Published:Updated:

மரங்களை வெட்டச் சொன்னாரா ஆதீனம்? - துழாவூர் சர்ச்சை

பிரபாகரன் ச
சாய் தர்மராஜ்.ச

40 வருடங்களாகப் பயன்தரும் மரங்கள் இவை. கால்நடைகள் இளைப்பாறுவதற்கும் மேய்வதற்கும் இடம்கொடுத்த மரங்களை வெட்டிவிட்டு, பொது ஊரணியையும் கோயிலையும் முள்வேலி அமைத்து ஆக்கிரமிக்க துழாவூர் ஆதீனம் முயற்சி செய்கிறார்.

வெட்டப்பட்ட மரங்கள் துழாவூர் ஆதீனம்
வெட்டப்பட்ட மரங்கள் துழாவூர் ஆதீனம் ( சாய் தர்மராஜ் )

குன்றக்குடிக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் துழாவூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட பொது ஊரணியின் கரையில் வரந்தரு பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது.

வெட்டப்பட்ட மரங்கள் துழாவூர் ஆதீனம்
வெட்டப்பட்ட மரங்கள் துழாவூர் ஆதீனம்
சாய் தர்மராஜ்

இந்தக் கோயிலைச் சுற்றியிருக்கிற 16 மரங்கள் ஊராட்சி நிர்வாக அலுவலர் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி வெட்டப்பட்டுள்ளன. இதில் துழாவூர் ஆதீனத்தின் தூண்டுதல் இருப்பதாக ஊர் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

துழாவூரைச் சேர்ந்த சுப்பிரமணி, "40 வருடங்களாகப் பயன்தரும் மரங்கள் இவை. கால்நடைகள் இளைப்பாறுவதற்கும் மேய்வதற்கும் இடம்கொடுத்த மரங்களை வெட்டிவிட்டு, பொது ஊரணியையும் கோயிலையும் முள்வேலி அமைத்து ஆக்கிரமிக்க துழாவூர் ஆதினம் முயன்றுவருகிறார். மடத்துக்கு வருவாய் இல்லாததால் அம்மரங்கள் மூலமாக வருவாய் பெற, ஊர் இரண்டாக இருப்பதைப் பயன்படுத்தி ஒருசாரார் மூலம் மரங்களை வெட்டியிருக்கிறார்கள்.

8 வருடங்களுக்கும் மேலாக இந்தப் பிரச்னை தொடர்ந்துவருகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பும், இதுபோல் மரங்களை வெட்ட முயன்றபோது... ஊர் மக்கள் சார்பாக மனுக் கொடுத்து தடுத்து நிறுத்தினோம். இப்போது மரங்களை வெட்டிவிட்டனர்" என்றார்.

துழாவூர் ஆதீனம்
துழாவூர் ஆதீனம்
எஸ்.சாய்தர்மராஜ்

இதுகுறித்து துழாவூர் ஆதின கர்த்தா, "அங்க இருக்கிற மரங்களின் வேர்களால், ஊரணி கட்டுச்சுவர் நகர்வது மாதிரி இருக்கு. கோயில் மற்றும் ஊரணியைப் பாதுகாக்கும் பொருட்டு, ஊரணி சேதமடையக்கூடாது என்ற எண்ணத்தில்தான் கரையில் சுற்றியுள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வாங்க முயன்றோம். அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் நியாயமான வழியில்தான் வெட்ட முயன்றோம். இப்போது நடந்திருப்பதில் ஆதீனத்தின் தலையீடு இல்லை. ஊரணியை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல" என்றார்.

"இந்தக் கோயிலின் ட்ரஸ்டியாக உள்ள ஆதீனத்தின் தூண்டுதல் இல்லாமல் மரங்கள் வெட்டப்பட்டிருக்காது. பொது ஊரணியைச் சுத்தப்படுத்தும் பேரில் மரங்களையும் சேர்த்து வெட்டியிருக்கின்றனர்" என மக்கள் குறைகூறுகின்றனர்.

ஜெ.ஜெயகாந்தன்
ஜெ.ஜெயகாந்தன்
எஸ்.சாய்தர்மராஜ்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், "அத்துமீறி மரங்களை வெட்டியவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.