Published:Updated:

கிருஷ்ணகிரி: "விதிகளை காற்றில் பறக்கவிடும் குவாரிகள்!"- நடவடிக்கை எடுக்க காங்., எம்.பி வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி - குவாரிகள்
News
கிருஷ்ணகிரி - குவாரிகள்

90 சதவிகித குவாரிகள் அரசின் உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டு, பல வகைகளில் அத்துமீறல்களுடன் செயல்பட்டுவருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

கிருஷ்ணகிரி: "விதிகளை காற்றில் பறக்கவிடும் குவாரிகள்!"- நடவடிக்கை எடுக்க காங்., எம்.பி வலியுறுத்தல்

90 சதவிகித குவாரிகள் அரசின் உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டு, பல வகைகளில் அத்துமீறல்களுடன் செயல்பட்டுவருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

Published:Updated:
கிருஷ்ணகிரி - குவாரிகள்
News
கிருஷ்ணகிரி - குவாரிகள்

சிறு மலைகளால் சூழப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கல்குவாரிகளுக்குப் பஞ்சமில்லை. மாவட்ட நிர்வாகத்தின் தகவலின்படி, கற்கள், கறுப்பு கிரானைட், பல வண்ண கிரானைட் எடுக்கும் குவாரிகள், 320 பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இங்கு வெட்டி எடுக்கப்படும் கற்களில், பெரும்பங்கு அண்டை மாநிலமான கர்நாடகப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு எம்.சாண்ட், பி.சாண்டாக மாற்றப்படுகிறது.

கிரானைட் கற்கள் உள்ளூர் மற்றும் கர்நாடகப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பாலிஷ் செய்யப்படுகின்றன. உள்ளூர், கர்நாடகாவில் எம்.சாண்ட், பி.சாண்ட், சைஸ் கற்கள், கிரானைட் விற்பனை, ஏற்றுமதி என குவாரிகளின் வருமானத்தை முறையாகக் கணக்கிட்டால்கூட, தலைசுற்றும் அளவுக்கு பெரும் அளவில் பணம் கொழிக்கும் தொழிலாக குவாரித் தொழில் இருக்கிறது.

கர்நாடகாவுக்கு லாரிகளில் செல்லும் கனிம வளம்.
கர்நாடகாவுக்கு லாரிகளில் செல்லும் கனிம வளம்.

கிருஷ்ணகிரி மட்டுமின்றி, தருமபுரி மாவட்டத்திலும் குவாரிகள் இருக்கின்றன. இரண்டு மாவட்டங்களிலும், சட்டப்படி அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி இயங்கும் குவாரிகளை, விரல்விட்டே எண்ணிவிடலாம். 90 சதவிகித குவாரிகள் அரசின் உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டு, பல வகைகளில் அத்துமீறல்களுடன் செயல்பட்டுவருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாகக் கற்களை வெட்டி எடுப்பது, வெட்டி எடுத்த அளவையும் குறைத்துக் காண்பித்து, அரசுக்குச் செலுத்தவேண்டிய தொகையைக் குறைத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவது, இரவிலும் வெடி வைப்பது என அத்துமீறல்களுக்கு அளவே இல்லை.

மாநில எல்லையில் லாரிகள்.
மாநில எல்லையில் லாரிகள்.

``அ.தி.மு.க., தி.மு.க என, எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் கைகளில், குவாரிகளின் டெண்டர் செல்வதும், அத்துமீறல்களைத் தடுக்க முடியாமல் அரசியல் கட்சியினர் ஆட்டுவிக்கும் பொம்மைகளாக அரசு அதிகாரிகள் இருப்பதும், அனைவரும் அறிந்த உண்மை" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குவாரிகளால் வீடுகளில் விரிசல், ரோடுகள் சேதம், விபத்து, தூசு பறப்பது, இரவில் வெடி வைப்பதால் துாக்கமில்லை எனக் கூறி மக்கள் பல போராட்டங்கள் நடத்தியிருக்கின்றனர். சமீபத்தில்கூட, கொரட்டகிரி கிராம மக்கள், குவாரிகளின் அத்துமீறலால் வசிக்க முடியாமல் ஊரை காலிசெய்து, வனத்துக்கு அருகே டென்ட் அமைத்து வசித்து, எட்டு நாள்கள் போராட்டங்கள் நடத்தினர்.

கிராமத்தை காலி செய்து போராடிய மக்கள்.
கிராமத்தை காலி செய்து போராடிய மக்கள்.

எத்தனை போராட்டங்கள் நடந்தாலும், ஏறுவரிசையில் இருப்பதுபோல அத்துமீறல்கள் மட்டும் குறையாமல் அதிகரித்தபடியே செல்கின்றன. போராட்டம் நடத்தும் மக்களை அரசியல் கட்சியினர் மிரட்டுவதும், அவர்களை ஆஃப் செய்வதையும், குவாரிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோரை கவனித்து பிரச்னைகளைச் சுமுகமாகத் தீர்ப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர் குவாரி உரிமையாளர்களும், குவாரிகளுக்கு ஆதரவாக உள்ள ‘பவர்ஃபுல்’ அரசியல்வாதிகளும்.

இது குறித்து குவாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும், கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி செல்லகுமாரிடம் பேசியபோது, ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட குவாரிகள் இருக்கின்றன. இவற்றில், பெரும்பாலான குவாரிகள் முறையாக அனுமதி பெறாமல், போதிய உரிமங்கள் பெறாமல், சட்ட விரோதமாகச் செயல்படுகின்றன. குவாரிகளில் பாரம் ஏற்றப்படும் கற்களை கர்நாடகாவுக்குக் கொண்டு செல்ல ‘ட்ரான்சிட் ஷீட்’ வழங்கப்படுகிறது. ஒரு ஷீட்டை வைத்துக்கொண்டு சட்டவிரோதமாக, பலமுறை கற்கள் கடத்தப்படுகின்றன.

செல்லகுமார் எம்.பி
செல்லகுமார் எம்.பி

இதற்குத்தான் குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் அளவை முறையாக அளவிட வேண்டுமென கோரிக்கை வைக்கிறோம். முறையாக அளவீடு செய்தால், அதிக அளவு வெட்டியெடுக்கப்படுவது, ஒரே ஷீட்டை வைத்து பயணிப்பது என அனைத்து அத்துமீறல்களும் முடிவுக்கு வரும். ஆனால், இதைச் செயல்படுத்த அரசு மற்றும் அதிகாரிகள் முன்வருவதில்லை. நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுத்த பின்னர், சமீபத்தில் ஆய்வு செய்த அரசு அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபட்ட, 34-க்கும் குறைவான குவாரிகளில் மட்டுமே, ரூ.300 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்திருக்கின்றனர். முறையாக ஆய்வு செய்தால் நிச்சயம், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கலாம். அந்த அளவுக்கு அத்துமீறல்கள் நடக்கின்றன. இதைத் தடுக்க, தொடர்ந்து வழக்கு தொடுத்து, அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறேன்'' என்றார்.

குவாரிகளில் எம்.சாண்ட் தயாரிப்பு.
குவாரிகளில் எம்.சாண்ட் தயாரிப்பு.

குவாரிகளின் அத்துமீறல்கள் குறித்து, கிருஷ்ணகிரி கனிம வளத்துறை துணை இயக்குநர் வேடியப்பனிடம் போனில் கேட்டதற்கு, ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 300 குவாரிகளில் முறையாக அனுமதியுடன்110-க்கும் குறைவான குவாரிகள் செயல்படுகின்றன. மற்றவை, இ.சி (என்விரோன்மென்டல் கிளியரன்ஸ்) சான்றிதழ் பெறாமல் இருப்பதால் செயல்படாமல் இருக்கின்றன. சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகளைத் தொடர்ந்து கண்காணித்து, அத்துமீறுவோர் மீது அபராதம் விதித்துவருகிறோம்.

ஒரு கன மீட்டர் வெட்டியெடுத்தால் அரசுக்கு, ரூ.59 கட்டணமாக குவாரிகள் செலுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக வெட்டியெடுக்கும் குவாரிகள் மீதும் அபராதம் விதித்துவருகிறோம். கடந்த ஓராண்டில் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்ட, 34 குவாரிகள் மீது வழக்கு பதிவுசெய்து, ரூ.330 கோடி அபராதம் விதித்திருக்கிறோம். முக்கிய இடங்களில், பத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்கிறோம். விரைவில் கன்ட்ரோல் ரூம் தொடங்கி, ஒரே ட்ரான்சிட் ஷீட் வைத்து, வாகனம் எத்தனை முறை சென்று வருகிறது எனக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுப்போம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

டெண்டர் முடியும்போது, அவர்கள் வெட்டியெடுத்த அளவை அளந்து பார்ப்போம். அத்துமீறல் இருந்தால் அவர்கள் அரசுக்குக் கூடுதலாக டெபாசிட் செய்திருக்கும், 20 சதவிகித தொகையை அரசு எடுத்துக்கொள்ளும், மேலும் அபராதம் விதிக்கப்படும்’’ என்றார்.

``எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், குவாரிகளின் அத்துமீறல் அதிகரித்துவருகிறதே தவிர, சட்டவிரோதச் செயல்கள் குறைந்தபாடில்லை. அதீத அரசியல் செல்வாக்கு, பண பலம் என வலம்வரும் குவாரி மாஃபியாக்களின் அத்துமீறல்களைத் தடுப்பதும், திமுக அரசு மீதான இந்தக் குற்றச்சாட்டுகளைக் களைவதும், தமிழக முதல்வர் ஸ்டாலினால் மட்டுமே முடியும்" என வருத்தம் தெரிவிக்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.