Election bannerElection banner
Published:Updated:

`கொரோனா தடுப்புக்கு உபகரணம் தேவை!' -அரசு மருத்துவருக்கு ஆச்சர்யம் கொடுத்த செந்தில் பாலாஜி

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை
பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை

பள்ளப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், உடலின் வெப்பத்தைச் சோதிக்கக் கூடிய கருவிகள்கூட இல்லை என்று சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸைத் தடுக்கும் பொருட்டு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்களை வாங்க தேவையான நிதியை வழங்கும்படி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்குக் கோரிக்கை வைத்தார். இதை ஏற்று தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தை உடனடியாக வழங்கும்படி, மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்திருப்பது வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பள்ளப்பட்டி
பள்ளப்பட்டி
`சிறப்பு வார்டில் 15 பேர்; கண்காணிப்பில் 381!’ -கரூர் நிலவரம் சொல்லும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம், இன்று உலகம் முழுக்கப் பரவி, உலக மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அது பரவ, அதை தேசியப் பேரிடராக இந்திய அரசு அறிவித்துள்ளது. அதோடு, 21 நாள்களுக்கு சுய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியிருக்கிறார்கள். தமிழக அரசு எல்லா மாவட்ட எல்லைகளையும் அடைத்து, சீல் வைத்துள்ளது.

செந்தில் பாலாஜி பரிந்துரை கடிதம்
செந்தில் பாலாஜி பரிந்துரை கடிதம்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், மாநில அளவில் பெரிய பேரூராட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் போதிய மருந்து மற்றும் உபகரணங்கள் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.

இந்தப் பேரூராட்சியில் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் பலரும் வெளிமாநிலங்களில் பணிபுரிந்து, கொரோனா பாதிப்பினால் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார்கள். ஆனால், பள்ளப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லை என்று சொல்லப்படுகிறது. நோயாளிகளின் வெப்பநிலையை சோதனை செய்யக்கூட வசதியில்லை என்கிறார்கள்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

இந்த நிலையில், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுதா, தங்கள் மருத்துவமனைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்களை வாங்க தேவையான நிதியை சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து வழங்கும்படி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜிக்குக் கடிதம் எழுதினார்.

அதைத்தொடர்ந்து, உடனே பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகளை வாங்க, எனது சட்டமன்ற நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தை ஒதுக்கும்படி, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்குப் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியிருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்தச் செயல், பள்ளப்பட்டி மக்களிடம் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

கரூர் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி இப்போதுதான் வந்துள்ளது. இனிமேல்தான் பள்ளப்பட்டி மருத்துவமனைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் நிதி ஒதுக்கி, தேவையான வசதிகளைச் செய்ய இருக்கிறோம்.

மருத்துவரின் கோரிக்கை கடிதம்
மருத்துவரின் கோரிக்கை கடிதம்

மற்றபடி, மற்ற மாவட்டங்களைவிட, இங்கே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாகச் செய்யப்படுகிறது" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு