Published:Updated:

குன்னூர்: கற்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் கழிவுகள்... சுவர் கட்டுவதில் நகராட்சியின் `அடடே' முயற்சி!

பிளாஸ்டிக் கழிவுகளால் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்
பிளாஸ்டிக் கழிவுகளால் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்

மறுசுழற்சி செய்ய முடியாத 25 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி 100 அடி நீள தடுப்புச் சுவரை அமைத்துள்ள குன்னூர் நகராட்சியின் புது முயற்சி வரவேற்பைப் பெற்றுள்ளது.

பூமியில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க உலக நாடுகள் போராடினாலும் அது சாத்தியமற்றதாகவே உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவே பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டிருந்தாலும் அதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.

நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் முதல் குளிர்பானங்கள் வரை தடை செய்யப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் நாள்தோறும் டன் கணக்கான பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இப்படிச் சேகரிக்கப்படும் கழிவுகளை மேலாண்மை செய்வது கடினமான பணியாக உள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளால் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்
பிளாஸ்டிக் கழிவுகளால் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்

மறுசுழற்சி செய்ய முடியாத, சூழலியலுக்கு தீங்கு விளைவிக்கும் இத்தகைய பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு தடுப்புச் சுவரை கட்டி புதுமையான நல்ல முயற்சியை மேற்கொண்டு வருகிறது குன்னூர் நகராட்சி.

இந்தச் சோதனை முயற்சி குறித்து நம்மிடம் பேசிய குன்னூர் நகராட்சி ஆணையர் பாலுசாமி, ``புதிய முயற்சியாக மறுசுழற்சி செய்ய இயலாத, நகரில் தினசரி உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து சுமார் 200 கிலோ எடை கொண்ட உயர் அழுத்த பொதிகளாக மாற்றி அதைக் கற்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தி தடுப்புச் சுவர் அமைக்கும் சோதனை முயற்சியை மேற்கொண்டோம்.

பிளாஸ்டிக் கழிவுகளால் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்
பிளாஸ்டிக் கழிவுகளால் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்

பிளாஸ்டிக் பொதிகளைக் கொண்டு 100 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட பிளாஸ்டிக்கால் ஆன தடுப்புச் சுவர் நகராட்சியின் உரம் தயாரிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டது. இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் மண் சரிவு ஏற்படும் இடங்களில் இந்த தடுப்புச் சுவர்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட உள்ளது" என்றார்.

கழிவுகளைப் பதப்படுத்துவதில் நகராட்சியுடன் இணைந்து செயல்படும் `கிளீன் குன்னூர்’ தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் வசந்தன் மற்றும் சமந்தா நம்மிடம் பேசுகையில், ``குன்னூரில் உள்ள மைக்ரோ கம்போஸ்ட் சென்டர் அருகில் 100 அடி நீளம் கொண்ட ஒரு சுவரைக் கட்ட 25 டன் எடையுள்ள பல பிளாஸ்டிக் பொதிகள் தேவைப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் கழிவுகளால் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்
பிளாஸ்டிக் கழிவுகளால் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்

இதில் பயன்படுத்தப்பட்டது பெரும்பாலும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள். எனவே, பிளாஸ்டிக்கைக் கட்டுமானப் பொருளாக மறுபயன்பாடு செய்வது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமையும். கடந்த ஏழு மாதங்களில் குன்னூர் நகராட்சியில் 630 டன்களுக்கும் அதிகமான உலர்ந்த கழிவுகளைப் பதப்படுத்த முடிந்தது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு