Published:Updated:

`திமுக - அதிமுகவினர் மோதல்; கைகலப்பில் முடிந்த கிராமசபைக் கூட்டம்!' - நடந்தது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிராமசபை கூட்டத்தில் கைகலப்பு
கிராமசபை கூட்டத்தில் கைகலப்பு

ஒன்றியக்குழுத் தலைவரை அழைக்காமல் கூட்டத்தை நடத்தியதாக இருதரப்பினரிடையே வெடித்த மோதல் கைகலப்பில் முடிந்ததால், கிராம சபைக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு மக்கள் ஓட்டம் பிடித்தனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில், ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெறும் பூண்டி, சோழவரம் மற்றும் திருவாலங்காடு ஆகிய பகுதிகளைத் தவிர்த்து மற்ற 371 ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான நேற்று, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் நல்லமுறையில் கிராமசபைக் கூட்டம் நடந்து முடிந்தது என்றாலும், சில இடங்களில் அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கிராமசபைக் கூட்டத்தில் ரகளை செய்தனர். அந்த வகையில், கும்மிடிப்பூண்டி பகுதியில் கிராமசபைக் கூட்டத்தின்போது ஒன்றியக்குழுத் தலைவரை அழைக்காமல் கூட்டத்தை நடத்தியதாக இருதரப்பினரிடையே வெடித்த மோதல் கைகலப்பில் முடிந்ததால் கிராமசபைக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு மக்கள் ஓட்டம் பிடித்தனர்.

கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார் பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் கிராமசபைக் கூட்டம் சித்தூர், நத்தம் கிராமத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் உஷா ஸ்ரீதர் என்பவர் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் திரளான அளவில் காலை 10 மணிக்கு ஆஜரானதால், திட்டமிட்டபடி கிராமசபைக் கூட்டம் தொடங்கப்பட்டது. கிராம மக்கள் தங்கள் நிறைகள், குறைகளை அங்குக் குழுமியிருந்தோருடன் பகிர்ந்து கொண்டிருந்தனர். கூட்டம் தொடங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலான நிலையில், அப்பகுதியின் ஒன்றிய கவுன்சிலரும், கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழுத் தலைவருமான அதிமுகவைச் சேர்ந்த சிவகுமார், ஏன் கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கவில்லை, என்று திமுக ஊராட்சி மன்றத் தலைவர் உஷாவுடன் வாக்குவாதம் செய்ததாகவும், அப்போது உஷாவின் கணவர் ஸ்ரீதர் ஒன்றியக்குழுத் தலைவர் சிவகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை ஒருமையில் பேசி அவமதித்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், அதிமுகவினர் பதிலுக்கு திமுகவினரிடம் வாக்குவாதம் செய்தனர். ஒருகட்டத்தில் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறியது. அரசியல் கட்சியினரிடையே வெடித்த மோதலால், கிராம மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அதையடுத்து, அங்கிருந்த போலீஸார் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த மோதலால், கிராமசபை கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

கிராம சபைக் கூட்டம்: ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் எழுதிய சம்பவம்!
கிராமசபை கூட்டத்தில் கைகலப்பு
கிராமசபை கூட்டத்தில் கைகலப்பு

இது குறித்து கும்மிடிப்பூண்டி அதிமுக ஒன்றியக்குழுத் தலைவர் சிவகுமாரிடம் பேசினோம். ``கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் என்ற முறையில் நான் பதவியேற்றதில் இருந்து என்னுடைய பகுதியில் மக்கள் பணிகளை சிறந்த முறையில் செய்து வருகிறேன். ஆனால், ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உஷாவும் அவரது கணவர் ஸ்ரீதரும் என்னை தொடர்ந்து அந்தப் பகுதியில் ஊராட்சி மன்றப் பணிகளை செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். மீறி கேட்டால், ஆட்சி எங்களுடையது அப்படிதான் செய்வோம் என்று மிரட்டல் தொனியில் பேசுகிறார்கள். ஊராட்சி மன்ற தலைவி உஷாதான் என்றாலும், அவரது கணவர் ஸ்ரீதர்தான் ஊராட்சி நிர்வாக பணிகளில் தலையிட்டு ஒரு சார்பாக செயல்பட்டு வருகிறார். கிராமசபைக் கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவர் என்ற முறையிலும், ஒன்றிய கவுன்சிலர் என்ற முறையிலும் எனக்கு அவர்கள் முறைப்படி அழைப்பு விடுதிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல் என்னை புறக்கணித்து விட்டு, கிராமசபைக் கூட்டத்தைக் கூட்டினார்கள். அதனால், என்னை எதற்காக கூட்டத்திற்கு அழைக்கவில்லை என்று ஊராட்சி மன்ற தலைவி உஷாவிடம் கேட்டேன். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவருடைய கணவர் ஸ்ரீதர் அங்கிருந்த திமுகவினருடன் சேர்ந்து என்னை அடித்துக் கீழே தள்ளி விட்டார். அப்போதுதான் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கீழே விழுந்த என்னை எழுப்பி விட்டு, திமுகவினருடன் வாக்குவாதம் செய்தனர். ஆனால், அவர்களையும் ஸ்ரீதரின் ஆட்கள் சரமாரியாகத் தாக்கினார்கள்.

நாங்கள் தான் ஆளுங்கட்சி, நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று கூறிக் கொண்டு, அடாவடி செய்து வருகின்றனர். கிராமசபைக் கூட்டத்தில் என்ன நடந்தது, யார் முதலில் தாக்குதல் நடத்தியது என அனைத்துமே வீடியோ ஆதாரத்துடன் எங்களிடம் இருக்கிறது. ஒன்றியக்குழுத் தலைவரை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டதற்கு என்னை தாக்கிய ஸ்ரீதர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன். ஆட்சிக்கு வந்த கையோடு திமுகவினர் தங்கள் அராஜகத்தை தொடங்கி விட்டனர்" என்றார்.

ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவி உஷாவிடம் இது குறித்து விளக்கம் கேட்க பலமுறை தொடர்பு கொண்டும், அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. அவர் விளக்கமளிக்கும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்கு பின்னர், அதையும் பதிவு செய்யவும் தயாராக இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு