கடந்த 6 மாதமாகச் சேலம் மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளராக இருந்து வருகிறார். இவர் இன்று பணி ஓய்வு பெறுகிறார்.

மகேந்திரன்
மகேந்திரன்
எம். விஜயகுமார்

பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் ஒரு பணியை எடுக்க வேண்டுமென்றால், தகுதி டெண்டர் அறிவிக்கப்படும். அதில் ஒப்பந்ததாரர்கள் பணி செய்வதற்கான முன் அனுபவம் இருக்கிறதா... இல்லையா... என்று பார்ப்பார்கள். அடுத்துப் பணி செய்வதற்கான பொருளாதார வசதியைக் கண்டறிய ஒப்பந்த தொகையிலிருந்து பாதி தொகையிலாவது முன்பு அரசுப் துறையிலோ, தனியார் துறையிலோ சிங்கிள் ஒப்பந்தப் பணி செய்திருக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். அரசுத் துறையில் இல்லாமல் தனியார் துறையில் ஒப்பந்தப் பணி செய்திருந்தால் டி.டி.எஸ் பிடித்தம், வருமான வரி பிடித்தம் செய்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், நம்பிராஜ் இதை எதையும் பார்க்காமல் தனக்கு கமிஷன் கொடுப்பவர்களுக்கு மட்டும் ஒப்பந்தப் பணியைக் கொடுத்துள்ளார். உதாரணத்துக்கு 29.11.2019-ல் பரமத்திவேலூர் கூடுதல் நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்படும் அறை என்ற 3 பணிகளுக்கான ஒப்பந்த மதிப்பு 13 கோடி ஆகும். இந்த டெண்டரை எடுத்த ஒப்பந்ததாரர் வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்புத் தொகை கிடையாது. இவரிடம் கண்காணிப்பாளர் 15 லட்சம் வாங்கிக்கொண்டு வேறு ஒருவரின் வங்கிக் கணக்கில் வைப்பு நிதியைக் காட்டி டெண்டர் கொடுத்திருக்கிறார். நாங்கள் ஆதாரத்தோடு நிரூபித்தும் அந்த டெண்டர் நீக்கப்படவில்லை.

பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் உத்தரவுபடி சமீபத்தில் பொதுப் பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தற்காலிக பணியாளர்கள் தினக்கூலி பணியாளர்களாக அமர்த்தப்பட்டார்கள். இதில் இரண்டு ஆண்டுகள்கூட பணி செய்யாத பலரிடம் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை பணத்தைப் பெற்றுக்கொண்டு தினப்பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி சேலம் மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் தன்னுடைய 36 ஆண்டுக்காலப் அரசுப் பணியில் சுமார் 25 கோடிக்கும் மேல் அசையும் மற்றும் அசையா சொத்துகளை தன்னுடைய குடும்பத்தினர் பெயரிலும் உறவினர்கள் பெயரிலும் வாங்கிக் குவித்திருக்கிறார்.

நம்பிராஜ்
நம்பிராஜ்
எம். விஜயகுமார்

அதையடுத்து நாமக்கல்லில் ஒப்பந்தப்பணிகள் செய்து வரும் ஒப்பந்ததாரர்களான சிவஶ்ரீ கன்ஸ்ட்ரக்‌ஷன் சிவக்குமார், டி.எம்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன் மாதேஸ்வரன், பழனிவேல், கேசவன், மாசடசி அம்மன் கன்ஸ்ட்ரக்‌ஷன் சுந்தரம் மற்றும் பல ஒப்பந்ததாரர்களும் சமூக ஆர்வலர் சுபகார்த்திகேயன், பத்து ரூபாய் இயக்கம் எனப் பலரும் சேலம் மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டடம் மற்றும் பராமரிப்புத் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் நம்பிராஜ் மீது புகார் மனு அனுப்பி இருக்கிறோம்'' என்றார்.

இதுபற்றி சேலம் மாவட்டம் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் விளக்கம் கேட்பதற்காக 2 நாள்கள் முயன்றும் முடியவில்லை. சேலம் காந்தி ரோட்டில் உள்ள அவருடைய அலுவலகத்துக்குச் சென்றபோது கண்காணிப்புப் பொறியாளரின் உதவியாளர், ஐயாவிடம் கேட்டு வந்து சொல்லுவதாகச் சொன்னவர். கண்காணிப்புப் பொறியாளரிடம் கேட்டு வந்து, ''ஐயா, இன்று ஓய்வு பெற இருப்பதால் பணிச் சுமைகள் அதிகமாக இருக்கிறதாம். அதனால் தற்போது பார்க்க முடியாது'' என்று சொன்னதாக நம்மிடம் கூறினார். இந்தக் குற்றசாட்டுகள் தொடர்பாகப் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் தரப்பு விளக்கம் தரும்பட்சத்தில் அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவு செய்யத் தயாராக உள்ளோம்.

பின் செல்ல