ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கடுக்களுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் பழனி. இவர் ஹவில்தாராகப் பணியாற்றிவந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்தார்.
அவரின் உடல் சொந்த ஊரான கடுக்களூரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதே இடத்தில் ராணுவ வீரர் பழனியின் சகோதரர், பெற்றோர் நினைவிடம் கட்டியுள்ளனர்.

அதன் திறப்புவிழா நேற்று காலை நடைபெற்றது. `விழாவுக்கு எங்களை அழைக்கவில்லை’ என்றும், `கல்வெட்டில் என் குழந்தைகள் பெயர் இடம்பெறவில்லை’ என்றும் பழனியின் மனைவி வானதி தேவி குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் நினைவிடம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து வானதி தேவியிடம் பேசினோம்.
``என் கணவர் ராணுவத்தில் நாட்டுக்காகப் போராடி உயிர்நீத்தவர். என் குழந்தைகளுக்கு விவரம் தெரிவதற்குள் அவர் உயிரை விட்டுவிட்டார். அவர் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்துள்ளார், நான் அவருக்காக என் வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளேன். அவருக்கு நினைவிடம் கட்டுகிறார்கள் என்றதும் எனக்குப் பெருமையாக இருந்தது. ஆனால் தனிப்பட்ட குடும்பப் பிரச்னை காரணமாக என் கணவரின் நினைவிடத்துக்கு எனக்கு அனுமதி மறுத்திருப்பது வேதனையாக உள்ளது.

எனவே, தமிழக அரசு என்னுடைய கணவர் நினைவிடத்தில் எனக்கும், என் குழந்தைகளுக்கும் முழு உரிமை வழங்க வேண்டும். நினைவிடக் கல்வெட்டில் என் குழந்தைகளின் பெயர் இடம்பெற வேண்டும். அதுவரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்” எனத் தெரிவித்தார்.