Published:Updated:

`பட்டியல் சமூக நிர்வாகிகள்.. சுவரொட்டி சர்ச்சை!' - கோவை தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆடியோ

ஆடியோ
ஆடியோ ( மாதிரிப் படம் )

தி.மு.க-வில் பட்டியலின மக்கள் குறித்த சர்ச்சைப் பேச்சுகள் ஓயவில்லை. கோவை தி.மு.க-வில் சாதி அரசியல் தலைவிரித்தாடுகிறது எனக் குற்றம் சுமத்தி ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் தி.மு.க எம்.பி-க்கள் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதிமாறன் ஆகியோருக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக, தமிழகம் முழுவதும் பல காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆர்.எஸ்.பாரதியும் கைதும் செய்யப்பட்டார்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

இதனிடையே, பட்டியலின மக்கள் குறித்துப் பேசிய ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை கண்டித்தும் தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால், தி.மு.க-வில் பட்டியலின மக்கள் குறித்த சர்ச்சைப் பேச்சுகள் ஓயவில்லை. கோவை தி.மு.க-வில் சாதி அரசியல் நிலவுகிறது எனக் குற்றம் சுமத்தி ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் விஷயம் என்னவென்றால், தி.மு.க சார்பில் ஒரு போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது. அதில், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செந்தில்குமாரின் பெயர், பட்டியலினத்தைச் சேர்ந்த இருவரின் பெயர்களுக்குப் பின்னால் வந்துவிட்டதாம். அதனால், செந்தில்குமார் அப்செட்டாக இருப்பதாகவும், அவரை சமாதானப்படுத்துங்கள் என்றும் பொள்ளாச்சி நகர துணைச் செயலாளர் நா.கார்த்திகேயனிடம், மாவட்ட பிரதிநிதி அமுதபாரதி பேசியுள்ளார்.

ஆடியோ
ஆடியோ
மாதிரிப் படம்

ஆனால், அந்த ஆடியோவிலும் பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்தான் பேசப்பட்டுள்ளது. இந்த ஆடியோ, தற்போது கோவை தி.மு.க-வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

`` பட்டியலின மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என தலைவர் ஸ்டாலின் சொல்கிறார். அவரது நோக்கம் இங்கு காற்றில் பறந்துகொண்டிருக்கிறது. எங்களது மாவட்ட கழகமும் இந்தப் புகாரை கண்டுகொள்ளவில்லை. பட்டியலின மக்களை கேவலமாகப் பேசும் தி.மு.க நிர்வாகிகள் இருக்கும்வரை, எங்களின் பட்டியலின வாக்குவங்கி உயரப்போவதில்லை” என வேதனையோடு பேசுகின்றனர் பொள்ளாச்சி உடன்பிறப்புகள்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

ஆனால், இந்த விவகாரம் குறித்துப் பேசும் வேறு சில நிர்வாகிகளோ, ``இந்தச் சம்பவம் நடந்து 10 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. பட்டியலின மக்கள் தொடர்பாக தி.மு.க மீது நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில், உள்கட்சி பூசலால் இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்பி வருகின்றனர்” என்றும் சொல்கின்றனர்.

இதுதொடர்பாக தி.மு.க கோவை புறநகர் தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செந்தில்குமாரை தொடர்பு கொண்டோம். அவரது எண் ஸ்விட்ச் ஆஃபில் இருந்தது. இதையடுத்து, பொள்ளாச்சி நகர துணைச் செயலாளர் நா.கார்த்திகேயனிடம் பேசினோம். ``சில மாதங்களுக்கு முன்பு, எங்களது கட்சியைச் சேர்ந்த ஒரு தம்பி எனது செல்போனை எடுத்து சென்று, இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் திருப்பிக் கொடுத்தார்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

அப்போது, நானும் என் நண்பர் அமுதபாரதியும் பேசும் ஆடியோவை பதிவிறக்கம் செய்து, மற்றொரு நபர் மூலம் சமூக வலைதளங்களில் பரப்பினார். அதைவைத்து தற்போது சிலர் அரசியல் செய்கின்றனர். போஸ்டர் விவகாரத்தில் அப்போதே சுமுகத் தீர்வு எட்டப்பட்டுவிட்டது.

தி.மு.க-விலிருந்து, பி.ஜே.பி-யில் இணைந்த வி.பி.துரைசாமி மற்றும் அ.தி.மு.க-வினர் பட்டியலின மக்களை தி.மு.க-வுக்கு எதிரான மனநிலைக்கு மாற்றும் அஸைன்மென்டை கொடுத்துள்ளனர். அதை எங்களது கட்சியில் இருக்கும் சிலரே நிறைவேற்றி வருகின்றனர். அந்த ஆடியோவில் நிறைய எடிட் செய்துள்ளனர். எங்களது தனிப்பட்ட உரையாடல்களை சமூக வலைதளங்களில் பரப்புவது சட்ட விரோதமானது. இதுகுறித்து போலீஸிலும் புகாரளித்துள்ளோம்.

அமுதபாரதி
அமுதபாரதி

தி.மு.க-வுக்கும், தலைவரின் பெயருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் இந்தச் செயலை உண்மையான தி.மு.க தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்” என்றார்.

அமுதபாரதியிடம் பேசினோம், ``இது ஏதோ திட்டமிட்டுச் செய்கிறார்கள். அப்படி ஏதும் பேசியதுபோல எனக்கு நினைவில்லை” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு