`அனைவரும் மரம் வளர்ப்போம்' எனச் சொல்லப்படும் இந்தக் காலகட்டத்தில் தனி மனிதர்கள் முதற்கொண்டு பல்வேறு அமைப்பினரும் மரம் நடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் மரக்கன்றுகளை நட்டு, 5 ஆண்டுகளாக முறையாகப் பராமரித்து வந்துள்ளனர் சிவன் அடியார்கள் என்ற குழுவினர். அதில் பல மரக்கன்றுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளே இரவோடு இரவாக வெட்டியுள்ளனர் என்று முகநூல் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஒன்று வெளியாகி சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த முகநூல் வீடியோ பதிவில் பேசியிருந்த நீலமேகம் என்ற நபரை தொடர்பு கொண்டு பேசினோம். ``நாங்க ஒரு 200 அடியார்கள் இருக்கோம். ஊர் ஊராகச் சென்று இதுபோன்ற மரக்கன்றுகளை நடுவது, பாழடைந்த கோயில்களை சீரமைப்பது என இயற்கைக்கு தொண்டு செய்வது வழக்கம். யார்கிட்டயும் காசு வாங்க மாட்டோம். நாங்களே ஒரு ரூபா... அஞ்சு ரூபானு போட்டுதான் செய்வோம். இதைப் பொதுநலத்தோடுதான் செஞ்சுகிட்டு வர்றோம்.

மாமண்டூர் ஏரிக்கரையானது ஒன்றரை கி.மீ நீளம் வரை இருக்கும். நாங்க வழக்கம் போல மரம் நடுகின்ற மாதிரி, ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இலுப்பை மரம், அரசமரம், ஆலமரம் என எல்லா மரத்தையும் கலந்துகட்டி சுமார் 1,500 மரம் வரைக்கும் நட்டோம். மரம் நட்டால் ஊருக்கு மழை வரும் என்ற எண்ணத்தில்தான் வைத்தோம். காற்று இப்போல்லாம் மாசுபடுதுனு சொல்றாங்க. இலுப்பை மரம் காற்றை சுத்தம் செய்யக்கூடியது என்பதால் அதையும் வைத்தோம். 5 வருடமாக முறையாகத் தண்ணீர் ஊற்றி, வளர்த்து வந்தோம். இந்த மாதிரி மரக்கன்று நடுவதற்கு முன்னாடி அப்போது இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிங்ககிட்ட அனுமதி கேட்டோம். அவங்களும் வாய் வார்த்தையா `வச்சுக்கோங்க..!' அப்படின்னு சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறமாதான் இந்த மரத்தை எல்லாம் நட்டோம். அஞ்சு வருஷத்துல நல்லா வளர்ந்து இருந்தது. மரத்தை வெட்டுவதற்கு மக்கள்கிட்ட கேட்டிருக்காங்க. மக்கள் அதுக்கு ஒத்துக்கல என்றதனால், போன செவ்வாய்க்கிழமை அன்று ராத்திரி நேரத்தில பொதுப்பணித்துறை அதிகாரிங்க மூலமாகத்தான் 100 மரங்களை வெட்டியிருக்காங்க. பேருக்கு மட்டும் பொதுப்பணித்துறை என்கிறார்கள். இந்த மரங்கள் வெட்டப்பட்டது மிகவும் மனசுக்கு கஷ்டமாக உள்ளது. அப்துல் கலாம் ஐயா `மரம் வளருங்கள்' அப்படின்னு சொல்லிட்டு போயிருக்காங்க. ஆனா, இந்த அதிகாரிங்களோ, இப்படி வளர்த்ததையும் அழிக்கிறாங்க. ஆலமரம், அரசமரம் எல்லாம் ஏரிக்கரையின் அடிப்பகுதியில்தான் நட்டுள்ளோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதனால் எந்தப் பாதிப்பும் இல்லைங்க. ஏதோ ஏரியைப் பராமரிப்பதற்கு கோடிக்கணக்கில நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறதா அதிகாரிகளே பேசிக்கிறாங்க. அதனாலதான் இந்த மாதிரி எல்லாம் பண்றாங்க. ஏற்கெனவே, ஒரு முறை ஏரிக்கரைக்கு ஆபத்து அப்படின்னு சொல்லி ஜே.சி.பி வண்டி மூலமா வேற இடத்துல மரத்தை எடுத்து வைப்பதாகச் சொல்லிட்டு, 25 மரத்தை நோண்டி நட்டாங்க. எல்லாமே காஞ்சு போச்சு. இப்போ இந்த மாதிரி ஒரு 100 மரம் வரைக்கும் வெட்டிட்டாங்க. இனிமேலும், இருக்கிற மரங்களை வெட்டாமல் விட்டால் போதும்" என்றார் ஆதங்கத்துடன்.
இதுதொடர்பாக மாமண்டூர் ஊராட்சிமன்றத் தலைவர் ஜெகனிடம் பேசினோம். ``கொள்ளளவு படி பார்த்தால் தமிழகத்தில் மூன்றாவது பெரிய ஏரி இது. திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் ஏரி. இந்த ஏரிக்கு 4 மதகுகள் இருக்கு. 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவர் காலத்தைச் சேர்ந்த மிகவும் பெரிய ஏரி. சுமார் 60 வருடங்களுக்கு முன்பாக ஏரியில் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டதாகத் தகவல்கள் உண்டு. என்னுடைய அப்பா 1996-ல் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். அப்போது ஏரியின் கொள்ளளவு 31 அடியாக இருந்துள்ளது. மழை பெய்து தண்ணீர் நிரம்பி இருந்தபோது ஏரி உடையும் வாய்ப்பு இருந்ததால் சுமார் 1,000 பேர் பள்ளிக்கூடத்தில் அப்போது தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அதன் பின்னர், ஆபத்தான ஆழமாக இருக்கிறது என்று அப்போதைய கலெக்டர் மேற்பார்வையில் 2 அடி குறைத்து 29 அடி ஆழமாக மாற்றினார்கள். இப்போது ஏரிக்கரையில் மரம் நட்டுள்ளவர்கள், இதற்கு முன்பு இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மரம் நடுவதற்கு அனுமதி கேட்டுள்ளார்கள் போல. அவர்களும் வாய்வழி மூலமாக அனுமதி கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அதனடிப்படையில் ஏரிக்கரையைச் சுற்றி மரத்தை நட்டதாகக் கூறுகின்றனர்.

ஏரிக்கரையின் உச்சிவரை இவர்கள் மரத்தை நட்டுள்ளார்கள். இவ்வாறு மரம் நடுவது ஆபத்தானது. வரும் காலங்களில் சூறாவளி போன்ற பேரிடரில் மரம் சாயும்போது அதன் வேர்கள் மக்கி, அதன் வழியாக ஏரி தண்ணீர் வெளியேறி, ஏரிக்கரைக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் ஏற்படும் பேரிழப்பைத் தடுக்க முடியாமல் போய்விடும். யாரோ தெரியாமல் நட்டுவிட்டார்கள். பாரம்பர்யமான இந்த ஏரியைக் காப்பாற்ற வேண்டும்.
``ஹிட்டாச்சி எந்திரம் மூலமாக மரத்தை தோண்டி, மரம் நட்டவர்கள் சொல்லும் இடத்தில் வைத்துவிடலாம். அதற்கான செலவை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். கூடுதலாக மரக்கன்றுகளை நடவு செய்து தர சொன்னாலும் நாங்கள் நடவு செய்து தரவும் தயார்" என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் என்னிடம் கூறி, மரம் நட்டவர்களிடம் பேச்சுவார்த்தை பண்ணச் சொன்னார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நானும் மரம் நட்டவர்களிடம் பேசியபோது, ``எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்யுங்கள் தலைவரே" என்று சொல்லிவிட்டார்கள். அதனால், மூன்று தினங்கள் கழித்து ஹிட்டாச்சி இயந்திரத்துடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்தார்கள். என்னை எதிர்த்து நின்று போட்டியிட்டவர் மதியழகன். அவரின் தம்பி மாதவன் என்பவரின் தூண்டுதலின் பேரில் அப்போது சம்மதம் தெரிவித்த மரம் நட்டவர்கள், இப்போ எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் பேச்சுவார்த்தை செய்ததாலேயே இப்படி தூண்டி விட்டிருக்கிறார்கள்.
அண்மையில் யாரோ 80 மரங்கள் வரை வெட்டி இருக்கிறார்கள். அது யார் எனத் தெரியவில்லை. `இவ்வாறு மரம் வளர்ந்தால் ஆபத்து என்பதை மக்களிடம் விளக்க வேண்டும்' என்று அதிகாரிகளும் இரு தினங்களுக்கு முன் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். `1000 மரத்தை பின்னர் நாம் வளர்க்கலாம். ஆனால், ஏரிதான் நமக்கு முக்கியம்' என மக்களும் சிந்திக்கிறார்கள்; பேசுகிறார்கள். 10 நபர்கள் மட்டும்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுக்கிறார்கள்.

ஏரி கலிங்கலில் தண்ணீர் போகும் அளவுக்கு, ஏரியில் தண்ணீர் வந்துவிட்டால் 3 மாதங்களுக்கு தண்ணீர் குறையாமல் அப்படியே இருக்கும். கரைக்கு மேலே தண்ணீர் தத்தளிக்கும். ஒரு கார் போகும் அளவுக்குதான் ஏரிக் கரையின் அகலம் இருக்கிறது. ஏரிக்கரையின் உச்சிவரை இவர்கள் மரம் வைத்துள்ளார்கள். மரத்தின் வேர் தண்ணீர் எங்கு உள்ளதோ அதை நோக்கித்தான் பயணிக்கும். அப்படி இருக்க சூறாவளி போன்ற சமயங்களில் மரம் சாய்ந்துவிட்டாள். பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும்" என்றார்.
இதுதொடர்பாக விளக்கம் கேட்க பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் கோவிந்தராஜனிடம் பேசினோம்.
``நாங்கள் அண்மையில்தான் இங்கு பொறுப்புக்கு வந்தோம். மாமண்டூர் ஏரிக் கரையில் ஆபத்தான முறையில் மரங்கள் நடப்பட்டுள்ளதாக விவசாய சங்கத்தில் இருந்து சிலர் வந்து புகார் கொடுத்தனர். அங்கு சென்று பார்த்தோம். ஏரிக்கரையின் சரிவில் வைக்கும் மரம் அது கிடையாது. ஏரிக்கரையின் அடிவாரத்தில்தான் இது போன்று மரமெல்லாம் வைப்பார்கள். ஆனால், இவர்கள் ஏரிக்கரையின் உச்சிவரை சென்று மரத்தை நட்டு வைத்துள்ளார்கள். கடந்த மார்ச் மாதம், இயந்திரம் மூலம் சுமார் 20 மரத்தை எடுத்து மற்ற இடத்தில் நடுவதற்காக அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போதும் அவர்கள் ஒத்துக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.
எல்லாம் ஆணி வேர் கொண்ட மரங்கள். இயந்திரத்தால் தோண்டும்போது அந்த வேர்கள் அறுபட்டுவிடுகின்றன. அந்தக் காலத்தில், இரண்டு மலைகளுக்கு நடுவே ஆற்றுப்படுகையாக இந்த ஏரி உள்ள இடம் இருந்துள்ளது என ஒரு விவசாயி கூறினார். அடியில் மணலாக உள்ள பகுதி. இங்குள்ள கரையில், இவர்கள் வரிசையாக மரங்களை வைத்துவிட்டார்கள். கரையின் உச்சிப் பகுதி வரை மரம் இருப்பதால் கரைக்கு எதிர் திரையில் சற்று மரம் சாய்ந்தபடி வளரும். மழையில் மரம் நனைந்து, பலத்த காற்று அடிக்கும்போது ஒரு மரம் சாய்ந்தால் மற்றொரு மரத்தின் மீது விழுந்து அதுவும் சாய்ந்துவிடும். அதோடு மண்ணையும் பெயர்த்துவிடும். ஏரி அச்சமயத்தில் முழு கொள்ளளவில் இருந்தால் மிகப்பெரிய பேரழிவைத் தடுக்க முடியாது. இதை எல்லாம் எடுத்துக் கூறி கடந்த மார்ச் மாதம் அப்போதைய அதிகாரிகள் சென்றபோது அவர்கள் கேட்காமல் இருந்துள்ளனர்.
ஊராட்சி மன்றத் தலைவரிடமும் நாங்கள் இதுகுறித்து பேசியிருந்தோம். அவரும் பேசுவதாகச் சொல்லி இருந்தார். மரம் நட்டவர்கள் புரிந்துகொள்ளாததால் ஏரிக்கரையின் மேல் பகுதியை ஒட்டியுள்ள முதல் வரிசையை எடுப்போம் என்று முடிவு செய்து, எங்களுடைய அதிகாரிகளைக் கொண்டு அன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மாலை நேரத்தில் அந்த மரங்களை எடுத்தோம். அதன் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை.
சிவனடியார்கள் கூட்டம் எனச் சொல்லும் இவர்கள், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்போது இந்த அமைப்பின் தலைவர் என்று யாரையும் சரியாகக் குறிப்பிட்டு கொடுப்பதில்லை. ஊர் பொதுமக்கள் என்று கொடுக்கிறார்கள். நேரில் சென்று பேசும்போது நான் இல்லை என்று ஒதுங்கி விடுகிறார்கள். யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை.
கடந்த ஆட்சியின்போது சுமார் ஐந்து ஏரியின் கொள்ளளவை அதிகப்படுத்துவதற்காக எஸ்டிமேட் போடப்பட்டுள்ளது. நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. ஏரி பராமரிப்புக்கான எந்தப் பணியும் இப்போது இல்லை. அப்படி ஏதாவது பணி இருந்திருந்தால் ஒப்பந்ததாரர்களிடமே ஒப்படைத்திருந்திருப்போம். எங்களுக்கு இந்த வேலையே இருந்திருக்காது" என்றார்.