Published:Updated:

சேலம்:`திடீரென காலி செய்ய சொன்னால் எங்கே போவோம்?’ - கலங்கும் வியாபாரிகள்

வியாபாரிகள்
வியாபாரிகள்

``மாநில அரசு சில தளர்வுகளை அறிவித்த பின்னர் கடைகளைத் திறந்தோம். இந்தப் பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளி உட்பட பலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதால் அவசரமாக கடைகளை மூட அதிகாரிகள் கூறி வருகின்றனர்”

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு ஊரடங்கு கடுமையான அமலில் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தநிலையில், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கட்டுப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாற்று இடம் வழங்காமல் உடனடியாக காலி செய்ய சொல்வதாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளனர்.

காவல்துறை
காவல்துறை

சேலத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதிகளில் சின்னக்கடை வீதியும் ஒன்று. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகளும் 200-க்கும் அதிகமான சில்லறை வியாபாரிகளும் வியாபாரம் செய்து வருகின்றனர். சாலை ஓரங்களில் வைக்கப்படும் பூக்கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட கடைகளும் இந்த 200 கடைகளில் அடங்கும்.

இந்த வியாபாரத்தை மட்டுமே நம்பி வியாபாரிகள் தங்களது அன்றாட வாழ்வை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், சின்னக்கடை வீதியில் வேலை செய்யும் மூட்டை தூக்கும் தொழிலாளி உட்பட 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

`3 மாத வாடகையே வேண்டாம்..!' -10 ரூபாய் டாக்டரின் செயலால் நெகிழ்ந்த பட்டுக்கோட்டை வியாபாரிகள்

அதிகமாக பாதிப்பு ஏற்பட்டதாலும் எப்போதும் பரபரப்பாக இயங்கும் பகுதி என்பதாலும் அப்பகுதியைத் தனிமைப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் பலரும் வியாபாரிகளிடம் நிலவும் சூழலை விளக்கி கடைகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். திடீரென அதிகாரிகள் உத்தரவிட்டதால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் செய்வது அறியாது அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடைகளை காலி செய்ய தேவையான கால அவகாசம் தராமல் உடனடியாக காலி செய்ய கூறினால் நாங்கள் எங்கே செல்வது என்றும் விற்பதற்காக வாங்கிய பொருள்களை எங்களால் விற்க முடியாத சூழல் ஏற்படும் என்றும் கால அவகாசம் அளித்தால் மட்டுமே எங்களால் கடைகளை காலி செய்ய முடியும் என்றும் அதிகாரிகளிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வியாபாரிகள்
வியாபாரிகள்

அதிகாரிகள் நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருவது தொடர்பாக சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் பேசும்போது, ``ஊரடங்கு தொடங்கியதில் இருந்து பல நாள்களாக கடைகளை திறக்க முடியாத சூழ்நிலை நிலவியது. இதனால், எங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தோம். அதன்பிறகு, மாநில அரசு சில தளர்வுகளை அறிவித்த பின்னர் கடைகளை திறந்தோம்.

இந்தப் பகுதியில் மூட்டைத் துக்கும் தொழிலாளி உட்பட சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதால் அவசரமாக கடைகளை மூட அதிகாரிகள் கூறி வருகின்றனர். எங்களுக்கு வியாபாரம் செய்வதற்கான மாற்று இடத்தை அரசு ஒதுக்க வேண்டும். அதன்பிறகு கடைகளை காலி செய்கிறோம். அப்போதுதான் எங்களது வாழ்வாதாரத்துக்கு வழி பிறக்கும். எனவே, அதிகாரிகள் எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர். சாலையோர வியாபாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 `ஒரு நாளைக்கு 4 டன்; டார்க்கெட் வைத்து திருட்டு!’ - சென்னையில் சிக்கிய காயிலாங் கடை வியாபாரிகள்
அடுத்த கட்டுரைக்கு