Published:Updated:

``போர்முனையில் இருந்தாலும்..!" -கொரோனா பணி; தமிழக அரசு டாக்டர்களின் 4 கோரிக்கைகள்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று நடவடிக்கைகளில் போர்முனையில் இருந்தாலும் தமிழக அரசிடம் 4 கோரிக்கைகளை அரசு டாக்டர்கள் முன்வைத்துள்ளனர்.

கொரோனா சிகிச்சை பணியில் தமிழக அரசு டாக்டர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுவருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகளில் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழகத்தில் சுகாதாரத்துறைக்குப் பெரும் சவாலாக விளங்கும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழுமனதுடன் வரவேற்கிறது. உலகையே அச்சுறுத்தும் கொடிய கோவிட் - 19 நோய் தொற்றை வேரோடு அழிப்பதற்கு தமிழக அரசுடன் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் அரசு மருத்துவர்கள் இணைந்து செயல்படுவோம் என உறுதியளிக்கிறோம். கொரோனா தொற்று மூன்றாவது நிலையை அடைந்து சமூக தொற்றாக அச்சுறுத்தும் வேளையில் தமிழக அரசுக்கு சில வேண்டுகோள்களை முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

பாதுகாப்பு உடை
பாதுகாப்பு உடை

1. கொரோனா தொற்று நடவடிக்கைகளில் போர் முனையில் இருந்தாலும் எங்களது சமூக பொறுப்பை உணர்ந்து நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து அரசு மருத்துவர்களும் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் கொரோனா தடுப்பு நல நிதிக்கு அளிக்கிறோம்.

2. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் எதையும் எதிர்பார்க்காமல் சேவை செய்து வருகிறோம். சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு மாத கால ஊதியத்தை சிறப்பு ஊதியமாக வழங்க உத்தரவு பிறப்பித்ததை வரவேற்கிறோம். இருந்தபோதிலும் அரசு மருத்துவர்களுக்கு நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றினாலே போதும் என்கிற வேண்டுகோளை முன்வைக்கிறோம்.

3. கொரோனா தொற்று நெருக்கடி நிலையை சமாளிக்க கூடுதலாக 500 மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் அரசு மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் பாதுகாக்கும் என்று அறிவித்திருப்பதைப் பாராட்டுகிறோம். சமீபத்தில் நியாயமான கோரிக்கைகளுக்கு போராடிய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், உதவிப் பேராசிரியர்கள், பெண் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட 118 அரசு மருத்துவர்கள் தண்டனை பணி மாற்றத்தால் தொலை தூரங்களில் அவதியுற்று வருகின்றனர். கொரோனா தொற்று அச்சுறுத்தும் வேளையில் பணியிடங்களுக்குச் சென்று வருவதில் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றனர்.

கொரோனா
கொரோனா

மேலும், உயிர்காக்க வேண்டிய அரசு மருத்துவர்கள் தொலை தூர பயணங்களால் தங்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, 118 அரசு மருத்துவர்களின் நலன்கருதி தண்டனை பணியிடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து அவரவர் சொந்த இடங்களில் பணியமர்த்த வேண்டுமென முதல்வரை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அப்பொழுதுதான் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்களும் ஏனைய அரசு மருத்துவர்களும் அரசின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் பணியாற்றுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். புதிய நியமனம் முன்பு இதைச் செய்ய வேண்டுகிறோம்.

4. கொரோனா தொற்று மூன்றாவது நிலையை எட்டியிருக்கும் இந்தச் சமயத்தில் களப்பணியாற்றும் அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் நலன்கருதி எங்களின் சில வேண்டுகோள்களை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டுகிறோம். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைப்பதைவிட கொரோனா தொற்றுக்கென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் முழுவீச்சில் இயங்கக்கூடிய பிரத்தியேக மருத்துவமனைகளை உடனடியாக அமைத்திடல் வேண்டும்.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தனிமைப்படுத்த ஏதுவாக அவர்களுக்கு தங்கும் விடுதிகள், உணவு, அத்தியாவசியத் தேவைகள் ஏற்பாடு செய்து அவர்களை தனிமைப்படுத்தி அவர்களிடமிருந்து குடும்ப உறுப்பினர்களுக்கும் சமுதாயத்திலும் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறோம்.

உலகத் தரம் வாய்ந்த தனிமனித பாதுகாப்புக் கவசங்களை சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மருத்துவமனை பணியாளர்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்டோரைக் கண்காணிக்கும் களப்பணியாளர்கள் இடைவெளி இல்லாமல் கிடைத்திட வகை செய்ய கேட்டுக்கொள்கிறோம். முறையாக தனிமனித பாதுகாப்பு உபகரணங்கள் நேரடியாக களத்தில் நிற்பவர்களுக்கு சென்றடைகிறதா என்பதை கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், தலைமை மருத்துவர்கள், வட்டார மருத்துவர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசு மருத்துவர்கள் சிலர், ``கொரோனா தொற்று நோய்க்கான சிகிச்சை பணி என்பது சவாலான பணியாக உள்ளது. இன்றைய சூழலில் அந்தப் பணியில் எங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டுவருகிறோம். 7-வது ஊதியக்குழுவில் மத்திய அரசு, மாநில அரசு எம்.பி.பி.எஸ் டாக்டர்கள் 56,100 ரூபாய் அடிப்படை ஊதியத்தில் பணியில் சேருகின்றனர். மாநில அரசு மருத்துவர்கள் 20-ம் ஆண்டின்முடிவில் மட்டுமே துறைசார்ந்த பதவி உயர்வையும் 1,23,0000 ஊதியத்தையும் பெறுகின்றனர். ஆனால் மத்திய அரசு டாக்டர்கள், 13 ஆண்டுகள் பணி முடித்ததும் 1,23,000 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.

கொரோனா சிறப்பு வார்டு
கொரோனா சிறப்பு வார்டு

தமிழக அரசின் டாக்டர்களின் சிறப்பான பணியால் தமிழக சுகாதாரத்துறை இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் இருந்துவருகிறது. மத்திய அரசு எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள், மாநில அரசின் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களின் ஊதியத்தில் முரண்பாடுகள் உள்ளன. அதை வலியுறுத்திதான் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதற்குப் பரிசாக 118 அரசு மருத்துவர்கள் குறைந்தபட்சம் 300 கி.மீட்டரிலிருந்து 700 கி.மீட்டர் தூரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்தப் பணி மாற்றத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தபிறகும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை

அதையெல்லாம் மறந்து தற்போது கொரோனா பணியில் அரசு மருத்துவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுவருகின்றனர். மனநிறைவோடு அரசு மருத்துவர்கள் பணியாற்ற தமிழக அரசு பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கும் நர்ஸ்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குப் போதிய தனிமனித பாதுகாப்புக் கவசங்களை வழங்க வேண்டும். ஏனெனில் உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள் அதிகளவில் இறந்துள்ளனர்.

கொரோனா
கொரோனா

அரசு டாக்டர்கள் நலமோடு இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். எனவே கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரின் நலனிலும் அரசு அக்கறை செலுத்த வேண்டும்" என்றனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் மாநில அளவில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள் எத்தகைய சூழலையும் சமாளிக்கும் வகையில் தயாராக இருந்துவருகின்றனர். அதற்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தி வரும் தமிழக அரசு, மருத்துவர்களின் மனக்குமுறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் முன்வைக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு