Published:Updated:

அன்று 90, இன்று 690… அதிகரிக்கும் `கன்டெய்ன்மென்ட்’ பகுதிகள்! #ChennaiUpdate

கண்ணகி நகர்
கண்ணகி நகர்

சென்னையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நேரத்தில், `கன்டெய்ன்மென்ட்’ பகுதிகள் எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

ஒரு பகுதியில் அல்லது ஒரு தெருவில் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால், அது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக கருதப்பட்டு அந்தப் பகுதியின் நுழைவுப்பகுதிகள் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டுவந்தன. ஏப்ரல் மாதம் சென்னையில் ஊரடங்கு கடுமையாக இருந்தது. ஏப்ரல் மாதத்தின் மத்தியில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 90 ஆக இருந்தது. இப்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டுவரும் நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.

தூய்மைப்பணியாளர்கள்
தூய்மைப்பணியாளர்கள்

வடசென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர் பகுதிகளில் அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். திரு.வி.க நகரில் 590 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அங்கு 124 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 713 பேர் பாதிக்கப்பட்ட கோடம்பாக்கத்தில் 10 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. கோடம்பாக்கம் மண்டலத்தில்தான் கோயம்பேடும் வருகிறது. கோயம்பேடு அமைந்துள்ள வார்டில் ஐந்து இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தளர்வுகள் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, முன்பு ஒரு தெருவில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அந்தத் தெரு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக கருதப்படும். இனி, தொற்று ஏற்பட்டவரின் வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகக் கருதப்படும்.

தற்போது சென்னையில் புதிதாக சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. குறிப்பாக, கண்ணகி நகர், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, எழில்நகர் ஆகிய பகுதிகளில் திடீரென கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வாழக்கூடிய இந்தப் பகுதிகள் மண்டலம் 15-ல் வருகின்றன. இந்தப் பகுதிகளில் மே 10-ம் தேதி வரையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்தது. இப்போது, 52 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கண்ணகி நகர்
கண்ணகி நகர்

கோயம்பேடு காய்கறி சந்தைக்குச் சென்றுவந்த வியாபாரிகள், புளியந்தோப்பில் உறவினர் இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஆகியோர்தான் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், மிகச் சிறிய வீடுகளில் புறாக்கூண்டுகளில் வசிப்பதுபோல மக்கள் மிக நெருக்கமாக வசித்துவரும் அந்தப் பகுதிகளில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிகவும் சிரமம்.

கொரோனாவுக்கு எதிரான போரில் பணியாற்றிவரும் முன்களப் பணியாளர்களான தூய்மைப்பணியாளர்கள் நேற்று (மே 13) சென்னை முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களின் எண்ணிக்கை குறைவு. அவர்களில் பெரும்பாலோர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள். பத்தாண்டுகளாகப் பணியாற்றும் ஓர் ஒப்பந்தத் தொழிலாளிக்கு மாதம் ஒன்றுக்கு கிடைப்பது ரூ.8,000 தான்.

குப்பை லாரி
குப்பை லாரி

எனவே, தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கோரோனா தொற்று ஏற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று கோரி சென்னை முழுவதும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பாக காலை 6.30 முதல் 8 மணி வரை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் இதுவரை தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 160 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக சென்னை மாநகராட்சித் தொழிலாளர்களின் அமைப்பான செங்கொடி சங்கம் கூறுகிறது.

மலேரியா மருந்து தெளிக்கும் தொழிலாளி ஒருவர் மரணமடைந்துவிட்டார். அவரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும் இந்தப் போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்று. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்கள் யாராவது இறந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்பு அறிவித்திருந்தார். அதன்படி மலேரியா மருந்து தெளிக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிவருகின்றனர். ஆனால், அந்தத் தொழிலாளிக்கு கொரோனா தொற்று இல்லை என்று அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

சென்னை மக்கள்
சென்னை மக்கள்

இப்போது, ``கொரோனா பரவல் உயர்ந்துதான் தணியும். எனவே, அரசு அறிவிக்கும் விதிமுறைகளை மக்கள் கடைப்பிடித்தால்தான் கொரோனா பரவலைத் தடுக்க முடியும்” என்று பொறுப்பை பொதுமக்களிடம் தள்ளிவிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதே நேரத்தில், 10- வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி அரசு கூறுவது விந்தையாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு