மயிலாடுதுறையில் பாதாளச் சாக்கடைக் குழாய்கள் அடிக்கடி உடைந்து கழிவுநீர் வெளியேறி நகரே நாற்றமடிக்கிறது. எனவே, சாக்கடைக் குழாய்களைச் சரிவர பராமரிக்காத நகராட்சி நிர்வாகத்தின் மீது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் முடிவு செய்திருக்கிறது.
மயிலாடுதுறையில் கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து 13-வது முறையாகப் பாதாளச் சாக்கடைக் குழாய்கள் உடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நகரிலுள்ள 36 வார்டுகளிலும் மாறிமாறி உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதுபற்றி நுகர்வோர் பாதுகாப்புக் கழகத் தலைவரான இராம. சேயோனிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``மயிலாடுதுறை நகராட்சியில் பாதாளச் சாக்கடை பிரச்னை பூதாகரமாகியுள்ளது. நகரின் முக்கிய சாலைகள் எங்கும் பாதாளச் சாக்கடைக் கிணறுகள் உடைந்து பெரும் பள்ளம் ஏற்படுவதால் போக்குவரத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சேரி சாலை, தரங்கம்பாடி சாலை எனத் தொடங்கி தற்போது திருவாரூர் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை நகரம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக வருவாய்த் துறையிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகராட்சியும், அரசாங்கமும் இப்பிரச்னையைக் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. எனவே, மயிலாடுதுறை நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் சார்பில் சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையில் பாதாளச் சாக்கடைக் கழிவுநீர் வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டும், உரிய முறையில் பராமரிக்கத் தகுந்த உத்தரவுகள் வழங்கக் கோரியும் விரைவில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்" என்றார்.