கொரோனா வைரஸ் அச்சத்தால் ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்படும் முன், தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொழுதுப்போக்கு அரங்குகள் என அனைத்தையும் மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து , தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளையும் மூடுவதாக முதல்வர் அறிவித்தார். சுமார், 30 நாள்களுக்கும் மேலாக அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு, வரும் மே 3-ம் தேதியன்று நிறைவடையும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், சில தளர்வுகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதனிடையே, ஊரடங்கு நிறைவடையும் மே 3-ம் தேதிக்குப் பிறகு, மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி, மகளிர் ஆயம் எனும் அமைப்பு இணையப் போராட்டத்தை நடத்தி வருகிறது. #டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்காதே, #மதுஆலைகளைத் திறக்காதே என்ற ஹேஷ்டேக்குகளுடன் ட்விட்டரில் பரப்புரை செய்துவருகின்றனர். மகளிர் ஆயம் அமைப்பினரின் அழைப்பை ஏற்று இணையப் போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாகப் பலரும் ட்விட்டரில் ட்வீட் செய்து வருவதால், தமிழக அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் உள்ளது.
மதுக்கடைகளையும் மது ஆலைகளையும் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இணையப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் மகளிர் ஆயம் அமைப்பின் தலைவர் லட்சுமியிடம் பேசினோம். “கடந்த 10 வருடங்களாக மது ஒழிப்பை வலியிறுத்தி மகளிர் ஆயம் சார்பில் பலகட்ட போராட்டங்களை மேற்கொண்டுள்ளோம். மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படும் உலக மகளிர் தினத்தை, மது ஒழிப்பு தினமாகவே கடைப்பிடித்துவருகிறோம். மது அருந்துவதால் பெரும்பான்மையான குடும்பங்களில் குடும்ப வன்முறை தலை தூக்குகிறது. அது, குழந்தைகளின் மனநலனைப் பாதிப்பதோடு, அவர்களின் கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. மேலும், இளைஞர்கள் பலரும் மதுபானங்களுக்கு அடிமையாகி, வாழ்க்கையைத் தொலைத்தவர்களாக நிற்கிறார்கள். மது விற்பனையால் இவ்வளவு சீர்கேடுகள் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும்போது, மது விற்பனையைத் தடைசெய்வதில் தமிழக அரசு தயக்கம் காட்டக்கூடாது'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,'' கொரோனா வைரஸ் தொற்று மக்கள் கூடும் இடங்களில் அதிகம் பரவிவிடும் என்பதால், மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. அரசின் உத்தரவை அடுத்து, சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. பெண்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் பல்வேறு போராட்டங்கள் மூலமாகவும், சமூகப் போராளி சசிபெருமாள் போன்றோரின் உயிரிழப்புகள் மூலமாகவும் மூடப்படாத மதுக்கடைகள், தற்போது பரவிவரும் கொரோனா எனும் பெருந்தொற்றால் மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நமக்கு பாதகமான ஒன்றாக இருந்தாலும், மதுபானங்களுக்கு அடிமையாகியிருப்பவர்கள், அவற்றிலிருந்து விடுபட ஒரு சாதகமான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இந்த வாய்ப்பை தமிழக அரசும் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு, மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த இணைய வழிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
கடந்த ஒரு மாத காலமாக சமூகத்தை உற்றுநோக்கிவருகிறோம். குடிப்பழக்கத்துக்கு உள்ளானவர்கள் குடியைப் பொருட்படுத்தாது, தங்களை மற்ற வழிகளில் திசைதிருப்பிக்கொண்டுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் குடும்ப வன்முறைகள் ஏற்படாமல் இருப்பதோடு, மகிழ்ச்சியான சூழலும் நிலவிவருகிறது. மாநில அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படும் என்ற ஒரு காரணத்துக்காக, மீண்டும் மதுக்கடைகளைத் திறக்காமல், மாற்று வழிகளில் வருமானத்தைப் பெருக்க திட்டங்களை வகுக்க வேண்டும்.
குறிப்பாக, தமிழகத்தின் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையை மாநில அரசின் ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவு பால் சங்கங்களின் வழியாகவும் தமிழக அரசே முழுமையாக ஏற்று நடத்தினால், ஆண்டுக்கு 40,000 கோடி வருமானம் கிடைக்கும். தரமான பால் மக்களுக்குக் கிடைக்கும் விதமாகவும், உழவர்களின் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இருப்பதோடு, அரசு எதிர்பார்க்கும் வருமானத்தை விட இரட்டிப்பு லாபம் அடையலாம். மூடப்பட்ட கதவுகள் முடியவாறே இருக்கட்டும். அரசு மீண்டும் மதுக்கடைகளைத் திறக்க மாட்டோம் என ஆணை பிறப்பிக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்''என்றார்.