Published:Updated:

`ஆள் செட் பண்ணி அடிச்சுட்டாங்க!’- குமரி காங்கிரஸ் கூட்டத்தில் தாக்கப்பட்ட மீனவரணி தலைவர்

தாக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் மீனவரணி தலைவர் சபீன்
தாக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் மீனவரணி தலைவர் சபீன்

இந்தக் கூட்டத்தில் தலைவர்கள் மட்டும் பேசக் கூடாது. தொண்டர்களையும் பேச அனுமதிக்கணும். தொண்டர்கள் பேசினால் உங்கள் பதவி போயிருமா என மைக்கில் பேசினேன்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஹாலில் நேற்று நடந்தது. குமரி கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத், கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார், எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் மேடையில் பேசிய தமிழக காங்கிரஸ் மீனவரணி தலைவர் சபீன், ``நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. தலைவர்கள் பிரசாரத்துக்கு வரவில்லை" எனக் கூறியதோடு சில தலைவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சீட் வாங்கி கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

சபீன் தாக்கப்படும் காட்சி
சபீன் தாக்கப்படும் காட்சி

அந்தக் கூட்டத்தில் வசந்தகுமார் எம்.பி பேசும்போது, ``நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டத் தலைவர், எம்.எல்.ஏ., வட்டார தலைவர்கள் தேர்வு செய்து பெயர்பட்டியல் வழங்கியவர்களுக்கு பி-பார்ம் வழங்கப்பட்டது. அடுத்து வரும் நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் நாம் ஏற்கெனவே போட்டியிட்ட இடங்களில் மீண்டும் போட்டியிட வேண்டும்" என்றார்.

கூட்டத்தின் நிறைவாக அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் பேசினார். கூட்டம் முடிந்து மேடையிலிருந்து இறங்கிய மாநில மீனவரணித் தலைவர் சபீனை, அங்கிருந்த சிலர் தாக்கினர். இதனால் நிர்வாகிகள் கூட்டம் களேபரமானது. இந்தத் தாக்குதலில் சபீனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. அவர் கூட்டத்திலிருந்து தப்பி வெளியே ஓடினார். இப்போது குளச்சலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி சபீனிடம் பேசினோம், ``கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் காங்கிரஸ் அழிஞ்சுபோச்சு. அதனாலதான் உள்ளாட்சியில் ஜெயிக்க முடியல. `இந்தக் கூட்டத்தில் தலைவர்கள் மட்டும் பேசக் கூடாது. தொண்டர்களையும் பேச அனுமதிக்கணும். தொண்டர்கள் பேசினால் உங்கள் பதவி போயிருமா?’ என மைக்கில் பேசினேன். உடனே கூட்டத்தில் இருந்த சிலர் என்னைப் பேசவிடாமல் சத்தம் போட்டனர். கூட்டம் முடிந்து நான் கீழே இறங்கியபோது ஆள் செட்பண்ணி என்னை அடிச்சுட்டாங்க. இப்போ ஆஸ்பத்திரியில் இருக்கிறேன். கட்சி தலைமையான டெல்லியிலிருந்து என்னிடம் பேசினார்கள். போலீஸில் புகார் கொடுக்காதீங்க, இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் புகார் கொடுக்கவில்லை" என்றார்.

காயத்துடன் வெளியேறும் சபீன்
காயத்துடன் வெளியேறும் சபீன்

இதுகுறித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம், ``ஊழியர் கூட்டத்தில் ஒவ்வொருத்தரும் ஒரு கருத்து சொல்லுவார்கள். இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஒரு குடும்பமாக இருக்க வேண்டியவர்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது" என்றார் வருத்தத்துடன். மருத்துவமனையில் சிகிச்சைபெறும் சபீனை எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு