Published:Updated:

`பாலில் தண்ணீர் கலந்த விவகாரமே ஓயல; அதுக்குள்ள...' - ஆரணி ஆவின் சர்ச்சை

பால் உற்பத்தியாளர்களுக்கு, தமிழக அரசு ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி, 28-ரூபாயிலிருந்து 32 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. ஆனால், ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பழைய விலைக்கே கொள்முதல் செய்வதாகப் புகார் எழுந்துள்ளது.

போராட்டம் நடத்திய பால் முகவர்கள்.
போராட்டம் நடத்திய பால் முகவர்கள். ( கா.முரளி )

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பால் உற்பத்தியாளர் சங்க கொள்முதல் நிலையத்தில், கடந்த ஜூன் மாதம் ஆவினுக்கு அனுப்பப்பட்ட 5,500 லிட்டர் பாலில், 600 லிட்டர் தண்ணீர் கலந்து அனுப்பட்டதாக ஆவின் நிர்வாகம் கண்டுபிடித்தது.

``இப்படியே போனால் ஆவின் பால் விற்பனையைப் புறக்கணிக்க வேண்டிவரும்'' - பால் முகவர்கள் சங்கம்

இந்த விசாரணையே முடிவுக்கு வராத நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது, ஆரணி பால் உற்பத்தியாளர் சங்கம்.

இதுகுறித்து அச்சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் பால் முகவர்களிடம் கேட்டோம். ``ஆரணி ஆரணிப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஆரணி, சேவூர், இரும்பேடு உட்பட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து, நாள்தோறும் 5000 லிட்டர் முதல் 6,500 லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பின்னர், வேலூர், சென்னை அம்பத்தூர் ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது. மற்றவை, லோக்கல் பகுதியிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

பால் விலையை உயர்த்தியும் விவசாயிகளுக்கு பெருநஷ்டமே... எப்படி?

இந்நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி, தமிழக அரசு ஆவின் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாயும், கொள்முதல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்தியது. அது, 19-ம் தேதியிலிருந்தே அமலுக்கு வந்தது. ஆனால், ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பழைய விலைக்கே கொள்முதல்செய்து, நுகர்வோர்களுக்கு புதிய விலைக்கு விற்கப்படுவதாகத் தெரிகிறது. நாங்கள் கொடுத்த பாலுக்கு பழைய விலையிலேயே கணக்கு போடப்பட்டுள்ளது.

அதோடு, பால் விலை உயர்வுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்குப் பணம் தரவில்லை. அதாவது, கடந்த இரண்டு மாதங்களாக எங்களுக்கு பணம் வழங்காமல் காலம்தாழ்த்திவருகின்றனர்.

ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

இதுகுறித்து சங்கச் செயலாளரிடம் கேட்டால், `நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அமைதியாகச் செல்ல வேண்டும். ஆர்ப்பாட்டம், கலாட்டா செய்தால் 2 மாதங்கள் அல்ல 3 மாதங்கள் ஆனாலும் பணம் வாங்க முடியாது' என்கிறார்கள். இந்த விவகாரத்தில், ஆவின் நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்” என்றனர்.