Published:Updated:

`லத்தியைக் காட்டிய போலீஸார்; மெடிக்கல் ஷாப் வாயிலில் கட்டம்!’ - தஞ்சை நிலவரம் #Lockdown21

தஞ்சாவூரில் வரிசையில் மக்கள்
தஞ்சாவூரில் வரிசையில் மக்கள் ( ம.அரவிந்த் )

கூடினால் கேடு வரும்; அதனால் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்போம்; கொரோனா வருவதைத் தவிர்ப்போம். இதை அன்பாகச் சொல்கிறோம் என்றனர்.

கொரோனாவைத் தடுக்கும் விதமாக 21 நாள்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தஞ்சாவூரில் வழக்கம்போல் மக்கள் வெளியே வந்ததுடன் கூட்டமாகவும் இருந்தனர். அவர்களை போலீஸார் லத்தியைக் கொண்டு விரட்டினர். மெடிக்கல் ஷாப் ஒன்றில் கட்டம் வரைந்து அதில் வருபவர்களுக்கு மட்டுமே மருந்து தரப்படும் இது எங்களுக்காக இல்லை உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும் என கூற பொதுமக்கள் இதைக் கடைப்பிடித்தனர். அனைவர் மத்தியிலும் இது நல்ல வரவேற்பைப் பெற்றது.

கொரோனா குறித்து எச்சரிக்கும் போலீஸார்
கொரோனா குறித்து எச்சரிக்கும் போலீஸார்

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 21 நாள்கள் மக்கள் வெளியே வர தடைவிதிக்கப்பட்டு ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதைக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா பரவாமல் தடுக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியத் தேவையான மளிகை, மருந்து, காய்கறி, பால், இறைச்சி உள்ளிட்ட பொருள்கள் கிடைக்கும் வகையில் அந்தக் கடைகள் மட்டும் திறந்திருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று வழக்கம்போல் வெளியே வந்த பொதுமக்கள் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். மேலும் மீன் மார்க்கெட், மட்டன் ஸ்டால் போன்ற கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக தஞ்சை கீழவாசல் பகுதியில் அனைத்துக் கடைகளும் வழக்கம்போல் திறந்து வைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகளும் செயல்பட்டன.

மெடிக்கல் ஷாப் ஒன்றில்
மெடிக்கல் ஷாப் ஒன்றில்

இங்குள்ள மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். காவல் துறையினர் மக்கள் கூட்டமாக சேர வேண்டாம் என வலியுறுத்தினர். `கூடினால் கேடு வரும்; அதனால் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்போம்; கொரோனா வருவதைத் தவிர்ப்போம். இதை அன்பாகச் சொல்கிறோம்' என்றனர்

ஆனால், இதை யாரும் கேட்பதாக இல்லை. இதையடுத்து, காவல்துறையினர் லத்தியைக் கொண்டு மக்களைக் கலைந்து போகக் கூறி வலியுறுத்தினர். அத்துடன் கூட்டம் கூடும் வகையில் செயல்பட்ட கடைகளை அடைக்கவும் உத்தரவிட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூரில் போலீஸார்
தஞ்சாவூரில் போலீஸார்

இதே பிரபலமான மெடிக்கல் ஷாப் ஒன்றில் கொரோனா பரவாமல் தடுக்கின்ற வகையில் இடைவெளி விட்டு கட்டம் வரைந்து அதில் நின்றுகொண்டு அதைக் கடந்து ஒவ்வொருவராக வரும் நபர்களுக்கு மட்டுமே மருந்துகள் தரப்படும் என அறிவித்ததுடன், இதை எங்களுக்காக கடைப்பிடிக்க வேண்டாம் உங்கள் குடும்பத்துக்காக அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதை உணர்ந்த மக்கள் கட்டங்களில் நின்றபடி ஒவ்வொருவராக கடந்து சென்று மருந்துகளை வாங்கிச் சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு