Published:Updated:

` ஆதீன வரலாற்றில் இப்படி நடந்ததில்லை!' - வெள்ளை உடையணிந்து காசிக்குச் சென்ற திருவாவடுதுறை சுவாமிகள்

திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டளை சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் அப்பொறுப்பிலிருந்து விலகியதுடன் வெள்ளை உடை அணிந்து காசிக்குச் சென்று விட்டது ஆன்மிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதீனத்துடன் சுவாமிநாத  தம்பிரான் சுவாமிகள்
ஆதீனத்துடன் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள்

திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டளை சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் அப்பொறுப்பிலிருந்து விலகி, காசிக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு அரசியல் அழுத்தமே காரணம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள்
சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள்

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானது கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில். இக்கோயிலில் கட்டளை தம்பிரானாக இருந்தவர் ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள். கோயில் நிர்வாகத்தை கவனிப்பது, காணிக்கையாக வரும் நன்கொடைகளை முறைப்படுத்திச் செயல்படுத்துவது மற்றும் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை நிர்வகிப்பது போன்ற பணிகளைச் செய்துவந்தார்.

இந்தநிலையில், இவர் கடந்த ஒரு வருடமாக மகாலிங்கசுவாமி கோயிலுக்குச் சொந்தமான குளங்களைத் தூர்வாரும் பணியைச் செய்து வந்தார். அப்போது அரசின் உரிய அனுமதி இல்லாமல் மணல் எடுத்து விற்பதாக திருவிடைமருதூர் பா.ஜ.க நகரச் செயலாளர் ராஜ் என்பவர் குற்றம்சாட்டினர். பின்னர் தம்பிரான் சுவாமிகள் தரப்பில் சிம்மராஜா என்பவர் மூலம் ராஜ் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ராஜ் மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்தனர் போலீஸார்.

ஆதீனத்துடன் சுவாமிநாத  தம்பிரான் சுவாமிகள்
ஆதீனத்துடன் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள்

சுவாமி நாத தம்பிரான் சுவாமிகள் மீது ராஜ் புகார் கொடுத்தும் எந்த வழக்கும் பதியப்படவில்லை. இந்நிலையில் தற்போது தம்பிரான் சுவாமிகள், தமது உடல்நிலையைக் காரணம் காட்டி ஆதீன தம்பிரான் திருக்கூட்டத்திலிருந்து விலகுவதாக ஆதீன தலைமை மடத்துக்குக் கடிதம் அளித்தார். இதையடுத்து திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்படி, ஆதீன மடத்தின் திருக்கூட்டத்து அடியவர் பொறுப்பிலிருந்து சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் அவருக்குக் கொடுக்கப்பட்ட மந்திர கஷாயம், தம்பிரான் வேடம் முதலியவற்றை ஆதீன தலைமை மடத்தில் ஒப்படைத்துவிட்டு, பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசிபெற்று கொண்டு மடத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

இதுகுறித்து மடத்துக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ``திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டளை தம்பிரானாக ஈரோட்டைச் சேர்ந்த சுவாமிநாதன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்றார். இவர் ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில்களை நிர்வகித்து வந்தார். இவர் பெரிய சாமியான திருவாவடுதுறை ஆதினத்திடம் அனுமதி பெற்றே எல்லா செயலையும் செய்ய வேண்டும். ஆனால், காலப்போக்கில் ஆதினத்திடம் எதையும் கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினார்.

சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள்
சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள்

இதுகுறித்து ஆதினத்துக்குப் புகார்களும் வந்த வண்ணம் இருந்தன. இதற்கிடையில் திருவிடைமருதூர் பகுதியில் உள்ள பல்வேறு ஊர்களில் ஆதீனத்துக்குச் சொந்தமான 32 குளங்கள் உள்ளன. இதில் பத்துக் குளங்களை தூர்வாரி அதில் தண்ணீரை நிரப்பினார். குளத்தின் மண்ணை எடுத்து அவர் விற்பனை செய்து வருவதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. தம்பிரான் தரப்பிலிருந்து ராஜ் மீது புகார் கொடுக்கப்பட்ட உடனேயே அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது நடந்து சில மாதங்கள் இருக்கும்.

தற்போது வயதை காரணம் காட்டி தானே பொறுப்பிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்ததுடன் மடத்திலிருந்து விலகி வெள்ளை உடை அணிந்து காசிக்குச் சென்று விட்டார். இப்படி நடப்பது ஆதின மட வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. காவி உடை அணிந்து ஆதினப் பொறுப்பிலிருந்து ஆன்மிகப் பணி செய்தவர் மீண்டும் வெள்ளை உடை அணிந்து சாதாரண மனிதனாக மாறியிருப்பது எங்குமே நடக்காதது.

மடத்தின் தரப்பில் தவறு செய்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவது வழக்கம். ஆனால், இவரை மடத்தின் நிர்வாகம், ` நீங்களே விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுங்கள்' எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதன் பிறகே தம்பிரான் விலகல் கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்" என்கின்றனர்.

சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் தரப்பினரிடம் பேசினோம். `` மடத்துக்குச் சொந்தமான 10 குளங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்தன. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றை மீட்டு தூர்வாரி அதில் நீரை நிரப்பினார் தம்பிரான் சுவாமிகள். இதனால் அவருக்கு எதிராக ஆக்கிரமிப்பாளர்கள் பலர் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினர். அதனுடன் ஒரு சில அரசியல் கட்சியினர் குளம் தூர்வாரும் ஒப்பந்தத்தையும் தூர்வாரும் மண்ணை விற்கும் உரிமையை தங்களுக்குத் தர வேண்டும் என அழுத்தம் கொடுத்தனர். ஆனால் தம்பிரான் சுவாமிகள் இதற்கு அடிபணியாமல், `கோயில் நிர்வாகமே நேரடியாக இந்தப் பணியைச் செய்கிறது தூர்வாரப்படும் மண் கரையை பலப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது' என்று தெரிவித்தார்.

இது குறித்து ஏற்பட்ட பிரச்னை காவல் நிலையத்துக்கும் சென்றது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தம்பிரான் சுவாமிகளுக்கு நெருக்கடி கொடுத்ததுடன், குருமகா சந்நிதானத்திடமும் புகார் அளித்தனர். குரு மகா சந்நிதானம் தம்பிரான் சுவாமியிடம் கடிந்து கொண்டதாக தெரிகிறது.

ஆதீனத்துடன் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள்
ஆதீனத்துடன் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள்

இந்த நிலையில் தம்பிரான் சுவாமிகள் தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகியதுடன் உடனே காசிக்குச் சென்று விட்டார். இதற்கு அரசியல் அழுத்தமே காரணம்" என்கின்றனர்.

தம்பிரான் சுவாமிகளின் விலகல் தொடர்பாக, பா.ஜ.க பிரமுகர் ராஜிடம் பேசினோம், ``தம்பிரான் சுவாமி, சிம்மராஜா என்பவரின் துணையோடு குளங்களை தூர் வாருகிறேன் என்கிற பெயரில் மண் எடுத்து விற்று பெரிய அளவில் பணம் சம்பாதித்து வந்தனர். இதைத் தட்டிக் கேட்ட என் மீது புகார் அளித்தனர். அவரை பற்றித் தற்போதுதான் மடத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. அவர் விலகலுக்கு அவரின் செயல்பாடே காரணம். எந்த அரசியல் அழுத்தமும் இல்லை" என்றார்.

சுவாமிநாத தம்பிரான் சுவாமியிடம் பேசினோம், ``நான் என்னுடைய பொறுப்பிலிருந்து விலகிவிட்டேன். தற்போது காசியில் இருக்கிறேன். பின்னர் இதைப் பற்றிப் பேசுகிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார்.