Published:Updated:

`பட்டியலின மக்களுக்கு பொருள்கள் விற்றால் ரூ.1 லட்சம் அபராதம்'- சர்ச்சையை ஏற்படுத்திய தீர்மானம்!

``பட்டியலின மக்கள் கொடுக்கும் பாலை கடைகளில் வாங்கி விற்கக் கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புகார் கொடுக்கும் மக்கள்
புகார் கொடுக்கும் மக்கள்

பட்டியலின மக்களுக்குப் பொருள்களை விற்கக் கூடாது என்றும் மீறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செஞ்சி
செஞ்சி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஒன்றியத்துக்குள் இருக்கிறது ஏதாநெமிலி கிராமம். இங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் 17-ம் தேதி பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அதை இரவோடு இரவாக மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் செஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி தீபாவளி தினத்தன்று இரு தரப்பினருக்கும் மோதல் முற்றியது. அதையடுத்து, செஞ்சி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து வைக்கப்பட்டது. மேலும், பொது இடத்தை தனிப்பட்ட எவர் ஒருவரும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்றும், மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் வட்டாட்சியர் தரப்பில் எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறது.

புகார் கொடுக்கும் மக்கள்
புகார் கொடுக்கும் மக்கள்

இந்த நிலையில்தான், கடந்த 31-ம் தேதி இரவு மாற்று சமூகத்தைச் சேர்ந்த நடராஜன், பிச்சாண்டி, ரவி, மணியரசு, ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ``பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் கடைகளில் யாரும் பொருள்கள் வாங்கக் கூடாது. தங்கள் பகுதியில் இருக்கும் கடைகளில் அவர்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கக் கூடாது. டீக்கடைகளில் டீ கொடுக்கக் கூடாது. பட்டியலின மக்கள் கொடுக்கும் பாலை கடைகளில் வாங்கி விற்கக் கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சாதிய மோதல்கள் ஏற்படுத்தி, பிரிவினையைத் தூண்டும் விதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏதாநெமிலி கிராமத்தைச் சேர்ந்த தேவபிரகாஷ் என்பவர் செஞ்சி வட்டாட்சியர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ரவிச்சந்திரன், நடராஜன், பிச்சாண்டி, நடராஜ், மணியரசு, ரவி, ஏழுமலை, சுந்தரம், சுரேஷ், சுரேஷின் அண்ணி ஜான்சி உள்ளிட்ட 10 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புகார் கொடுக்கும் மக்கள்
புகார் கொடுக்கும் மக்கள்

நிலவுக்கு ஏவுகணைகளை அனுப்பி அறிவியலில் நாம் உயர்ந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான், இப்படியான சாதியப் பிரிவினைகளால் அதலபாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்று ஆதங்கப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.