Published:Updated:

புதுக்கோட்டை: `நாங்க வர மாட்டோம்!’ - சிகிச்சைக்கு மறுக்கும் தொற்றாளர்களால் அதிர்ச்சி

கொரோனா
கொரோனா

கணக்குக் காட்டுவதற்காக என் மனைவிக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று பொய் கூறுகிறீர்கள். அது எல்லாம் எங்களுக்கு வராது. என் மனைவியைச் சிகிச்சைக்கு அனுப்ப முடியாது. மீறி அழைத்துச் சென்றால், விபரீத முடிவு எடுத்துக்கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

உலகம் முழுவதையும் கடும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான் புதுக்கோட்டையில், தற்போது தொற்று பாதிக்கப்பட்ட சிலர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவதற்கு மறுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை: `நாங்க வர மாட்டோம்!’ - சிகிச்சைக்கு மறுக்கும் தொற்றாளர்களால் அதிர்ச்சி

அறந்தாங்கி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை ராணியார் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனை, அறந்தாங்கி அண்ணா அரசு மருத்துவமனைகளில் அனுமதித்துச் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆவணத்தாங்கோட்டையைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்துகொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சென்றனர். அப்போது, அந்தப் பெண் அவர்களுடன் சிகிச்சைக்குச் செல்ல மறுத்துவிட்டார். தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து வலியுறுத்தியும் சிகிச்சைக்குக் கண்டிப்பாகச் செல்ல முடியாது என்று கூறி மறுத்துவிட்டார்.

இறுதியாக ஒருமுறை அழைத்துப் பார்த்திருக்கின்றனர். அப்போது, ``கணவர் வீட்டில் இல்லை. குழந்தைகளை நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். மீறி என்னை அழைத்துச் செல்ல முயன்றால், பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொள்வேன் என்று அவர்களை மிரட்ட வேறு வழியின்றி அனைவரும் திரும்பிவிட்டனர். அதிகாரிகள், பணியாளர்கள் 3 நாளாகப் போராடியும், நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இதேபோல், அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு பகுதியில் 5 பெண்களுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில், 2 பேர் சிகிச்சைக்குச் செல்வதற்காக ஆம்புலன்ஸில் ஏறிவிட்டனர். 3 பேர் சிகிச்சைக்குச் செல்ல மறுத்துள்ளனர்.

புதுக்கோட்டை: `நாங்க வர மாட்டோம்!’ - சிகிச்சைக்கு மறுக்கும் தொற்றாளர்களால் அதிர்ச்சி

இதற்கிடையே, மண்ணெண்ணெய் கேனுடன் வந்த ஒரு பெண்ணின் கணவர், "என் மனைவியைக் கூட்டிச் சென்றால், நான் இங்கேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன். கணக்குக் காட்டுவதற்காக என் மனைவிக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று பொய் கூறுகிறீர்கள். அது எல்லாம் எங்களுக்கு வராது. என் மனைவியை சிகிச்சைக்கு அனுப்ப முடியாது. மீறி அழைத்துச் சென்றால், விபரீத முடிவை எடுத்துக் கொள்வேன்’ என்று மிரட்டியுள்ளார். போலீஸார் சமாதானம் செய்தும் மனைவியை சிகிச்சைக்கு அனுப்பவில்லை அந்தக் கணவர். வேறுவழியில்லாமல், தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் என்று அதிகாரிகள் கூறிவிட்டுச் சென்றுவிட்டனர்.

இதுபற்றி அவர்களின் உறவினர்கள் ஒருவரிடம் கேட்டபோது, "பரிசோதனை எடுத்த பின்பு முறையாகப் பரிசோதனை முடிவு செல்போன் எண்ணுக்குக் கிடைப்பதில்லை. திடீரென மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்ல பணியாளர்கள் வந்து நிற்பதால், அதிர்ச்சியடைந்து போகின்றனர். பாசிட்டிவ் என்று கூட்டிச் சென்ற பின்பு நோயாளிக்கு மருத்துவமனையில், அடிப்படை வசதிகள் ஏதும் முறையாக இருப்பதில்லை, நோயாளிகளை முறையாகக் கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பாலும் எழுகிறது. குறிப்பாக, ஏற்கெனவே சிகிச்சைக்குச் சென்று குணமடைந்து வந்தவர்கள், `நல்லா சாப்பிட்டு வீட்டிலேயே இருந்து ரெஸ்ட் எடுத்தால் எல்லாம் சரியாகிடும்னு சொல்றாங்க’ இது எல்லாருடைய மனதிலும் ஆழமாகப் பதிந்திருச்சு. ஆனாலும், இந்தத் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது. சிகிச்சைக்குச் செல்ல ஒத்துழைப்புக் கொடுப்பதே நலம்" என்றார்.

புதுக்கோட்டை: `நாங்க வர மாட்டோம்!’ - சிகிச்சைக்கு மறுக்கும் தொற்றாளர்களால் அதிர்ச்சி

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, "மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவுடன் கொரோனா உடலில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பாசிட்டிவ் என்றாலும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவர் அறிகுறிகளற்ற குறைந்த பாதிப்பில்தான் இருக்கிறார், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற வேறு எந்த நோய்களும் இல்லை. அவர் வீட்டில், தனி அறை, தனி கழிப்பறை இருக்கிறது. அவரை பார்த்துக்கொள்ள கொரோனா தொற்று இல்லாத நபர் ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்தால், மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின் படி அவர் மருத்துவமனையில் இருக்கத் தேவையில்லை.

வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். அனைவரும் அதுபோன்று எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளாமல், வெளியே சுற்றினால், சமூக தொற்றாக மாறிவிடும். எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு