Published:Updated:

`கட்டணம் குறித்த வாட்ஸ்அப் உரையாடல்; நீக்கப்பட்ட 60 மாணவர்கள்?’ -கோவை பி.எஸ்.பி.பி பள்ளி மீது புகார்

பி.எஸ்.பி.பி பள்ளி
பி.எஸ்.பி.பி பள்ளி

கோவையில் பி.எஸ்.பி.பி மில்லேனியம் என்ற சி.பி.எஸ்.இ பள்ளி 60-க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ், ஊரடங்கு உத்தரவு போன்றவற்றால் உலகமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றன. ``இந்தக் காலகட்டத்தில் கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

ஆனால், அவரது உத்தரவை மீறி பல பள்ளிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன. உச்சக்கட்டமாக, கோவையில் பி.எஸ்.பி.பி மில்லேனியம் என்ற சி.பி.எஸ்.இ பள்ளி 60-க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அந்தப்பள்ளியில் படித்து வரும் மாணவியின் பெற்றோர் அருணா, ``ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே ஆன்லைன் மூலம் வகுப்பு எடுத்து வந்தனர். அந்தப் பள்ளியில் படிக்கும் பெற்றோர்களுக்காக ஒரு வாட்ஸ்அப் குழு இருந்தது. அதில், பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன செய்தியைப் பகிர்ந்தேன். இதையடுத்து, ஆன்லைன் வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது, திடீரென்று என் மகள்கள் இருவரையும் அதில் இருந்து நீக்கிவிட்டனர்.

நீக்கம்
நீக்கம்

மேலும், அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்த அனைத்து பெற்றோர்களின் குழந்தைகளையும் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. இதனால், எங்களின் குழந்தைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டனர். மேலும், பல மாணவர்களை எந்தக் காரணமும் சொல்லாமல் பள்ளியை விட்டு நீக்கிவிட்டனர்.

இதனால் பெற்றோர், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். சிலர் அழுதேவிட்டனர். கேரளாவில் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாததால் ஒரு மாணவி தற்கொலையே செய்துகொண்டுள்ளார். அதேபோல் நிகழக்கூடாது. ஆனால், அப்படி நிகழ்ந்தால்தான் இவர்களும் தங்களது தவறுகளை உணர்வார்களா... இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தைக் கேட்டபோது, `சமூக வலைதளங்களில் பள்ளிக்கு எதிராக செயல்பட்டதால் நீக்கச் சொல்லியுள்ளனர்.

பள்ளி முதல்வருக்கு மெயில்
பள்ளி முதல்வருக்கு மெயில்

கூடுதல் தகவல்களுக்கு பள்ளி முதல்வருக்கு மெயில் போடுங்கள்’ என்றனர். பள்ளி முதல்வருக்கு மெயிலும் போட்டுவிட்டேன். எந்தப் பதிலும் இல்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். எனவே, பள்ளி நிர்வாகமும், அரசு நிர்வாகமும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக பி.எஸ்.பி.பி மில்லேனியம் பள்ளி லேண்ட்லைனுக்கு தொடர்புகொண்டோம். ``பள்ளி இன்று விடுமுறை சார். இங்கு வேறு யாரும் இல்லை. நீங்கள் சொல்வதை நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறோம்” என்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஶ்ரீபிரியாவை தொடர்புகொண்டோம். அவர், அந்தப் பள்ளியின் நிர்வாக அலுவலர் எண்ணைக் கொடுத்து, `அவரிடம் பேசுங்கள்’ என்றார். நிர்வாக அலுவலர் ஜீவரத்தினத்திடம் பேசினோம். ``நாங்கள் யாரையும் பள்ளியிலிருந்து நீக்கவில்லை. `பள்ளி நிர்வாகம் ஆன்லைன் வகுப்பு எடுத்து மாணவர்களை மனரீதியாக துன்புறுத்துகின்றனர்.

வாட்ஸ்அப் குழு
வாட்ஸ்அப் குழு

கட்டணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர்’ என்றெல்லாம் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். நாங்கள் எந்தப் பெற்றோரிடமும் கட்டணம் கேட்கவில்லை. அப்படி இருக்கும்போது, பள்ளி நிர்வாகம் குறித்து அவதூறு பரப்பியதற்காக அந்தப் பெற்றோரின் மாணவர்கள் 10 பேரை மட்டுமே ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக அவர்கள், பள்ளி முதல்வரிடம் பேசி தீர்வு காணலாம்” என்றார்.

``பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி எச்சரித்திருந்தார். பி.எஸ்.பி.பி பள்ளி சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணியிடம் கேட்டோம்,

ஆட்சியர் ராசாமணி
ஆட்சியர் ராசாமணி

``விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். கோவை முதன்மைக் கல்வி அலுவலர் உஷாவிடம் பேசியபோது, ``நீங்கள் சொல்லித்தான் இந்த விஷயம் எனக்குத் தெரியும். பாதிக்கப்பட்ட பெற்றோரை எனக்கு மெயில் போடச் சொல்லுங்கள். விசாரிக்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு