Published:Updated:

`வனக்காவலர்களே டிக்கெட் கொடுப்பது இங்குதான் நடக்கும்!’ -மேகமலை பறக்கும் படையைச் சாடும் வன ஆர்வலர்கள்

சுருளி அருவி டிக்கெட் கொடுக்கும் இடம்
சுருளி அருவி டிக்கெட் கொடுக்கும் இடம்

பறக்கும்படை, வேலை ஏதும் செய்யாமல் சுருளி அருவியில் டிக்கெட் கொடுக்கும் பணியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல அரிய வகை வன உயிரினங்களைக் கொண்டது மேகமலை வன உயிரின சரணாலயம். இதன் கட்டுப்பாட்டில், கூடலூர், கம்பம், சின்னமனூர், மேகமலை, வருசநாடு, கண்டமனூர் ஆகிய ஆறு ரேஞ்ச்கள் உள்ளன. இப்பகுதியில் வனக்குற்றங்களைக் கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட பறக்கும்படை, வேலை ஏதும் செய்யாமல் சுருளி அருவியில் டிக்கெட் கொடுக்கும் பணியில் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுருளி அருவி
சுருளி அருவி
`புதர்மண்டிக் கிடக்கும் எம்.ஜி.ஆரின் கனவு!'- சண்முகா நதியால் கலங்கும் தேனி கிராமங்கள்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத வனவிலங்கு ஆர்வலர் ஒருவர், ``மேகமலை வன உயிரின சரணாலயத்தில், தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வனக்குற்றங்களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பறக்கும்படையை, சுருளி அருவியில் டிக்கெட் கொடுக்க வைத்துள்ளனர். சமீபத்தில், மேகமலையில் புலி ஒன்று இறந்து உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

சுருளி அருவி டிக்கெட் கொடுக்கும் இடம்
சுருளி அருவி டிக்கெட் கொடுக்கும் இடம்

புலி இறந்தது கூட வனத்துறைக்குத் தெரியவில்லை. பறக்கும்படையானது ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அதே புலி, தோலுக்காக வேட்டையாடப்பட்டிருந்தால், இதேபோலதான் பல நாள்கள் கழித்து புலியின் உடலைக் கண்டுபிடித்திருப்பார்கள். பறக்கும்படை ரேஞ்சர் தலைமையில் இயங்கும். ரேஞ்சர் உத்தரவுப்படி, ஆளுக்கு ஒரு பகுதிக்குச் சென்று ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். ஆனால், ரேஞ்சர் பணியிடம் காலியாக உள்ளது. கம்பம் ரேஞ்சர் ஜீவனா, பொறுப்பு பணியாக அதைக் கவனித்துவருகிறார்.

குப்பைத்தொட்டியாகும் தேனி வால்கரடு!

பறக்கும்படையில், வனக்காவலர்களாக 2 பெண்களும் உள்ளனர். அதனால், காட்டுக்குள் ரோந்துப்பணிக்கு அனுப்பாமல், எளிமையான வேலையாக டிக்கெட் கொடுக்கும் வேலை கொடுக்கிறார்கள். இதைச் சாதகமாக வைத்துக்கொண்டு மொத்த பறக்கும்படை குழுவும் வேலை செய்யாமல், சுருளி அருவியில் முகாமிட்டு ஏமாற்றுகிறது. வனக்காவலர்கள் டிக்கெட் கொடுப்பது தேனியில் மட்டும்தான் நடக்கும். பெரிய வனக்குற்றம் ஏற்படும் முன்னர், பறக்கும்படையை வனத்துக்குள் அனுப்புவதே நல்லது” என்றார்.

டிக்கெட் கொடுக்கும் வனக்காவலர்கள்
டிக்கெட் கொடுக்கும் வனக்காவலர்கள்

இது தொடர்பாக மேகமலை வனக்காப்பாளர் போஸ்லே சச்சின் துக்காராமிடம் கேட்டபோது, ``சுருளி அருவியில் கட்டண உயர்வுக்குப் பிறகு அங்கு ஆட்கள் தேவைப்பட்டது. அதனால்தான் அங்கு இருந்தனர். இனி அவர்கள் அங்கு இருக்கமாட்டார்கள்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

சுருளி அருவியானது வனத்துறையின் சூழல் சுற்றுலா குழுவின் வசம் உள்ளது. இக்குழுவில் 26 வனத்துறை பணியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு